V2025

செய்தி

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே!

கட்சியில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து, சஜித் பிரேமதாச அவர்களை இந்நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமீயூ முஹம்மது பஸ்மி தலைமையில், ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முதலாவது  விசேட கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை (20.10.2019) மதியம் இடம் பெற்றது.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மக்கள் இன, மத பேதமின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து, அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும், சிங்களவர்கள் ,முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்ற வேறு பாடுகள் இன்றி எல்லோரும் சேர்ந்து அவரை வெற்றி அடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்நாட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரு கட்சியே  ஐக்கிய தேசிய கட்சி. எனவே இக்கட்சி சார்பாக போட்டியிடும் சஜித்தை வெற்றிப்பெற செய்ய நாம்  அனைவரும் ஒன்று திரண்டு, அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். 

குறித்த கூட்டத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட முகாமையாளர் ஜே.பி.கொஸ்தா, அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதின் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டதோடு, சஜித் பிரேமதாசவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வை முன்னாள் அமைச்சர்  ரி.எம்.சுவாமிநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 5

ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்!

போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார்.  ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக  தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இராணுவ நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சுமார் நான்கு தசாப்தங்களாக காட்டிவந்த அக்கறையின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் இராணுவவாத அரசியல் உணர்வுகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்டபோதிலும், அந்த உணர்வுகள் தணிந்தபாடாக இல்லை ; தணிவதற்கு அரசியல்வாதிகள் விடுவதாகவும் இல்லை.விடுதலை புலிகளை அரசாங்கப்படைகள் தோற்கடித்தமைக்கு பிரதான காரணம் போர் நடவடிக்கைகளுக்கு தாங்கள் வழங்கிய அரசியல் தலைமைத்துவமே என்று உரிமை கோரும்  ராஜபக்சாக்கள் அதன் மூலமாக உச்சபட்ச அரசியல் அனுகூலத்தை அடைந்தார்கள் ; சகல தேர்தல்களிலும் பெருவெற்றிகளைக் கண்டார்கள்.போர் வெற்றிக் குதூகலத்தில் சிங்கள மக்களை மிதக்கவிடுவதன் மூலமாக என்றென்றைக்கும் ஆட்சியதிகாரத்தில் தாங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்களது அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் தென்னிலங்கையை இராணுவவாத அரசியல் ஆக்கிரமிக்க வழிவகுத்தன.   

அதன் விளைவாக,  போரின் முடிவுக்கு பி்ன்னர் நடைபெற்ற 2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அவருடன் சமதையாக போர்வெற்றிக்கு உரிமைகொண்டாடக்கூடியவர் என்று தாங்கள் நம்பிய  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அன்றைய எதிரணி கட்சிகள் அவற்றின் பொதுவேட்பாளராக களமிறக்கவேண்டியேற்பட்டது.அதன் மூலமாக ராஜபக்சாக்களுக்கு எதிரான அரசியல் முகாமும் இராணுவவாத அரசியல் வலுவடைய  அதன் பங்களிபைச்செய்தது.ஆனால், அவரால் வெற்றிபெறமுடியவில்லை.        மூன்று தசாப்தகால போரினால்  அவலத்துக்குள்ளான தமிழ் மக்கள் அந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச மீதான வெறுப்பு காரணமாக பொன்சேகாவுக்கு அமோகமாக வாக்களித்தார்கள். தமிழ் மக்கள் எந்தக் காரணத்துக்காக ராஜபக்சவை வெறுத்தார்களோ அதே காரணத்துக்காகவே சிங்கள மக்கள் அவரை அமோகமாக ஆதரித்தார்கள். இவ்வாறாக போர் வெற்றியுடன் நெருக்கமாக  அடையாளப்படுத்தப்படும்  ராஜபக்சாக்கள் 2015 தேர்தல்களில் தோல்வியடைந்து ஆட்சியதிகாரத்தை இழந்தபோதிலும் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்தும் பெரும் ஆதரவைக்கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

சுமார் 10 வருடகால ராஜபக்ச ஆட்சியில் பாரதூரமான ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலவிய போதிலும், தொடர்ந்தும் செல்வாக்குடையவர்களாக விளங்குவதற்கு பிரதான காரணம் போர் வெற்றியின் சூத்திரதாரிகள் அவர்களே என்று பெரும்பான்மையான தென்னிலங்கை மக்கள் நம்புவதேயாகும். ராஜபக்சாக்கள் தங்களது புதிய அரசியல் வாகனமாக மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்துக்குள் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக வெளிக்கிளம்பக்கூடியதாக இருந்ததற்கும் அதுவே காரணமாகும்.         இத்தடவை ஜனதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான கோதாபய ராஜபக்ச களமிறங்கியிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இராணுவவாத அரசியல் மீண்டும் முனைப்படைந்திருக்கிறது. போரின் இறுதிக்கட்டங்களில் பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான அவர் கடந்த இரு வருடங்களாக ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு தன்னை தயார்படுத்தியபோது போரில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரையும் தனது அணியில் இணைத்துக்கொண்டு செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. 

