ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமை சம்பந்தமாக வொஷிங்கடனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி மற்றும் இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை என வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பாக, குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்கு தேவையான தொழிற்நுட்ப உதவிகளை வழங்க திணைக்களம் இணங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த காணொளி கடந்த 15ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அப்போது தேர்தல் பரப்புரைகள் தடை செய்யப்பட்டிருந்தன.
கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜையா இல்லை என்ற என்ற விடயம் தொடர்பான பிரச்சினை அப்போதும் முடிவுக்கு வந்திருக்கவில்லை.
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய வாத விவாதங்களை திசைத் திருப்பும் நோக்கில் குறித்த காணொளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அப்போது வெளியிடப்பட்டிருந்தது.