V2025

இந்தியாவுடனும் சீனாவுடனும் இலங்கையின் உறவுகள்!

கொழும்பில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட  பிரமாண்டமான தோற்றக்கவர்ச்சியுடைய தாமரைக்கோபுரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான  உறவுகளின் புத்தம்புதிதான சின்னமாக கருதப்படுகிறது.பலநோக்கு செயற்பாடுகளுக்கான இந்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது.

சீனாவுக்கு விரோதமான உணர்வு நிலவிய ஒரு நேரத்தில் பதவிக்கு வந்த ஒரு அரசாங்கத்தின் கீழ் இந்த கோபுரத்தின் பெருமளவு நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன என்பது விசித்திரமானதாக  தோன்றக்கூடும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க சீனாவின் இன்னொரு பாரிய திட்டமான 140 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிலான கொழும்பு துறைமுக நகரம் கைவிடப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு  உடனடியாக துறைமுகநகர திட்டம் ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்தது. அடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கதியும் நிச்சயமற்றதாகியது. 2005 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததும் இலங்கை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்கமுன்வந்தார். இந்தியா அதை முற்றிலும் பொருளாதார கோணத்தில் பார்த்ததே தவிர, கேந்திரமுக்கியத்துவத்தை அந்த நேரத்தில் கவனிக்கத்தவறிவிட்டது.

இவையெல்லாம் இப்போது வரலாறாகிவிட்டது. ஆனால், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் காலத்தின் சோதனைக்கு தாக்குப் பிடித்து நின்றன. மேற்கூறப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான சகல சர்ச்சைகளுக்கும்  சீனாவினால் தீர்வு காணக்கூடியதாக இருந்தது. எந்தவொரு பெரிய தடங்கலுமின்றி துறைமுக நகரத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிர்மாணம்  நிறைவுறும்போது இந்தியாவுக்கான முக்கியமான கப்பல்போக்குவரத்து மையமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் அந்த துறைமுகநகரம் அமைந்திருக்கும். சீனக்கம்பனி ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதன் அருகில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் 99 வருட குத்தகைக்குபெற்றிருக்கிறது. மேலும் சீனாவின் நவீன பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் ஒரு உறுப்பு நாடாக இலங்கை இருக்கிறது.

சீனாவுடனான பொருளாதார உறவுகள் இலங்கையை ஒரு " கடன்பொறிக்குள் " தள்ளிவிடுகின்றன என்று சில சர்வதேச நிபுணர்கள் வாதிடுகின்ற போதிலும் கூட , பொருளாதார முனையில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுமுறை மேலும் மேலும்வலுவடைந்துகொண்டேயிருக்கிறது.இலங்கை மத்திய வங்கியின் 2018 வருடாந்த அறிக்கையின்படி சீனாவில் இருந்து இறக்குமதிகள் 18.5 சதவீதமாக இருக்கின்றன. இது இந்திய இறக்குமதிகளையும் விட (19 சதவீதம் ) சொற்பமே குறைவானதாகும்.

2014 மே மாதத்தில் இருந்து " அயலகம் முதலில் " என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகின்றபோதிலும், சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இந்தியா பெரிதாக எதையும் சாதித்ததாக கூறிக்கொள்ளமுடியாது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்வனவு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையுடனும் ஜப்பானுடனும் கூட்டாக இந்தியா உடன்படிக்கையொன்றை கடந்த மே மாதத்தில் செய்துகொள்ளக்கூடியதாக இருந்ததைத் தவிர, இலங்கையில் எந்தவொரு பெரிய உட்கட்டமைப்பு திட்டத்தையும் இந்தியா பொறுப்பெடுத்ததாக கூறமுடியாது.வடமாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கென்று 2018 முற்பகுதியில் இநதியா 4 கோடி 50 இலட்சம் டொலர்களை வழங்கியபோதிலும் அதை புனரமைப்பதற்கான திட்டத்தின் நிலை குறித்து எதுவும் பெரிதாக தெரியவில்லை.வடக்கில் பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் யோசனை தொடர்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.( மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வர்த்தக விமானசேவைகள் விரைவில் பலாலியில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கபபடுகிறது ) மத்தள ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தில் பெரும்பான்மையான பங்குகளை இந்தியா பெறவிருப்பதாக பேசப்பட்டபோதிலும் அது தொடர்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் இரு தரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஒரு மேம்பட்ட வடிவம் என்று சொல்லக்கூடிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையும்  ( எட்கா ) கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அண்மைய வருடங்களில் இந்திய அரசாங்கத்தின் ஒரு சில  சமூக அபிவிருத்தி திட்டங்கள் இலங்கையில் விரைவுபடுத்தப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, போரினால் அழிவுக்குள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மலையகப்பகுதிகளிலும் தமிழர்களுக்கென்று நிர்மாணிக்கப்பட்ட 60 ஆயிரம் வீடுகளையும் இலங்கை பூராவும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அம்புலன்ஸ் சேவைகளையும் கூறமுடியும்.இவ்விரு திட்டங்களும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நன்கொடை களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன.கடந்த ஜூலை மாதத்தில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் ஒரு பகுதியை 9 கோடி 10 இலட்சம் டொலர்கள் செலவில்  தரமுயர்த்துவதற்கு உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டது.