சகோதரரின் ஆட்சிக்காலத்தில் மெய்நடப்பில்  பாதுகாப்பு அமைச்சர் போன்றே செயற்பட்ட கோதாபய இயல்பாகவே போர் வெற்றியை தனது மாபெரும்  சாதனையாக மக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்து வாக்குக் கேட்கிறார். பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துவிட்டது என்று எச்சரிக்கை செய்யும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்யுமாறு கேட்கிறார்.கோதாபய போர் வெற்றிக்கும் இராணுவத்துக்கும் அதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்புக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக தேர்தல் பிரசாரங்களில் அரசியல் விவாதம் இராணுவவாத அரசியல்மயமானதாக முனைப்படைந்திருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, நாட்டின் ஜனாதிபதியாக தன்னால் மாத்திரமே பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். பொதுஜன பெரமுன  அரசியல்வாதிகளும் பிரசாரக்கூட்டங்களில் கோதாபய ஜனாதிபதியாக வராவிட்டால் நாட்டைா ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றுபயங்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.             

அதனால் போர் வெற்றி சுலோகத்தை பயன்படுத்தாமல் ராஜபக்ச முகாமினால் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரங்களைச் செய்யமுடியாது என்பது வெளிப்படையானது. எந்த சட்டத்தின் கீழ் போர் வெற்றியை தேர்தல்களில்  பயன்படுத்தமுடியாது என்று அவர்கள் ஆணைக்குழுவை நோக்கி கேள்வியும் எழுப்புகிறார்கள்.கடந்த  வாரம் செய்தியாளர் மகாநாடொன்றில் கருத்து தெரிவித்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன, " முன்னைய ஜனாதிபதிகளில் எவரினாலும் விடுதலை புலிகளை தோற்கடிக்க முடியவில்லை.உகந்த போர்த்தந்திரோபாயங்களை வகுக்கக்கூடிய பாதுகாப்பு செயலாளர் அவர்களிடம் இல்லாததே அதற்கு காரணம். கோதாபய ராஜபக்சவின் ஆற்றல்மிகுந்த தந்திரோபாயங்கள் இல்லாவிட்டால் விடுதலை புலிகளை தோற்கடித்திருக்கமுடியாது.அதன் காரணத்தினால்தான் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் தோன்றியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களை அவரின் பின்னால் அணிதிரளுமாறு நாம் கேட்கிறோம்.கோதாபயவைப் போன்று தேசிய பாதுகாப்பில் பற்றுறுதி கொண்டவர் வேறு யாருமில்லை.போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தமுடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தடைசெய்யுமானால், விடுதலை புலிகளின்  இராணுவரீதியான தோல்விக்கு  வழிவகுத்த காரணங்களைப் பற்றி நாம்  பேசுவோம் " என்று கூறினார். 

பொதுஜன பெரமுனவினதும் ராஜபக்சாக்களினதும் இத்தகைய பிரசாரங்களுக்கு உறுதியான முறையில் எதிர்வினையாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரசாரங்களிலும் இராணுவவாத அரசியலுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற தனது முதலாவது தேர்தல் பிரசாரப் பேரணியில் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு  தனது தலைமையிலான அரசாங்கத்தில் முன்னாள் இராணுவத்தளபதி ஃபீல்ட் மார்ஷால் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக உறுதியளித்தார். அப்போது மேடையில் இருந்த பொன்சேகா எழுந்து நின்று மக்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது. போரில் இராணுவத்தை வெற்றிக்கு வழிநடத்திய இராணுவத் தளபதி பொன்சேகாவே கோதாபயவை விடவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமிகவும் பொருத்தமானவர் என்றும் சஜித் தனதுரையில் குறிப்பிட்டார். 

