V2025

"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" நடமாடும் சேவை தம்புள்ளையில்!

"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" இரண்டாவது நடமாடும் சேவை, ஆகஸ்ட் 24 - 25 ஆம் திகதிகளில் தம்புள்ள, பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறவுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நிதியமைச்சினால் இன்று (22) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

தொழில் முயற்சியாளர்களுக்கான வட்டி நிவாரண கடன்களை வழங்கும் "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" இரண்டாவது நடமாடும் சேவை, ஆகஸ்ட் 24 - 25 ஆம் திகதிகளில் தம்புள்ள பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறவுள்ளது

காலை 7.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் 2019 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக, ஒரு இலட்சம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், நிதியமைச்சினால் துரிதமான விரிவாக்கப்பட்ட ஒரு செயற்திட்டமாக, இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுயதொழில், வியாபாரம், கைத்தொழில் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கும் சுயதொழில்முயற்சியாளர்களான இளைஞர் சமுதாயத்துக்கு, நிவாரண வட்டி விகிதத்தில், அடிப்படை மூலதனம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதே என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

தம்புள்ளையில் நடைபெறும் இந்த நடமாடும் சேவையின் ஊடாக, வியாபாரம் ஒன்றை அல்லது கைத்தொழில், விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் நபர்களுக்கு, வங்கி மூலம் மூலதன நிதியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கிகளினூடாக கடன் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வணிக திட்டங்களை தயாரிப்பதற்கு ஆலோசனைகளை பெற்றுகொண்டு, அன்றைய தினமே, குறிப்பிட்ட வியாபாரம் தொடர்பில், அவர்களது திட்டங்களை வங்கிக்கு சமர்ப்பிக்க தேவையான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆகையால், கடன் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பவர்கள், தமது வியாபாரம் தொடர்பிலான அடிப்படை தகவல்களை எடுத்துக்கொண்டு வரவேண்டுமென ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளின் நடமாடும் சேவை அலுவலகங்கள் இங்கு காணப்படும் அதேவேளை, பல்வேறு கடன் ஆலோசனை திட்டங்களுக்கு தேவையான ஒப்புதல்கள், அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளின் அலுவலகங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்காக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் காரியாலயம் ஒன்றும் இந்த நடமாடும் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

விவசாய பிராந்தியமான தம்புள்ளை, சுற்றுலாத்தளத்தை ஈர்க்கக் கூடிய பிரபலமான பிரதேசமாக காணப்படுவதால், சுற்றுலா தொடர்பான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் அனுமதியை, சுற்றுலா அபிவிருத்தி சபையிடமிருந்து பெற்றுக்கொண்டு, தமது வியாபார நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க இந்த நடமாடும் சேவை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

 எம். அலி ஹசன்,

செய்திப் பணிப்பாளர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found