V2025

அலரி மாளிகையில் விசேட சந்திப்பு! நெருக்கடித் தீர்வு கிட்டுமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாளை (09) முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்காக அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பு நாளை (09) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் இதில் என்ன விடயம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது என்பது தொடர்பில் தெளிவில்லை எனவும் ஆனால் அனைத்து உறுப்பினர்களும் கைச்சாத்திடும் மகஜர் ஒன்று தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை விரைவாக கூட்டுமாறு வலியுறுத்தி கடிதம் ஒன்று பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்தை பெறும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது.

அஜித் பி பெரேரா, எரான் விக்ரமரத்ன, சுஜவ சேனசிங்க மற்றும் நளீன் பண்டார ஆகிய அமைச்சர்களால் இந்த மகஜர் தயாரிக்கப்பட்டு தற்போது கையெழுத்து பெறும் செயற்பாடு இடம்பெறுகின்றது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் 77 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குறித்த மகஜரில் கையொப்பம் இட்டுள்ளதுடன், குறிப்பாக அதில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கையொப்பம் இட்டதாகவும் தெரியவருகிறது.

பிரதமரின் கடுமையான தீர்மானம்!

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பணிகள் புதிய கூட்டணி அமைத்த பின்னரே இடம்பெறும் எனவும், அது தொடர்பில் அண்மையில் சஜித் பிரேமதாசவை தனியாக சந்தித்து எடுத்துரைத்தாக பிரதம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னரே புதிய கூட்டணி உருவாக்கப்படும் என கூறிவருகின்றனர்.

முதலில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து அறிவிக்க வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுஜிவ சேனசிங்கவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found