V2025

செய்தி

மஹிந்தவின் 'ஹார்ட் அட்டேக்' நாடகம்!

இன்று இரவு 12.00மணியோடு ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காலம் நிறைவடைந்த பின், சட்டத்தை மீறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, 'திடீர் மாரடைப்பு' என்று கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதியாக தாயாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மொட்டிற்கு நெருக்கமான அனைத்து ஊடகங்களையும்  பயன்படுத்தி, அவரது  உடல்நலம் குறித்த ஒரு மணி நேர செய்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு அனுதாபம் தெரிவிக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள விகாரைகளில்  போதி பூஜை நடத்துவதாகவும், சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்த தயாராக உள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்த திட்டத்தை மாற்றியமைக்கும் அவதானம் உள்ளதனால், இது தொடர்பாக மேலும் கலந்துரையாடல்கள்  நடைபெற்று வருவதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Comment (0) Hits: 89

இறுக்கமாக நகரும் தேர்தல் களம்; கோட்டைகளைச் சாய்ப்போருக்கே வெற்றி சாத்தியம்!

சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும்.தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களங்கள் இறுக்கமாக நகர்கின்றன.

இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸக்களும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும் பிரச்சாரங்களால் ராஜபக்ஷக்களுக்கு தென்னிலங்கையும் பிரேமதாஸக்களுக்கு சிறுபான்மைத் தளங்களும் சாதகமாகவுள்ளன.நல்லாட்சி அரசின் நாலரை வருடக் கெடுபிடிகளை ஞாபகமூட்டி ரணிலின் அரசாங்கத்தைக் கேலி செய்யும் மஹிந்தராஜபக்ஷ,ஈஸ்டர் தாக்குதலை கையிலெடுத்திருப்பது தென்னிலங்கையில் பல வியூகங்களை இழையோட வைத்துள்ளன.

ஜனநாயக தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளை பிரிவினைவாதமாகக் காட்டி தென்னிலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துவது,பெளத்தர்கள் அதிகளவு விரும்பும் தலைமைக்கு எதிராகச் செயற்படாமல் நெருக்குவாரங்களைக் கட்டவிழ்ப்பது,கடும்போக்கர்களின் கண்காணிப்பில் ராஜபக்ஷக்களின் கோட்டைகளை சுற்றிவைளைப்பதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கை கொடுத்துள்ளதையே காணமுடிகிறது . இந்தக் கள நகர்வுகள் ஜனநாயக தேசிய முன்னணிக்கு பெரும் தலையிடியாகிறது.

இவ்வினவாத வியூகங்களுக்குச் சமனான வாக்குகளைப் பெற்றேயாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சிறுபான்மையினரின் தளங்களைக் கையகப்படுத்துவதன் தீவிரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படுத்திற்று.இதனால் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ராஜபக்ஷக்களின் ஒரு தசாப்த ஆட்சியை,தங்களது தளங்களில் நினைவூட்டி,அவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கொடுமையாளர்களாகவும் காட்டி இவர்களின் செயற்படு தளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

தெற்கு,வடக்குத் தளங்களின் எழுச்சிகளை அலையும் வாக்காளர்கள்
(floating) புரிவதைப் பொறுத்தே வெற்றி,தோல்விகள் அமையலாம்.உண்மையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அங்குள்ள சுமார் 18 இலட்சம் வாக்குகளும் தென்னிலங்கையிலுள்ள பெரிய மாவட்டங்கள் ஒன்றுடன் சமப்படக் கூடியதே.உதாரணமாக கொழும்பு அல்லது குருநாகல் மாவட்டங்கள் ஒன்றுக்குச் சமனான வாக்குகளே அவை.எனவே சிறுபான்மைக் கோட்டைகளை மட்டுமன்றி தென்னிலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளை அதிகப்படியாகப் பெறும் தேவை இத்தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

மேலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் முஸ்லிம் தனித்துவ தலைமைகளுடனும் இல்லை.இங்குள்ளோரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானிகள். இவர்கள் முஸ்லிம் தலைமைகள் கோரும் நிர்வாக அலகு,அதிகார எல்லைகளைப் பிரிவினையாகப் பார்ப்பவர்கள்.தனித்துவத் தலைமைகளை ஆதரிப்பது தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் தங்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துமென அதிகளவு அஞ்சும் மக்களும் இவர்கள்தான் .

மேலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த கொதி நிலைகள் இந்நிலைமைகளின் விபரீதங்களை இரட்டிப்பாக்கியுமுள்ளது. எனவே எவ்விதக் கோரிக்கைகளையும் முன்வைக்காது அல்லது தாம் வைத்த கோரிக்கைகளை வெளிப்படுத்தாதுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் ராஜதந்திரத்தில் இம்மக்களின் பீதியைப் போக்குவதற்கான தந்திரங்கள் உள்ளதாகவும் எண்ணத் தோன்றுகிறது. ஏன்? 13 அம்சக் கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதே! இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ராஜதந்திரம் என்றும் சிலர் கோருகின்றனர்.இதுதான் சிந்திக்கத் தூண்டும் விடயம் தென்னிலங்கையில் தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம். இதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையிலே மூலதனமாக்க முயற்சிக்கின்றனர்.

இம்முயற்சிகளைத் தவிர்க்கவே முஸ்லிம் தலைமைகள் இவ்வியூகத்தைக் கையாண்டிருக்கலாம். மேலும் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதால் தமிழர் தரப்பிலிருந்தான அச்சுறுத்தல்களை தென்னிலங்கை கடும்போக்கர்கள் கண்டு கொள்ளவில்லை.இருந்த போதும் புலிகளை உயிரூட்டுவதற்கான முயற்சிகளாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் நோக்க வைக்கப்படுவதையும் சிறுபான்மையினர் அவதானிக்க வேண்டும் ."முப்பது வருடப் போரில் புலிகளால் செய்ய முடியாததையா கூட்டமைப்பினர் சாதிக்கப் போகின்றனர். தமிழர்களே அபிவிருத்தி அரசியலுக்காக தம்மோடு இணையுங்கள்"என ராஜபக்ஷக்கள் அழைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தளங்களைத் தகர்க்கும் முயற்சிகள்தான்.எனினும் இவைகள் பாறைகளில் எறியப்பட்ட பந்துகளாகுமா?அல்லது பசுமரத்தாணிகளாகுமா?எதிரே வரவுள்ள நாட்களே இதற்கு விடை பகரவுள்ளன.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடாத்திய எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்று உஷாரடைந்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கைத் தளங்களை மேலும் கெட்டியாக்கின.

இதனால் ராஜபக்ஷக்களின் குடும்பத் தகராறுகளை தென்னிலங்கைச் சந்திகளுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகள் புதிய ஜனநாய முன்னணிக்கு இருக்கவில்லை. குடும்ப ஆட்சி,ஊழல் மோசடிகள்,வாரிசு அரசியலைப் பிரச்சாரம் செய்யும் புதிய ஜனநாய முன்னணி தென்னிலங்கையில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதும் சிறுபான்மையினர் தளத்திற்குள் நுழைந்துள்ள மஹிந்தவின் ஏஜெண்டுகளை முற்றாகக் களைவதும்தான் சஜித்தின் வெற்றியைச் சாதகமாக்கலாம்.

இல்லாவிட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற 36 இலட்சம் வாக்குகளுடன் தோழமைக் கட்சிகளால் கிடைக்கும் வாக்குகளைக் கூட்டுவதுடன் நின்று விட நேரிடும்.எனவே ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் வடக்கு, தெற்கு தளங்களைத் தகர்க்கும் வீதாசாரத்திலே வெற்றிகள் அமைந்திருக்கும்.சந்திரிக்காவின் வருகை ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும் அதிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதை அவதானிக்கும்போது,வீரியமுள்ள தலைவி கிடைத்ததற்கான மகிழ்ச்சி என்பதை விடவும் வெளிநாடுகளின் ஆதரவுகளைப் பெறலாமென்ற நம்பிக்கையே அவர்களைத் தைரியப்படுத்தியுள்ளன.

