V2025

இந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை!

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ மிக இலகுவாக வெற்றி பெற்றுள்ள பின்னணியில், தமிழர் பிரச்சினைகள் எவ்விதம் கையாளப்படப் போகின்றன என்ற ஒரு எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளன.

இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவு அளித்ததுடன், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக இப்போது அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை என்று ஆரம்பிக்கப்படுமாயின் அது பல தமிழ்க் கட்சிகளுடன் என்ற அடிப்படையிலேயே பிரதிபலிக்கப்படும். குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்வாங்கப்படும். கூட்டமைப்பு தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறியிருகின்றமையால் பல கட்சி பேச்சுவார்த்தைக்கு தமிழ்க் கூட்டமைப்பு இணங்கப் போவது இல்லை.

எனவே, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பவை சாத்தியமற்றதாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி பின்-யுத்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு, -கிழக்குப் பகுதியில் பாரிய கட்டமைப்பு அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருந்தது.

இதற்கான ஒரு காரணம், தமிழ் மக்கள் இலங்கையின் ஏனைய குழுக்களைப் போல அபிவிருத்தி பிரச்சினை ஒன்றையே கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கை ஆகும். எனவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே, ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கமும் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிலேயே கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை இனநல்லிணக்கத்திற்கு பிரதான ஊடகமாகப் பயன்படுத்தி இருந்தது. இருப்பினும் இவ்வகை அணுகுமுறையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அவர்கள் அளித்த வாக்குகள் இதன் பிரதிபலிப்பாகவும் இருந்தன.

எனவே, இந்த அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படக் கூடிய கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் எந்த அளவுக்கு இனங்களுக்கு இடையிலான உறவை பலபடுத்த உதவும் என்பது சந்தேகத்திற்கிடமானதே.

புதிய அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கையை கொண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இந்தியாவை முழுமையாக ஓரம்கட்டுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை புதிய அரசு உணர்ந்து கொண்டுள்ளது. எனவே இந்தியாவின் கரிசனைகளை கவனத்தில் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இன்னொரு வகையில் கூறுவதாயின் இந்தியாவை பகைத்துக் கொள்ளாத சீனச் சார்பு கொள்கை ஒன்று முன்னெடுக்கப்படலாம்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் பயணம் செய்வதற்கான முதலாவது இடமாக புதுடில்லி தெரிவு செய்யப்பட்டமை இதன் ஓர் அறிகுறியாக இருக்கக் கூடும்.

(BBC)

பேராசிரியர்
எஸ்.ஐ.கீதபொன்கலன்
(சாலிஸ்பரி பல்கலைக்கழகம், மேரிலாந்து)

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found