அதற்கு பிறகு சஜித்தின் பிரசாரக்கூட்டங்களில் பொன்சேகா முக்கியமான ஒரு பேச்சாளராக இருந்துவருகிறார். கோதாபயவின் பிரசாரங்களில் தேசிய பாதுகாப்புக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இப்போது  சஜித்தின் பிரசாரங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. போரில் இராணுவத்தினரின் வெற்றிக்கு தனது வழிநடத்தலும் தந்திரோபாயங்களுமே காரணம் என்றும் தான் வகுத்த தந்திரோபாயங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய அறிந்திருக்கவுமில்லை  என்றும் பொன்சேகா இப்போது கூறுகிறார். கோதாபய ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் முதன்முதலாக நடத்திய செய்தியாளர் மகாநாடு கடந்தவாரம் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. அதில் ' த இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுவோர் காணாமல் போயிருக்கும்  பிரச்சினை குறித்து கேள்வியெழுப்பியபோது கோதாபயவை நோக்கி ' அந்த நேரத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ' என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த கோதாபய ' இராணுவத்துக்கு நான் தலைமைதாங்கவில்லை. இராணுவத்தளபதியே தலைதாங்கினார் ' என்று பொன்சேகாவின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார். இதை போர் வெற்றிக்கு தானல்ல, பொன்சேகாவே உண்மையில் காரணம் என்று கோதாபய பத்து வருடங்கள் கழித்து   ஒப்புக்கொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்தி சஜித் பிரேமதாசவின் மேடைகளில் பிரசாரம் செய்யப்படுகிறது. 

அந்த செய்தியாளர் மகாநாட்டுக்கு பிறகு பிரசாரக்கூட்டங்களில்  இந்திய செய்தியாளரின் கேள்வியும் கோதாபயவின் பதிலும் தொடர்ச்சியாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.இவ்வாறாக, இரு பிரதான வேட்பாளர்களினதும்  பிரசாரங்களை தேசிய பாதுகாப்பும் இராணுவவாத அரசியலும் சூழ்ந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எஞ்சியிருக்கும் நான்கு வாரங்களிலும் இந்தப் போக்கு  மேலும் தீவிரமடையப்போகிறது. அத்தகையதொரு ஆரோக்கியமற்ற சூழ்நிலை சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான இனவாத அரசியல் கருத்துக்களும் உணர்வுகளும் தென்னிலங்கையில் முழுவீச்சில்  கிளறிவிடப்படும் ஆபத்தை தோற்றுவிக்கும்.அதற்கான தெளிவான அறிகுறிகளை  ஏற்கெனவே காணக்கூடியதாக இருக்கிறது. 

வீ.தனபாலசிங்கம்

 
Comment (0) Hits: 11

கோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து, விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்திருந்தன.
 
இதனையடுத்து, குறித்த கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததென்றும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்களை சந்திக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது? என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு, அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
Comment (0) Hits: 11

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
 
அந்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கமைய அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
 
இந்த குழுவில் ஜனாதிபதி, பிரதமர், புலனாய்வு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
 
கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கியதை அடுத்து அனைத்து சாட்சிப்பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவுக்குழு அறிவித்தது.
Comment (0) Hits: 4

கோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (20) விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கோத்தாபயவிடம் கேள்விகளை எழுப்பக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டத்திற்கு "ஸ்கைப்" தொழில்நுட்பத்தின் ஊடாக கோத்தாபய உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
 
அங்கிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு உதய கம்மன்பில, அலி சப்ரி மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
 
அங்கிருந்து மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த மூன்று பேர் மட்டுமே பதிலளிப்பார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Comment (0) Hits: 8

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்!

ஓய்வு பெற்றுக்கொண்ட இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில், கோத்தாபயவிற்கு ஆதரவான ஓய்வு பெற்ற படையதிகாரிகள், வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஓய்வு பெற்றுக்கொண்ட அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்கள், சிவில் சமூகத்தையும் மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்களையும் அச்சமடையச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விடயம் தொடர்பில். இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளரான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன விளக்கம் அளித்துள்ளார்.
 
கடும்போக்காளர்களுக்கு வாயை மூடிக் கொண்டிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, சரத் வீரசேகர போன்றவர்கள் அண்மைக் காலமாக கடும்போக்குடைய கருத்துக்களை வெளியிடுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவளிப்போரை கொலை செய்ய வேண்டுமென கூறிய மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவிற்கு, பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவியொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு கடுமையான தொனியில் அச்சுறுத்தல் விடுப்போரே கோத்தாபயவின் பக்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment (0) Hits: 13

"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள போதிலும் அக்கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான ஆயத்தங்கள் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது ஸ்ரீ.ல.சு.கட்சியினர் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையே இதற்கு காரணம் என தெரிய வருகின்றது.

ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் (18) கூடியதுடன், அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தயாசிரி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.  இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“ஸ்ரீ.ல.சு.கட்சி, கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து 5000க்கும் அதிக கூட்டங்களை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு மேலாக வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி இன்று தீர்மானித்தது. எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுஜன பெரமுனவின் தோ்தல் பிரசார கூட்ட மேடைகளில் ஏறி, அவர்களோடு இணைந்திருப்பதற்கு நாம் தயாரில்லை. அது பயனளிக்கும் என நாம் நினைக்கவில்லை. எனவே கிராம மட்டங்களில் பிரசாரக் கூட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்" என்றார்.

Comment (0) Hits: 29

'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர! (காணொளி)

சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையானது, தற்போது சில அரசியல்வாதிகளுக்குப் பெரும் பிரச்சினையாகி உள்ளது என்றும், அதன் ஊடாக பெரும் சேற்றுக் குட்டையை உருவாக்கி, தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் நேற்று (19) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் பெயர் மேலே இருப்பது தொடர்பில், பிரச்சினையைக் கிழப்பும் ராஜபக்ஷக்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் பெயர் மேலே இருப்பது மறந்து போயுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான மிகவும் கீழ்த்தரமான முறைகளில் கூட, இனவாதத்தைத் தூண்டும் அரசியல்வாதிகளிடமிருந்து தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய ஒற்றுமையினை எதிர்பார்க்க முடியுமா? என அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

தற்போது நாட்டில் எல்.டி.டி.ஈ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் இல்லை என்றும் இருப்பது இனங்களுக்கிடையில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக தோன்றியுள்ள பாதுகாப்பற்ற நிலை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதனடிப்படையில்,  அந்த பாதுகாப்பற்ற நிலையினை இல்லாமலாக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரே வேலை, இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதே என்றும் ஜே.வி.பியின் தலைர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

Comment (0) Hits: 11

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு!

யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்முறையாக நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் தலைவராக இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நகர சபைக்கு தேர்வான எஸ்.விஜயகாந் சஜித்திற்கு ஆதரவு வழங்கி உள்ளார்.

முற்போக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடங்கி 5 வருடத்திற்குள், 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பிரதேச மற்றும் நகர சபையில் 16 ஆசனங்களை பெற்று வெற்றிபெற முடிந்தது. உள்ளூராட்சி சபை மந்திரிகள் 16 பேரைக் கொண்ட மந்திரிகள் கலந்துகொண்டதோடு, முழு கட்சியினதும் முடியுமான ஆதரவை வடக்கு மாகாண மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் களத்தில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி இறங்குவதாக சஜித் அவர்களுடனான நேரடி பேச்சு வார்த்தையில் கூறப்பட்டது.

அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தலைவர் கங்காதரன் உள்ளிட்ட இன்னும் சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் குழுவினரும் சஜித் அவர்களை ஜனாதிபதி ஆக்குவதற்கு ஏகமனதாக சம்மதம் தெரிவித்தனர்.

பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரனவின் பெரும் முயற்சியில் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் மாத்திரம் 30 க்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட அமைப்பாளர்கள் சஜித்துடன் நேரடியாக இணைந்துள்ளனர். அந்த சந்திப்பில் ஏற்படுத்திகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் சஜித் அடையப்போகும் வெற்றயில், மாபெரும் வெற்றியாக கிழக்கு மாகாண வெற்றி அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Comment (0) Hits: 10

ஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி!

ஊழல், மோசடிகள், குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக சர்வகட்சிச் சபையொன்றை அமைத்து அதனை ஜனாதிபதி செயலணியுடன் இணைத்து இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்தார்.

எனக்கு எந்தத் தரப்பினருடனும் முரண்பாடு கிடையாது. நாட்டை சரியான திசையில் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்காகும். நான் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை என்ற அவர், தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நேற்று மாலை (18) நடைபெற்ற வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடனான இரண்டு மணி நேர சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது வர்த்தக சமூகத்தவர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான ஒரு நேரடிச் சந்திப்பாகவும் கேள்வி பதில் கலந்துரையாடலாகவே அமைந்திருந்தது.

அங்கு முக்கியமானதொரு கேள்விக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச,

"முதலில் நாட்டில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும். குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அண்மைக் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஓரளவு குறைவு காணப்பட்டாலும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் இன்னமும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதில் நான் பதவிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டங்களை மீறிச் செயற்படுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டமுடியாது. நாட்டை சுபீட்சமுள்ளதாக புதிய இலங்கையாக உருவாக்கும் எனது திட்டத்துக்கு தடைக்கல்லாகவிருக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை.