மறு பக்கம் வெளிநாடுகளின் தலையீடுகள்,டயஸ்பொராக்களின் அழுத்தங்களுக்கு எதிராகப் பேசும் ராஜபக்ஷக்களை இது தைரியமூட்டியுமுள்ளது. எனவே இத்தேர்தலென்பது எவரும் கணிப்பிட முடியாத,எதிர்வு கூற இயலாத மிக இறுக்கமான தேர்தலாகவேயுள்ளது. வெளிவரவுள்ள முடிவுகளே சகலரது எதிர்பார்ப்புக்கும் பதிலளிக்கும்.

 சுஐப் .எம்.காசிம்
 
Comment (0) Hits: 60

'மக்களுக்கே பதிலளிப்பேன்; தனிப்பட்ட விவாதம் சேறு பூசல்' - கோத்தாபய!

மக்களுக்கு மாத்திரமே தாம் பதிலளிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளதாகவும் தனிப்பட்ட முறையில் தனது எதிராளியுடன் விவாதம் புரிவது வெறும் சேறுபூசும் நடவடிக்கையாகவே அமையும் எனவும் பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பகிரங்க விவாதம் ஒன்றில் பங்கேற்குமாறு பல சந்தர்ப்பங்களில் கோரியிருந்தார்.   இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நேர்காணலில் பதிலளித்துள்ள அவர், தான் முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த பல்வேறு ஊடக சந்திப்புகளில் கலந்துகொள்வதாகவும் அதேபோல் மற்றையவர்களும் மக்கள் மத்தியில் தனது கருத்துக்களை தெரிவிக்கக் கூடிய இயலுமை உள்ளதாகவும் கூறியுள்ளார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,   

ஒவ்வொரு வேட்பாளரினதும் கொள்கை பிரகடனங்களில் மக்கள் தமக்கு ஏற்ற கொள்கை பிரகடனத்தைத் தெரிவு செய்ய முடியும். தத்தமது கொள்கைப் பிரகடனங்களை உண்மையில் செயற்படுத்த கூடிய ஆற்றல் யாரிடம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.    தனிப்பட்ட முறையில் தனது எதிராளியுடன் விவாதம் புரிவது வெறும் சேறு பூசும் நடவடிக்கையாகவே அமையும் என்று தெரிவித்த அவர், இதுவரையிலும் தான் எந்தவொரு வேட்பாளரின் பெயரையும் தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தவில்லை எனவும் எனவும் கூறினார்.  இலங்கையில் உள்ள இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். என்னை எவர் விமர்சித்தாலும் நான் அவ்வாறு செயற்பட போவதில்லை. இதுவே எனது கொள்கை எனவும் அவர் தெரிவித்தார்.

Comment (0) Hits: 61

'பிரபாகரனை "சேர்" என விழித்துக் கூறவில்லை' - சந்திரிக்கா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை "சேர்" என விழித்துக் கூறவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் சந்திரிக்கா கூறிய கருத்து திரிவுபடுத்தப்பட்டு, போலிச் பிரச்சாரம் செய்யப்படுவதாக சந்திரிக்காவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரை சேர் என சந்திரிக்கா கூறவில்லை. சில ஊடங்கள் விசம பிரச்சாரங்களை முன்னெடுக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக பயணித்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள், வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறான போலி பிரச்சாரங்கள் மூலம் சந்திரிக்காவுக்கு எதிராக சேறு பூச முயற்சிப்பதாக அவரது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறு குற்றம் சுமத்தும் வகையில், தான் கருத்து வெளியிட்டதற்கான ஆதாரங்கள் இருப்பின் நிரூபிக்குமாறு சந்திரிக்கா சவால் விடுத்துள்ளார்.

