V2025

ஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி!

ஊழல், மோசடிகள், குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக சர்வகட்சிச் சபையொன்றை அமைத்து அதனை ஜனாதிபதி செயலணியுடன் இணைத்து இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்தார்.

எனக்கு எந்தத் தரப்பினருடனும் முரண்பாடு கிடையாது. நாட்டை சரியான திசையில் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்காகும். நான் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை என்ற அவர், தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நேற்று மாலை (18) நடைபெற்ற வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடனான இரண்டு மணி நேர சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது வர்த்தக சமூகத்தவர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான ஒரு நேரடிச் சந்திப்பாகவும் கேள்வி பதில் கலந்துரையாடலாகவே அமைந்திருந்தது.

அங்கு முக்கியமானதொரு கேள்விக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச,

"முதலில் நாட்டில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும். குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அண்மைக் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஓரளவு குறைவு காணப்பட்டாலும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் இன்னமும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதில் நான் பதவிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டங்களை மீறிச் செயற்படுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டமுடியாது. நாட்டை சுபீட்சமுள்ளதாக புதிய இலங்கையாக உருவாக்கும் எனது திட்டத்துக்கு தடைக்கல்லாகவிருக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை.

நாட்டின் முதுகெலும்பு பொருளாதாரம். அந்தப் பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடியவர்கள் வர்த்தக சமூகத்தினர். வர்த்தக சமூகம் சரியான இலக்கில் வழிநடத்தப்பட்டால் நாட்டை ஒரு செழிப்பான வளமுள்ள நாடாக உருவாக்க முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் சர்வாதிகாரிபோல் நடந்துகொள்ளப் போவதில்லை. எமது நாட்டின் வர்த்தகத்துறை திறமையை சர்வதேசம் அங்கீகரிக்கும் விதத்தில் அவசியமான திட்டங்களை வகுத்து செயற்பட விரும்புகின்றேன்.

அத்துடன், பொருளாதார அபிவிருத்திக்கு எவ்வாறான வழிவகைகளை முன்னெடுக்க முடியுமோ அதற்கான நிகழ்ச்சி திட்டமொன்றை தயாரிப்பதற்காக நான் அமைக்க உத்தேசித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி சபைக்கு வர்த்தக சமூகத்தினரின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள்.

இங்கு ஒரு வர்த்தகப் பிரமுகர் ஆலோசனை வழங்கும் விதத்தில் பேசமுற்பட்டபோது நிகழ்ச்சியை வழிநடத்தியவர், அதைத்தடுத்த போது, சஜித் பிரேமதாச அவரைத் தடுக்க வேண்டாம் பேச விடுங்கள் என்று கூறினார். அவர் பேசி முடித்ததும் பதிலளித்த சஜித் பிரேமதாச, நீங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு நான் ஜனநாயக ரீதியில் பதிலளிப்பேன்.

ஆனால், இதே யோசனையை நீங்கள் எதிர்த்தரப்பினரிடம் தெரிவிக்க முற்பட்டால் நீங்கள் இந்த ஹோட்டலிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வாசலில் வெள்ளை வான் நிற்கும். நான் ஜனநாயகத்தை மதிக்கின்றவன். எந்தப் பிரச்சினைக்கும் முகங்கொடுக்கக்கூடிய ஆளுமை என்னிடம் இருக்கின்றது. அது எனது தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்" என்றார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found