தனது தேர்தல் பணிகளின் போது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சூழலைப் பாதுகாக்க முக்கியத்துவம் வழங்கப்படமு; எனவும் பொலிதீன் மற்றும் ப்ளாஸ்டிக் ஆகியன முற்றாக தவிர்க்கப்பட்டு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படும் எனவும் ராஜபக்ச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்த செயற்பாடு ஏனைய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என மொட்டுக் கட்சி மாநாட்டின் போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கோதாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
கோதாபய ராஜபக்சவின் முதலாவது வாக்குறுதியை மீறும் வகையில் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் கோதாபய ராஜபக்சவின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 11ஆம் திகதி மாலை நடைபெற்ற மொட்டுக் கட்சியின் தேசிய மாநாட்டில் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்போது பேசிய கோதாபய ராஜபக்ச உரையாற்றியிருந்தார். அந்த உரையில்,
'இந்த நன்நாளில் நான் உங்களிடம் வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன். இலங்கையில் மற்றுமொரு வகையிலான புரட்சியை இன்று நாம் ஆரம்பிக்கிறோம். இதனை மையப்படுத்தி முன்னெடுககப்படும் தேர்தல் பிரசாரங்களை மிகவும் கௌரவமான முறையில் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் அமைக்கப்பெற்ற பின்னர் நடந்துகொள்ளும் விதத்தையே நாம் பின்பற்ற வேண்டும். ஆதலால் எமது ஒட்டுமொத்த தேர்தல் பணிகள், ஒழுக்கமாகவும், சட்டரீதியாகவும், நியாயமான முறையில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் பணிகளில் சூழலைப் பாதுகாக்க முக்கியத்துவம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக், பொலிதீன் ஆகியவற்றை முற்றாக தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கும் நாம் முன்னுதாரமாக திகழ்வோம்'' என்று கோதாபய தெரிவித்திருந்தார்.
24 மணி நேரம் செல்ல முன்னரே வாக்குறுதிகள் காற்றில் பறந்தன
கோதாபய ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டு 24 மணி நேரம் செல்ல முன்னர், அதாவது 11ஆம் திகதி இரவு கொழும்பு உள்ளிட்ட புறநகர் பிரதேசங்களில் கோதாபய ராஜபக்சவின் பெருமளவிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன.
இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் சிங்கள இளைஞர்களின் பேசுபொருளாகவும் மாறியிருந்தது. எனினும், அதிகாரத்திற்கு வந்த பின்னர் இவ்வாறான பதிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்புக்களின் நிலை பரிதாபத்திற்கு உள்ளாகும் என்று எச்சரிக்கப்படுகிறது.
கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், கருத்து சுதந்திரம் முற்றாக முடக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரவேண்டியிருக்கும் என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை என்பதை யாரும் மறந்துவிட முடியாது.