அரசியல் நன்மைகள் பெறும் போக்கில் இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்வது வருத்தமளிப்பதாக ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 
Comment (0) Hits: 52

கோட்டாவின் பிரஜா உரிமை; உண்மை - பொய் என்ன? BBC சிங்கள சேவையின் ஆய்வு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

இதற்கான பிரதான காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை நீக்கப்பட்டுள்ளவர்களது பெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படாமையாகும்.

எவ்வாறாயினும் கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்ற விடயத்தை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவோா் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜை அல்ல என்றும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் முன்வைத்தார்.

அந்த ஆவணங்கள் தொடர்பிலும் சமூக ஊடகங்கள் ஊடாக கேள்விகள் எழுப்பப்ட்ட போதிலும் சட்டத்தரணி அலி சப்ரி நவம்பர் 10ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை  விலக்கிக் கொள்ளப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை பீபீசி சிங்கள சேவையின் முகநூல் நேரடிநேர்காணலில் கலந்து கொண்டு கூறும் போது, “எந்தவிதமான ஆவணங்களையும் நாம் உத்தியோகபூர்வமாக நாம் கேட்டிருக்கவில்லை. குறைந்தது அவரது அடையாள அட்டையின் பிரதியைக் கூட நாம் கேட்கவில்லை. யாரிடமும் அவ்வாறான ஆவணங்களை நாம் கோரவில்லை என்ற விடயத்தையே நாம் கூற வேண்டியுள்ளது” என்றார்.

Comment (0) Hits: 62

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த யூதர்கள்!(காணொளி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் தோன்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தை காரணம் காட்டி சிலர் அதிகாரத்திற்கு வருவதற்கு முயன்ற போதிலும் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களுக்கு அமைய, அவ்வாறானவர்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்துள்ளார்களா? என்ற சந்தேகம் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்த்தவ சமூகத்திடம் தோன்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் அவர்களது கடும் வெறுப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் (11) நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, இது தொடர்பான விடயங்களைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்.

“சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகள் குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவைக் கைது செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தியவர்கள் யார்? என்பது இன்று தெளிவாகத் தெரிகின்றது.

டீ.ஐ.ஜி நாலக சில்வா ஒரு கத்தோலிக்கராகும். அவரது 109 யிலிருந்து 115 வரையில் சாட்சியங்கள் குறிக்கப்பட்டுள்ள சாட்சிகள், விஷேடமாக கத்தோலிக மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையினை எடுத்து வாசியுங்கள். இது உங்கள் பொறுப்பாகும். புதிதாக யாரும் இது தொடர்பில் சாட்சிகளைத் தேடித் தரும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை.

இந்நாட்டு மக்களுக்கும் பொறுப்புள்ளது. இதில் இருக்கும் விடயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு, தேடிப் பார்ப்பதற்கு. இதில் யார் அமர்ந்திருந்தததல்ல. நாலக சில்வா சஹ்ரானின் குழுவை தெளிவாக இனங்கண்டு கொண்டார். அவர் சஹ்ரான் குழுவைப் பற்றி பல வருடங்களாக பலோ செய்து கொண்டு வருகின்றார்" என்றார்.

Comment (0) Hits: 74

கோட்டாவின் குடியுரிமை; தேர்தல் ஆணைக்குழுவிற்கு சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படவில்லை! (காணொளி)

கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை நீக்கிக் கொள்ளப்பட்டதற்கான அனைத்து ஆவணங்களையும் தோ்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக கோட்டாபயவின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய விடயங்கள் அப்பட்டமான பொய் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அமைச்சர் அஜித் பீ.பெரேரா மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோர் இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சென்று வினவிய போது, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது அவரது பிரதிநிதியோ அவ்வாறான எந்த சான்றிதழையும் தமக்கு வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவிற்குச் சென்று திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்.