நாட்டின் முதுகெலும்பு பொருளாதாரம். அந்தப் பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடியவர்கள் வர்த்தக சமூகத்தினர். வர்த்தக சமூகம் சரியான இலக்கில் வழிநடத்தப்பட்டால் நாட்டை ஒரு செழிப்பான வளமுள்ள நாடாக உருவாக்க முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் சர்வாதிகாரிபோல் நடந்துகொள்ளப் போவதில்லை. எமது நாட்டின் வர்த்தகத்துறை திறமையை சர்வதேசம் அங்கீகரிக்கும் விதத்தில் அவசியமான திட்டங்களை வகுத்து செயற்பட விரும்புகின்றேன்.

அத்துடன், பொருளாதார அபிவிருத்திக்கு எவ்வாறான வழிவகைகளை முன்னெடுக்க முடியுமோ அதற்கான நிகழ்ச்சி திட்டமொன்றை தயாரிப்பதற்காக நான் அமைக்க உத்தேசித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி சபைக்கு வர்த்தக சமூகத்தினரின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள்.

இங்கு ஒரு வர்த்தகப் பிரமுகர் ஆலோசனை வழங்கும் விதத்தில் பேசமுற்பட்டபோது நிகழ்ச்சியை வழிநடத்தியவர், அதைத்தடுத்த போது, சஜித் பிரேமதாச அவரைத் தடுக்க வேண்டாம் பேச விடுங்கள் என்று கூறினார். அவர் பேசி முடித்ததும் பதிலளித்த சஜித் பிரேமதாச, நீங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு நான் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பேன்.

ஆனால், இதே யோசனையை நீங்கள் எதிர்த்தரப்பினரிடம் தெரிவிக்க முற்பட்டால் நீங்கள் இந்த ஹோட்டலிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வாசலில் வெள்ளை வான் நிற்கும். நான் ஜனநாயகத்தை மதிக்கின்றவன். எந்தப் பிரச்சினைக்கும் முகங்கொடுக்கக்கூடிய ஆளுமை என்னிடம் இருக்கின்றது. அது எனது தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்" என்றார்.

Comment (0) Hits: 6

ரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள, அணிக்கு பத்து ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ரி 10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டிகள் மீதான அவதானம் இரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்து வருகின்றது. அதிலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் ரி 10 போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பான போட்டித் தொடராக மாறியுள்ளது.

இந்த நிலையில், இம்முறை நடைபெறவுள்ள ரி10 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தது. இதில், கடந்த வருடம் இலங்கை அணியின் 6 வீரர்கள் ரி 10 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், இம்முறை 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் பெரரா ஆகியோரும் அணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

லசித் மாலிங்க, தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய மூன்று வீரர்களும் மரதா அரேபியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து, நிரோஷன் டிக்வெல்ல டீம் அபுதாபி அணியிலும், திசர பெரேரா பங்ளா டைகர்ஸ் அணியிலும், பானுக ராஜபக்ஷ டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் மற்றும் குசல் பெரேரா டெல்லி புல்ஸ் ஆகிய அணிகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ரி 10 தொடரில் டீம் ஸ்ரீலங்கா அணி விளையாடிய போது, பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் குறித்த தொடரில் விளையாடியிருந்தனர்.

அதன்பின்னர், கடந்த ஆண்டு லசித் மாலிங்க, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா மற்றும் தசுன் ஷானக ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கடந்த வருடம் கராச்சியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான இம்முறை எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 10

சவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல

சவூதி அரேபியாவின் மதீனா மாகாணத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்று டிரக் வண்டியில் மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அரபு மற்றும் ஆசிய யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றே கடந்த புதன்கிழமை இரவு அல் அகால் சிறு நகரில் கனரக வாகனத்தில் மோதி இருப்பதாக சவூதி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மக்காவில் இருந்து மதீனாவை இணைக்கும் வீதியிலேயே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அல் ஹம்னா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதோடு விபத்துக் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கோர விபத்தில் பஸ் வண்டி உருக்குலைந்ததுடன், தீப்பிடித்தும் எரிந்ததாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து ஏற்பட்டவுடன் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த பயணிகளால் வெளியேற முடியவில்லை. சிலர் மட்டுமே காயத்துடன் தப்பியதால் இந்த மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சவூதியில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களும் இருப்பதோடு, இவர்கள் உம்ராஹ் கடமைக்காக சென்றவர்கள் என்று சவூதியின் ஓகாஸ் செய்திப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் எண்ணெய் லொரி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பிரிட்டன் யாத்திரிகர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

2017 ஜனவரியில் மக்கா யாத்திரைக்குப் பின், மதீனாவுக்கு திரும்பும் வழியில் சிறு பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு மாதக் குழந்தை உட்பட ஆறு பிரிட்டன் நாட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 4

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு?

ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம். இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம்.

ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ஜனநாயகம் தப்பாது.

