V2025

ஐ.தே.க.வில் பொது வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நிலை தொடர்கிறது

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார். அதில் எந்ததொரு மாற்றமும் இல்லையென அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மொரட்டுவ பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

''நாம் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. மேலும் எமது கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கென ஒரு அமைப்பு உள்ளது. அத்துடன் கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அதனடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்போம். ஐக்கிய தேசியக் கட்சியிலேயே ஜனநாயகம் எப்போதும் உள்ளது” என எரான் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாசவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது எனவும் கட்சிக்குள்ளும் சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தவர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், கட்சித் தலைமைப் பதவியைக் காத்துக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம், ஐக்கிய தேசியக் கட்சியில் வேறொருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு, அந்த நபர் வெற்றிபெறும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு (கட்சியின் யாப்புப்படி) அந்த நபருக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே, தன்னைத்தவிர ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ரணில் விக்ரமசிங்க தயார் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே, குறிப்பாக சஜித் பிரேமதாசவையே களமிறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கருதி வருகின்றனர்.

எனினும். அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய, நவீன் திசாநாயக்க, ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலை நீடிக்கிறது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found