V2025

கோட்டாவுடன் கூட்டுசேர குப்பையை சாட்டாக பயன்படுத்திய பாயிஸ்!!

புத்தளம் நகரபிதா பாயிஸ் நீண்டகாலமாக மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடி.

முன்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றியவர். கடந்த தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள், மஹிந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளை வெறுத்து, 2015 இல் மைத்திரிக்கு ஆதரவளித்த போது, இவர் வேறு வழியின்றி ஒட்டகத்தின் மீதேறி, தேர்தல் கேட்டு படுதோல்வி அடைந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி அஞ்ஞானவாசம் செய்தார். புத்தளத்தில் உள்ள தனது தோட்டத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட இவர் முயற்சித்த போதும் அக்கட்சியின், புத்தளம் மாவட்ட முக்கியஸ்தர் அலி சப்ரியின் எதிர்ப்பின் காரணாமாக, அந்த முயற்சி கைகூடாமல் போனதால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார்.

புத்தளம் மாவட்ட மு.கா முக்கியஸ்தர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே, அக்கட்சியின் தலைவரால் இவர் மீண்டும் உள்வாங்கப்பட்டு, மரத்தில் ஏறி நகரபிதா ஆனார். புத்தளத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அத்தனை மாசடைதல் திட்டத்திலும் இவருக்கு பாரிய பங்குண்டு எனவும் அந்த திட்டங்களை புத்தளத்தில் கொண்டு வருவதற்கு, இவருக்கு கையூட்டல் கொடுக்கப்பட்டதாகவும் பரவலான கருத்துக்கள் உண்டு.

புத்தளம் சிறுகடலில் மீனவர்களுக்குத் தீங்கான மின்கம்பி போடல், இயந்திரக் காற்றாடி மற்றும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் போன்ற வேலைத்திட்டங்கள், இவரை கைக்குள் போட்ட பின்னரே புத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டமை, மக்கள் அறிந்த விடயம்.

மேலும், புத்தளம் குப்பை விவகாரத்திலும் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து அவர் சம்பிக்கவை சந்தித்து, அதற்கு அங்கீகாரம் வழங்கிய கதைகளும் உண்டு. மைத்திரிபால சிறிசேன புத்தளத்துக்கு வந்தபோது, பொலிஸாரின் காடைத்தனத்துக்கு புத்தளம் மக்கள் இரையாகியதற்கு இவரது நடவடிக்கையே காரணம். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் புத்தளக் குப்பையை கையில் எடுத்துக்கொண்டு, கோட்டாவுக்கு ஆதரவு வழங்கத் துடிக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, புத்தளம் முக்கியஸ்தர்களான நியாஸ் போன்றவர்களின் முன்னிலையில் சஜித் பிரேமதாச வழங்கிய தீர்க்கமான உறுதிமொழி, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து யஹியா, அலி சப்ரி, முன்னாள் எம்.பி நவவி ஆகியோரின் முன்னிலையில் சஜித் வழங்கிய உறுதிமொழி மற்றும் அண்மையில் புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித் வழங்கிய பகிரங்க உறுதிமொழிகளை நாட்டு மக்கள், பத்திரிகை வாயிலாகவும் புத்தள மக்கள், நேரடியாகவும் அறிந்த விடயமே.

“புத்தளம் குப்பை பிரச்சினையை இதயசுத்தியாக தீர்த்துத் தருகின்றேன்” என்று சமூக ஒப்பந்தம் செய்த சஜித்தை இவர் நம்ப மறுக்கிறார். இதற்குக் காரணம், கோட்டாவின் வலையில் சிக்கி இருப்பதாலாகும். எதிர்காலத்தில் பாயிஸ் கனவு காணும் கோட்டாவின் (Gota) அரசில், கோட்டா (Quota) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர், இப்போது புத்தளம் மக்களை பலிக்கடாவாக்க நினைகின்றார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற நகர சபை உறுப்பினர்களில் சிலரை அச்சுறுத்தி, தமது கைக்குள் போட்டுகொண்டு, இவர் எதிர்கால அரசியல் செய்யப் பார்க்கின்றார்

அந்தவகையில், சஜித்தின் மேடையிலோ சஜித்தின் சந்திப்புக்களிலோ இவர் கலந்துகொள்ளவில்லை. பாயிஸ் நேர்மையானவராக இருந்தால் அங்கு சென்று, புத்தளம் மக்களின் குப்பை பிரச்சினையை சஜித்திடமும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். சஜித் நிராகரித்திருந்தால் அவர் நாடிய வழி சரியானதே. ஆனால், பாயிஸ் என்ற அரசியல்வாதி எப்போதும் நேர்மையானவர் அல்ல. சண்டித்தனமும் காடைத்தனமும் இவரின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.

இப்போது, கோட்டாவை சந்தித்து, புத்தளம் குப்பை பிரச்சினைக்கு கோட்டாவினால் தீர்வை பெற்றுவிட்டதாக கதை விடுகிறார். மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் சிலரையும் “கிளீன் புத்தளம்” அமைப்பிலுள்ள ஒரு சிலரையும் வண்ணாத்திவில்லில் மொட்டுக்கு ஆதரவளிக்கும் பௌத்த மதகுரு ஒருவரையும் மைத்திரியுடன் மிக நெருக்கமான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரையுமே, இவர் புத்தளம் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு, ஒட்டுமொத்த புத்தள மக்களின் சார்பாக அழைத்துச் சென்று கோட்டாவை சந்தித்திருக்கிறார். கோட்டா உறுதிமொழி தந்ததாகவும் கூறுகிறார். பிரச்சினை எல்லாம் முடிவடைந்து விட்டதாகக்கதை அளக்கிறார். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், புத்தளத்தின் முஸ்லிம் பெரியார், கண்ணியத்துக்குரிய அப்துல்லாஹ் ஹஸரத்தும், பாயிஸின் இந்த சிக்குமுக்கு விளையாட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதுதான்.

கோட்டாவை சந்தித்த பின்னர், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் எதிர்ப்பிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனிடம் சென்று, மழுப்பல் கதைகளை கூறியுள்ளதாக புத்தளம் மக்கள் தெரிவிக்கின்றனர். பாயிஸ், உண்மையான இதய சுத்தியான அரசியல்வாதியாக இருந்தால், கட்சியின் மீதும் தலைமையின் மீதும் விசுவாசம் உள்ளவராக இருந்தால், மு.கா தலைமையின் அனுமதியுடன் கோட்டாவை சந்திக்கச் சென்றிருக்க வேண்டும்.

73472487 412347359452826 1218751314461196288 n

புத்தளம் மக்களின் வாக்குகளை கோட்டாவின் குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு பாயிஸ் எடுக்கும் இந்தக் குப்பை தந்திரம், ஒருபோதும் பலிக்காது என புத்தளத்தின் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்க பாயிஸ்! வெல்லட்டும் அவரது சமூக அக்கறை!  

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found