கோத்தாபய தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையில்  நிற்கும் ஒருவர் -தனது சகோதாரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியுள்ளார்.2015 இல் முடிவிற்கு வந்த மகிந்தராஜபக்சவின் நீண்ட கால ஆட்சியின் குணாதியசங்களாக குடும்ப  ஆட்சி காணப்பட்டது.நான்கு சகோதரர்கள் அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன்,பொது நிதியில் 80 வீதத்தினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை மெல்லமெல்ல அதிகரித்ததன் மூலம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளையும் யுத்த குற்றச்சாட்டுகளையும் சந்தித்த அரை சர்வாதிகார ஆட்சியை மகிந்த உருவாக்கினார்.

மேலும் மகிந்தவின் சீனா ஆதரவு கொள்கை இலங்கையில் சீனா தனது செல்வாக்கை மிகவேகமாக பரப்புவதற்கு உதவியது.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட கடன்கள் காரணமாகவே இந்து சமுத்திரத்தின் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிசேன சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார்.

இது ஹொங்கொங் விட்டுக்கொடுக்கப்பட்ட விதத்தில் அமைந்திருந்தது.

கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரின் கறைபடிந்த பாரம்பரியத்திற்கு மீண்டும் புத்துயுர் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இலங்கையின் ஜனாதிபதியாவதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தவேளை இழைத்த யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவில் காணப்படும் வழக்குகளில் இருந்து அவர் விடுபாட்டுரிமையை பெற்றுக்கொள்வார்.

இலங்கையின் 25 வருடகால யுத்தம் 2009 இல் முடிவிற்கு வருவதை மகிந்தராஜபக்ச மேற்பார்வை செய்தார். ஆனால் அவர் சமாதானத்தின் முகவர் இல்லை.

யுத்தத்தின் இறுதி வருடங்களில் அப்பாவி பொதுமக்கள் -மனிதாபிமான பணியாளர்கள் -ராஜபக்ச  குடும்பத்தின்  அரசியல் எதிரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயினர் அல்லது சித்திரவதை செய்யப்பட்டனர்.

மேலும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி இராணுவதாக்குதல் என்பது சர்வதேச சட்டங்களின் மீது  மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் என ஐநா தெரிவித்துள்ளது.இதன்போது 40,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கள் சரணடைந்தவேளை அவர்களை சுட்டுக்கொல்லுமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டார் என யுத்த கால இராணுவதளபதி  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிகளவிற்கு இந்துக்களான தமிழர்கள் மீது பாரிய கொடுமைகளை இழைத்தபோதிலும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் கதாநாயகர்களாக மாறினார்கள்.

இது பல்லின தேசமென்ற என்ற இலங்கையின் அடையாளத்திற்கு பதில் ஒரு இனத்திற்கான தேசமென்ற அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான துணிச்சலை மகிந்தராஜபக்சவிற்கு வழங்கியது.

இந்த அணுகுமுறையை கோத்தாபய ராஜபக்ச நிச்சயமாக புதுப்பிக்கப்போகின்றார், எனினும் இந்த அணுகுமுறை இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு காரணமாக அமைந்த இனங்களிற்கு இடையிலான பதட்டத்தை குறைப்பதற்கு உதவப்போவதில்லை.

சமீபத்தில் இலங்கையில் சிங்களவர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் இடையில் பதட்டம் உருவாகியிருந்தது,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இந்த பதட்டநிலை பலமடங்காக அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் மாத்திரமல்ல,முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சனத்தொகையில் சிறிய அளவினராக காணப்படும் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமியதாக்குதலாகும்.

ஆனால் இவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்த எதிhவுகூறல்கள் வெளியாகமலிருக்கவில்லை.

இலங்கையில் உடனடி தாக்குதல் இடம்பெறலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்திருந்ததுடன் தாக்குதலில் ஈடுபடக்கூடியவர்கள் குறித்த விபரங்களையும் பாதுகாப்பு மற்றும் பொலிஸாரிற்கு வழங்கியிருந்தனர் என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் தனக்கு அந்த எச்சரிக்கை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் சிறிசேனவின் சதிப்புரட்சி முயற்சியின் இலக்காக காணப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் இந்த எச்சரிக்கைகள் குறித்து அறியவில்லை என தெரிவித்திருந்தார்.

