V2025

U டேர்ன் எடுத்த ராஜித்த : மக்கள் வேட்பாளர் நிறுத்தப்படுவார்!

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தரப்பில் எந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும், கிராம மக்கள் கோரும் வெற்றி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மத்துகம - அளுத்கம நகரில் நடந்த நிகழ்வொன்றில் நேற்று (09) கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி ஆர். பிரேமதாச, டி.பீ.விஜேதுங்க ஆகிய தலைவர்களை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2018 ஆண்டைவிட விரிவான கூட்டணியொன்று அமைக்கப்படும் எனவும், இந்தக் கூட்டணி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெறும் எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி யாப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் இதனை எதிர்த்திருந்தனர். இதன்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன செயற்பட்டிருந்தார். அத்துடன், சஜித் பிரேமதாச களமிறக்கப்பட வேண்டும் என அந்தக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரியிருந்த போதிலும், ராஜித்த சேனாரத்ன தரப்பினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மக்கள் கோரும் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டமொன்று நேற்று (09) அலரி மாளிகையில் நடந்துள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டுமெனக் கோரி, ஐந்து லட்சம் கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றைத் தயாரிப்பதற்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமும் இந்தக் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த போதிலும், மாகாண சபை உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லையென கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு, குருணாகல், காலி மாவட்டங்களில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்தக் கூட்டத்தின் இடைநடுவில் ரணில் விக்ரமசிங்கவும் பங்கெடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துபேசிய போது, மக்கள் விருப்பும், கட்சி ஆதரவாளர்கள் விரும்பும் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ராஜபக்ச தரப்பினரைத் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து வெளிப்பட்டுளளது.

இதேவேளை, பிரதான கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னர், அவர்களின் கொள்கைகள், வெற்றிபெறும் வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்கப்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

'இதில் முக்கியமாக வெற்றிபெறும் சக்தி'' என்ற விடயம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனையே ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச தரப்பினரும் முன்வைக்கின்றனர். வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த வேட்பாளராக இருக்க முடியாது என ஆதரவாளர்கள் கருதுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தவர் ஒருவர் தெரிவித்தார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found