“இன்று நாம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கச் சென்றோம். விஷேடமாக மொட்டுக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபயவினால் அவரது இரட்டைப் பிரஜா உரிமையை சட்டரீதியான நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வழங்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குமாறு நாம் எழுத்து மூலமான கோரிக்கையினை முன்வைத்தோம்.

நாம் அந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையாளரிடம் வழங்கிய போது, அவ்வாறான எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு எமக்கு வழங்காத ஒன்றை எவ்வாறு நாம் வழங்குவது என அவர்கள் கூறினார்கள். எனவே விஷேடமாக நாம் கூற விரும்புவது என்னவெனில், கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையேயாகும்.  அவர் ஒரு தவறான வேட்பாளர். இவ்வாறான வேட்பாளர் ஒருவருக்கு நாம் வாக்களித்தால் வெற்றி பெறப் போவது அமெரிக்கர் ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதியாவதாகும்” எனறார்.

Comment (0) Hits: 46

'நாட்டைப் பிரிக்குமாறு கோரவில்லை; எமக்கான உரிமைகளையே கேட்கிறோம்' -மாவை சேனாதிராசா!

'நாங்கள் நாட்டைப் பிரிக்குமாறு நாம் கோரவில்லை. எங்களுக்கான உரிமைகளை வழங்குமாறுதான் கோருகின்றோம்.வேட்பாளர் சஜித்துடன் எந்தவித ஒப்பந்தமும் நாம் செய்யவில்லை. அதேநேரம் எந்தவித நிபந்தனையும் விதிக்கவும் இல்லை' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர  தெரிவித்துள்ளார்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இத்தேர்தல் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் அறிவித்தும் இருக்கின்றோம். அதற்கமைய மக்கள் செயற்படுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.நான் சார்ந்த தமிழரசுக் கட்சி இத்தேர்தல் குறித்ததான தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அதே போல கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ரெலோ,புளொட் ஆகிய கட்சிகளும் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளன. நாங்கள் ஒற்றுமையாக, கூட்டமைப்பாக இணைந்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானமெடுத்து அறிவித்துள்ளோம்.

கேள்வி: அவ்வாறாயின் தமிழ்க் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளின் நிலைமை என்ன?

பதில்: தமிழ்க் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிய உடனேயே கோட்டாபய அதனை தான் நிராகரிப்பதாக கூறியது மட்டுமல்லாமல், இந்தக் கோரிக்கைகள் என்பது நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக கூறியிருந்தார். அதே போல மகிந்த ராஜபக்சவும் அவர் சார்ந்த அணியினரும் நேற்று வரையில் இந்தக் கோரிக்கைகள் நாட்டைப் பிரிப்பதாக இனவாத ரீதியில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.உண்மையில் இந்தக் கோரிக்கைகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் 1951 ஆம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டிருந்தவைதான். அங்கே தனிநாடு கோரப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் இது சமஷ்டி கோரிக்கை என குறிப்பிட்டு மஹிந்த, கோட்டாபய உள்ளிட்ட தரப்பினர் சிங்கள மக்கள் மத்தியில் வாக்குகளைப் பெறுவதற்கான தீவிரமான பிரசாரத்தை இனவாத ரீதியாகச் செய்யத் தொடங்கினர். அதேநேரத்தில் சஜித் பிரேமதாசா இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி இருக்கின்றார். அதனை பகிரங்கமாகவும் தெரிவித்து வருகின்றார்.

கேள்வி: இத்தேர்தலில் எதனை அடிப்படையாக வைத்து சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை கூட்டமைப்பு எடுத்தது?

