V2025

முஸ்லிம்களைக் காட்டிக்கொடுத்து மஹிந்தவுடன் டீல் அடிக்கும் முஸம்மில் ஹாஜியார்!

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் மூலமாக அரசியலுக்குள் நுழைந்து, அவரது ஆட்சியில் கூட்டுத்தாபனங்களின் தலைவராக பதவி வகித்து, பல்வேறு சுகபோகங்களை அனுபவித்தவர்தான் முன்னாள் மேயர் முஸம்மில் ஹாஜியார்.

ஐக்கிய தேசிய கட்சியில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்து, கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பல அரசியல் நலன்களை பெற்று வாழ்ந்து வந்த இவரின் மேல் நம்பிக்கை கொண்டே பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரை கொழும்பு மாநகரசபை மேயர் ஆக்கினார்.

இந்த மேயர் பதவியை முஸம்மில் ஹாஜியார் வானத்திலிருந்து பெற்றுவிடவில்லை. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தபோது, இடையில் வேறு சில கட்சிகளுக்கு தாவிவிட்டு பின்னர், மீண்டும் இவர் கட்சியில் வந்து சரணடைந்த போது, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவரை அரவணைத்தே மேயர் வேட்பாளர் ஆக்கினார். இவர் மேயராவதற்கு கொழும்பு மாவாட்டத்தில் உள்ள ஐ.தே.க ஆதரவாளர்கள், தொண்டர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதமின்றி வயோதிபர்களும் இளைஞர்களும் பெண்களும் அவரின் வெற்றிக்காகவும் கட்சியின் வெற்றிக்காகவும் இரவு, பகலாக உழைத்தனர். மேயர் பதவி காலாவதியானதன் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரை நல்லாட்சி அரசாங்கத்தின் மலேசிய தூதுவராக அனுப்பி வைத்தார். எனினும், மலேசிய தூதுவர் பதவிக் காலம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய முஸம்மில் ஹாஜியார், உண்மையில் தனது தாய் கட்சிக்காக உழைத்திருக்க வேண்டும். எனினும், அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, மத்திய சூழல்அதிகார சபையின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டு பதவி வகித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அதுரலியே ரத்தன தேரர் உள்ளிட்டோர், பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இனவாதத்தை தூண்டும் வகையில் நாடகமாடத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு எதிராக எண்ணற்ற பிரசாராங்களை கட்டவிழ்த்துவிட்டனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்து அரங்கேற்றிய நாடகம் சிங்கள, முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது. இதன் காரணமாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், கட்சி பேதங்களை மறந்து, தமது பதவிகளை தூக்கியெறிந்தனர். சமூகத்தை காப்பாற்றவே அவர்கள், தமது பதவிகளை துறந்தனர். முஸ்லிம் சமூகம் ஒற்றுமையை வெளிக்காட்டி ஒன்றுபட்டபோது, சர்வதேசமும் உள்நாடும் கதிகலங்கியது. எனினும், முஸம்மில் ஹாஜியார் சமூகத்துக்கு மாற்றமாக, அசாத் சாலியின் மேல்மாகாண ஆளுநர் பதவியை பின்கதவால் பெற்றதுடன் கதிரையில் அமர்ந்தார்.

மேலும், ஐ.தே.க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருப்பது, இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலை எடுத்துக்காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து முஸம்மில் ஹாஜியாரும், தனது ஆதரவை கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.   

ஜானதிபதித் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், முஸம்மில் ஹாஜியார் அவரது எதிர்கால நலன்களை மாத்திரம் கருத்திற்கொண்டு, கோத்தாபயவுடன் சங்கமித்துள்ளர். இனவாதிகளுடன் கைகோர்த்து, அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, முஸ்லிம் சமூகத்துக்கு பச்சை துரோகம் இழைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.

அத்துடன், கடந்தகால தேர்தல் பிரச்சாரங்களில், மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை “இனவாதக் கும்பல், முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவர்கள்” என்றெல்லாம் மேடை மேடையாக பிரச்சாரம் நடாத்திய முஸம்மில் ஹாஜியார், அதே கும்பலுடன் தற்போது மீண்டும் இணைந்திருப்பது பதவி மோகத்தை தவிர வேறு எதற்காக?

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found