ராஜபக்சாக்கள் இஸ்லாமிய குண்டுதாக்குதல்களை ஏற்கனவே சிங்களபௌத்த தேசியவாத உணர்வுகளை தீவிரப்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய தீவிரவாதத்தை நசுக்குவதற்காக இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பினை பலப்படுத்துவேன் பொதுமக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீற அறிமுகப்படுத்துவேன் என கோத்தாபய ராஜபக்ச தனது ஆதரவாளர்களிற்கு ஏற்கனவே வாக்குறுதி வழங்கியுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் இன்னமும் தீவிர நம்பிக்கை கொண்டுள்ள யுத்த குற்றவாளியொருவர் இலங்கையின் ஜனாதிபதியாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவவது சிறுபான்மை குழுவினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சிவில் உரிமை ஆர்வலர்களிற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இன்னமும் கவலையளிக்ககூடிய செய்திகளும் உள்ளன.கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் சீனாவுடனான உறவுகளை அவர் புதுப்பிப்பார் என அவரது முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மும்முரமான கடல்பாதைக்கு அருகே இலங்கை உள்ளதால் அவரின் இந்த உறுதிமொழிகளின் தாக்கம் இலங்கைக்கு அப்பாலும் எதிரொலிக்ககூடியதாக காணப்படுகின்றது.

சீனாவிற்கும் இந்தோ பசுபிக்கின் ஜனநாயக வல்லரசுகளிற்கும் இடையிலான கடல்சார் மோதலில் இலங்கை ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கலாம்.இந்து சமுத்திரத்தின் முக்கிய கடற்பாதைகளில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் வர்த்தக கட்டுமானங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவை சுற்றிவளைக்கும் தந்திரோபாயத்தை சீனா பின்பற்றுகின்றது.

சீனா ஜனாதிபதி தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின்  மையம் என வர்ணித்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மிகவும் பெறுமதியான முத்து ஆகும்.

 சீனா ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டம் குறித்து சர்வதேச அளவில் அவநம்பிக்கை உண்டாகியுள்ள இந்த தருணத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் இலங்கையில் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றமை சீனாவிற்கு மிகவும் இனிப்பான செய்தியாகும்.சீனா இலங்கையை தனது இராணுவ தளமாக மாற்ற எண்ணியுள்ளது.

ஆனால் ஏனைய அனைவருக்கும் இது மோசமான செய்தியாகும்.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாவது அவரது சகோதரரின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்கனவே தாமதமாகியுள்ள நீதி கிடைக்காமல் தடுக்கப்படுகின்ற நிலையை உருவாக்கும்.

இன மற்றும் மத அடிப்படையிலான பதட்டங்களை அதிகரிக்கும்,அத்துடன் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா மேலாதிக்கத்தை பெறும் நிலையை உருவாக்கும்.

இலங்கையின் ஜனநாயகம் முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகம் பாதிக்கப்படக்கூடியதாக காணப்படுகின்றது.

பிரஹ்மா  செல்லானி 

( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்)

தமிழில் ரஜீபன்

Comment (0) Hits: 7

'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் இதனை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் 22 கம்பனிகளும் அறிவிக்குமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். இது தேர்தல் வாக்குறுதி மாத்திரமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸணன் தெரிவித்தார்.

´அனைவரும் ஒன்றாக செல்வோம்´ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்யும் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா வாசிகசாலை மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி சிவஞானம், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஜனார்த்தன், மலையக தொழிலாளர் முன்னணியின் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

39 வருடங்களின் பின்பு யாழ்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழும் அரசகரும மொழி என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இனவாதம் பேசி தமிழர்களின் வாக்குகளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும தங்களுக்கு தேவையில்லை. என்ற நிலைபாட்டில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது. என்பது தெளிவாக அறியக்கூடியதாக உள்ளது.

வடக்கில் இருக்கின்ற ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து 13 அம்ச கோரிக்கையை தயாரித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் எதிர்காலத்தில் பிரதான வேட்பாளர்கள் உடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்திருக்கினறார்கள்.

ஆனால் ஒரு சிலர் 13 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதாகவும் ரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திட பட்டுள்ளதாகவும் பொய்யான தகவல்களை ஊடாகத்திலே வெளியிடுகின்றனர்.

இது முழுமையாக ஒரு இனவாத செயல்பாடாகவே பார்க்க வேண்டும் இதனை தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 15

'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களுடன் ஆரம்பிக்கும் விசாரணை படிப்படியாக ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் நடத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

யாழ்.யூ.எஸ் ஹோட்டலில் (17) மாலை செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் காட்டப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு என ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர்,

"முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கொலை தொடர்பில் நடந்த விசாரணைகளில் ஏற்பட்ட திருப்பத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்துவோம்" என்றார்.

