நாடாளாவிய ரீதியில் தபால் மூலமான வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 659,514 பேர் தகுதிபெற்றுள்ளனர். எதிர்வரும் 4ஆம் திகதி பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள், எதிர்வரும் 7ஆம் திகதி மாவட்ட செயலகங்களில் அல்லது தேர்தல் தினமான நவம்பர் 16 இல் வாக்களிக்க முடியும். காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தகுதி பெற்ற அரச அதிகாரிகள் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியுமெனவும், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைக்காக தேர்தல்கள் செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், "கபே" மற்றும் "பெப்ரல்" அமைப்பின் அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 40ஆயிரம் முதல் 50ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடக்கூடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வண்டிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிக்கடி பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடவும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில், நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், பெப்ரல் அமைப்பு சார்பில், தபால்மூல வாக்களிப்புக்காக 1,000 பேர் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது
மேலும், ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட சுமார் 2,000 ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், வாக்களிப்பு ஆரம்பமானதுடன் ஆசிரியர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது.
இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு திணைக்களங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை 9 மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
மேலும் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றிலும் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன் 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.