எவ்வாறெனினும், அபிவிருத்தி ஒத்துழைப்பில் கூடுதலான அளவுக்கு பணிகளைச் செய்வதற்கு இந்தியாவுக்கு இருக்கின்ற ஆற்றலையும் விருப்பத்தையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மிதமான பணிகள் குறித்து அது திருப்தியடையமுடியாது.விக்கிரமசிங்க ஒரு வருடத்துக்கு முன்னர் புதுடில்லிக்கு  விஜயம் செய்தபோது இந்தியாவினால் முன்வைக்கப்படுகின்ற திட்டயோசனகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் தரப்பில் காண்பிக்கப்படுகின்ற தாமதம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசனம் வெளியிட்டாா்.திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சிய வசதிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டம் அத்தகைய ஒன்று.அது தொடர்பாக பல வருடங்களாக ஆராயப்பட்டுவருகின்றது.வடமாகாணத்தில் 30 கோடி டொலர்கள் செலவில் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்றை பெய்ஜிங்கிற்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம்  ஒரு வருடத்துக்கு முன்னர் கைவிட்டமையே புதுடில்லி ஆறுதல் அடையக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது.

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகி்ன்ற உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் பாரியவையாக இருக்கலாம்.ஆனால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள்்ஆழமானவையும் கூடுதலான அளவுக்கு சிக்கலானவையுமாகும்.மோடி கூறியதைப் போன்று "  நல்ல காலத்திலும் சரி கெட்டகாலத்திலும் சரி இலங்கைக்கு உதவிக்கு ஓடிவருகின்ற முதல் நாடாகவே இந்தியாவே எப்போதும் இருந்துவந்திருக்கிறது ; எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும்". 2004 டிசம்பர் சுனாமி பேரழிவின்போது இந்தியாவின் உதவிகளும் கடந்த ஜூனில் கொழும்புக்கு மோடி செய்த விஜயமும் இந்தியாவின் அக்கறையுடனான அணுகுமுறையை வெளிக்காட்டுகின்றன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கைக்கு முதன் முதலாக விஜயம் செய்த வெளிநாட்டு தலைவர் மோடியேயாவார்.

இத்தகைய ஆழமான உறவுகளுக்கு மத்தியிலும், சமகாலத்தில் இரு தரப்பு உறவுகளில் கசப்பான சில நிகழ்வுகள் இடம்பெற்றன.1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தமிழர் பிரச்சினையில் இந்தியாவை சம்பந்தப்பட வைத்தன.1990 மார்ச்சில் இந்திய அமைதிகாக்கும் படை வாபஸ் பெறப்பட்டமை, 1991 மே மாதம் முனனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை போன்ற நிகழ்வுகள் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டம் வரையில் கொழும்பை நோக்கி இந்தியா " விலகிநிற்கும் " அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்தித்தன.2009 மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி ஐந்து மாதங்களில் விடுதலை புலிகளுடனான மோதல்களுடன்  தமிழ் மக்களின் உரிமைகளையும் நலன்களையும் சிக்கல்படுத்தக்கூடாது என்று இந்தியா திரும்பத்திரும்ப இலங்கைக்கு கூறியது.ஆனால், இந்தியாவின் இந்த அணுகுமுறை போதுமானதல்ல என்றே விடுதலை புலிகளுக்கு ஆதரவானவர்கள் கருதினார்கள்.அத்துடன் விடுதலை புலிகளின் தோல்விக்கு இந்திய அரசாங்கம் பங்களிப்புச் செய்ததாகவும்  அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், அவற்றின் குறைபாடுகளுக்கு மத்தியிலும், 1987 ராஜீவ் காந்தி -- ஜெயவர்தன உடன்படிக்கையும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு வகைசெய்யும் 13வது அரசியலமைப்பு திருத்தமும் இன்னமும் கூட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கெட்டியான கட்டமைப்பாக விளங்குகின்றன.அரசியல் இணக்கத்தீர்வுக்கு அப்பால், இலங்கையின் நிகர உள்நாட்டு உற்பத்திக்கு பத்து சதவீதத்துக்கும் குறைவான பங்களிப்பைச் செய்யும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி தேவைப்படுகிறது. இது விடயத்தில் இந்தியா பிரத்தியேகமான பணிகளைச் செய்வதற்கு விரும்புகிறது.ஆனால், தமிழ் அரசியல் தலைமைத்துவத்திடமிருந்து உகந்த பிரதிபலிப்பு வருவதாக இல்லை.

இன்னும் இரு மாதங்களில் இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும்போது, நிலுவையில் இருக்கும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான அங்கீகாரத்தை பெறும் ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக மாத்திரமல்ல, இலங்கையின் இளைஞர்களின் முழுமையான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது குறித்தும் இந்திய அரசாங்கம் அவருடன் விரிவாகப் பேசவேண்டும்.இலங்கையில் மிகவும் பின்தங்கிய சமூகத்தினராக இருக்கும் மலையக தமிழர்களின் அபிவருத்தி விவகாரங்களில் இந்தியா நிலையான அக்கறை செலுத்தவேண்டும்.தமிழ்நாட்டில் வசிக்கின்ற சுமார் 95 ஆயிரம் அகதிகளை அவர்களின் விருப்பத்துடன் இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான  முயற்சியை மீண்டும்  முன்னெடுப்பதும் பொருத்தமானதாக இருக்கும். இதை நோக்கிய ஒரு நடவடிக்கையாக தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல்சேவையை சாத்தியமானளவு விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து ஒரு தடவை கூறியதைப் போன்று " இந்தியாவின் உதவி முற்றுகையிடுவதையோ ஆக்கிரமிப்பதையோ நோக்கமாகக் கொண்டதல்ல ". இதயசுத்தியுடனான --  பெருந்தன்மையானதும் விரிவானதுமான ஒரு அணுகுமுறை இலங்கையர்களின் பெருமதிப்பைச் சம்பாதிக்கும் என்பது மாத்திரமல்ல, இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளின் வலிமையைப் பற்றி ஏனைய முக்கிய சர்வதேச நாடுகளுக்குஒரு செய்தியை வழங்குவதாகவும் இருக்கும்.

(  இந்து )

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found