இந்த ஆட்சியின் போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு சம்பவமாகத்தான் விசாரணைகளை நடத்த வேண்டும். முழு காவல்துறையையும் இந்த விசாரணைகளுக்காக ஈடுபடுத்த முடியாதுள்ளது என்றார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், குறிப்பாக கடத்தப்பட்டு உயிரிருடன் மீண்ட, உயிருள்ள சாட்சியாக தமிழ் ஊடகவியலாளர்கள் இருக்கும் போதிலும், அரசியல் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த முடியாமல் உள்ளதற்கு என்ன காரணம்?

பதிலளித்த பிரதமர்,

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவோம். முதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை ஆரம்பிப்போம் என்றார்.

Comment (0) Hits: 14

கோத்தாபய கைது செய்யப்படுவதைத் தடுத்ததாக முன்னாள் நீதி அமைச்சர் ஏற்றுக் கொண்டார்!

கடந்த ராஜபக்ஷ அரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகளுக்கு மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்தியதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீது, அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவரது வாயினாலேயே நேற்று (18) ஏற்றுக்கொண்டார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தான் தடுத்ததாகத் தெரிவித்தார்.

கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த கோத்தாபய ராஜபக்ஷவை சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவே என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்  மார்சல் சரத் பொன்சேகா அந்நேரம், தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்திருந்தார்.

கடந்த ஆட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களும் விஜேதாச ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தியிருந்ததோடு, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.  இதனையடுத்து அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமரின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டதோடு அந்நேரத்திலிருந்து அவர் அரசாங்கத்துடன் முரண்பாட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், விஜேதாச ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்குவதாகவும்,  நாடு முழுவதிலும் சென்று கோத்தாபயவின் வெற்றிக்காகப் பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறிருந்த போதிலும், இவர் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற பிரதமர் மாற்றத்தின் போது, பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காத பலவந்தமான அரசாங்கத்தில் விஜேதாச ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கியதோடு அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 8

எக்காரணத்திற்காகவும் அநுர விலகப் போவதில்லை! - பெசிலின் இரண்டாம் விருப்பு வாக்கு கெஞ்சல்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா எக்காரணத்திற்காகவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்த ராவய பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.  கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடித்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்காக போட்டியிலிருந்து விலகுமாறு அநுர குமார திசாநாயக்காவிடம் ஐக்கிய தேசிய முன்னணி தரப்பினர் கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என ராவய பத்திரிகை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர குமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகுவதற்கோ, அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக சஜித் பிரேமதாசாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு மக்களிடம் கோருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் எதனையும் பேசுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராக இல்லை என்றும் விஜித ஹேரத் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்குமிடையில் எந்தவித மாற்றங்களையும் காண முடியவில்லை என்றும்,  எவராவது கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக அநுர குமார திசாநாயக்கா போட்டியிலிருந்து விலக வேண்டும் என எதிர்பார்த்து கோரிக்கை விடுத்தால்  அவர்களுக்கு கூற வேண்டியிருப்பது கோத்தாபயவை தோற்கடிக்க வேண்டுமாயின் சஜித் பிரேமதாசா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்றேயாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களிடத்தில் தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்ததாகவும், தமது கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிப்பார்கள் என்றும், மொட்டு கட்சிக்கு 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது என்பது அவர்கள் தெரிந்திருக்கின்றார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கா கூறியுள்ளார்.

 
Comment (0) Hits: 10

தமிழீழம் உருவாவதைத் தடுக்கவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்தோம் - சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்திருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும். அதன் மூலம் தமிழீழம் உருவாவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயற்பட தீர்மானித்தோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்திருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக மத்திய கேந்திர நிலையத்தில் இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு வழங்கப்போவதென்று, இன்னும் உத்தியோகபூர்வமாக அந்த கட்சி அறிவிக்கவில்லை. என்றாலும் கூட்டமைப்பு 13 கோரிக்கைகளை தயாரித்து அந்த கோரிக்கைகளை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்போவதாக தெரிவித்திருக்கின்றது.

இவர்களின் கோரிக்கைகளுக்கு நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எந்த கட்சிக்கும் இணக்கம் தெரிவிக்க முடியாது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்க இருக்கும் கோரிக்கைகள் குறித்து, கலந்துரையாடுவதற்கு கூட நாங்கள் தயாரில்லை என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஆனால், கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கின்றார். ஆனால், சஜித் பிரேமதாச  இதுதொடர்பாக எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

மேலும் ஒரு வேட்பாளர் ஒரு நாடு, இரண்டு வேட்பாளர் நியமித்தால் நாடு பிளவுபடும் என்றே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பம் முதல் தெரிவித்து வந்தது. அதனடிப்படையில், நாடு பிளவுபடுவதை தடுக்கும் நோக்கத்திலே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

Comment (0) Hits: 11

பக்கம் 1 / 54