பதில்: சஜித் பிரேமதாசா வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான ரணில், மங்கள, ராஜித, சஜித் என பலர் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் கோட்டாபய ராஜபக்‌ஷ சுமந்திரனுடன் பேசியிருக்கின்றார். அதே போல மகிந்த ராஜபக்ஷவுடனும் பேசியுள்ளார்.ஆனால் மகிந்த,கோட்டாபய ஆகியோர் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வொன்றை எடுத்திருக்கவில்லை. அதற்கு எதிர்மாறான கருத்துகளை மட்டுமே சுமந்திரனுடன் பேசியிருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ஷ ஒன்றரை மணி நேரம் சுமந்திரனுடன் பேசிய போதும், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை.கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்காக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம் சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சினை குறித்து துணிச்சலாக மக்கள் மத்தியில் பேசி வருகின்றார். ஆனால் சஜித்தின் இந்த நிலைப்பாடு நாட்டைப் பிளவுபடுத்துமென்று மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் தீவிரமாக பேசி வருகின்றனர். வடக்கு, கிழக்கு போரினாலே பாதிக்கப்பட்ட பிரதேசம் என்று அடையாளப்படுத்தி வடக்கு,கிழக்கை மீளக் கட்டியெழுப்ப ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுமென்று சொல்லியிருக்கின்றார். அதே போன்று தொழில்துறைகளை தொடங்குவது சம்பந்தமாக, வேலைவாய்ப்பு சம்மந்தமாக எழுத்து மூலமாகவே பல விடயங்களை அறிவித்திருக்கிறார்.எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்தது.

கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை பரிசீலித்து நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். அரசியல் தீர்வு, நிலங்கள் விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் குறித்தும் சஜித்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி: உங்களது இந்த முடிவால் தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி நாட்டைப் பிரிக்கப் போகின்றார்கள் என தெற்கில் இனவாத ரீதியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறதே?

பதில்: தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்று நாம் கோரி வருகின்றோம். அதற்காக நாம் செயற்பட வேண்டியது அவசியமானது. அதனால் இத்தேர்தலில் நாம் யாரையும் ஆதரிக்காமல் பகிஷ்கரிக்க முடியாது. இவ்வாறு பல காரணங்களின் அடிப்படையில் நாம் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்.

எதனைச் செய்தாலும் இனவாத ரீதியாக பார்க்கின்ற தரப்புகள் இருக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.நாங்கள் நாட்டைப் பிரிக்குமாறு கோரவில்லை. எங்களுக்கான உரிமைகளை வழங்குமாறுதான் கோருகின்றோம்.சஜித்துடன் எந்தவித ஒப்பந்தமும் நாம் செய்யவில்லை. அதேநேரம் எந்தவித நிபந்தனையும் விதிக்கவும் இல்லை. அவ்வாறு எதுவும் இல்லாமலேயே நாம் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.எமது ​கோரிக்ைககள் நாட்டைப் பிளவுபடுத்தாது. நாட்டை ஐக்கியப்படுத்தும் என்பதை இனவாதம் பேசுகின்ற தரப்பினர்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றோம்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர மற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று சொல்லியுள்ளனர். விக்னேஸ்வரன் உட்பட ஏனையவர்கள் பகிஷ்கரிக்க சொல்லவில்லை. ஆழமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென்றுதான் சொல்லியுள்ளனர். ஆனபடியால் நாங்களும் ஆழமாகச் சிந்தித்து தேர்தல் அறிக்கைகளை மையப்படுத்திய ஆய்வுகளைச் செய்து முடிவுகளை எடுத்துள்ளோம்.

கேள்வி: சுயேச்சையாக களமிறங்கியிருக்கும் சிவாஜிலிங்கம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: பொது வேட்பாளர் சம்பந்தமாக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னர் தான் பேசப்பட்டு, ஆராயப்பட்டிருக்கின்றது. பொதுவேட்பாளரை நிறுத்தி வாக்கைச் சிதறடிக்க நாங்கள் எண்ணவில்லை. அதனை விட மதகுருமார் சிவில் அமைப்புக்கள் எல்லோரும் எமது தலைவர் சம்பந்தனை சந்தித்து போட்டியிடுமாறு கேட்டனர்.அவர் சம்மதிக்கவில்லை. நாங்களும் விரும்பவில்லை.சிவாஜிலிங்கத்தை பொது வேட்பாளராக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சார்ந்த கட்சி கூட அவரை பொது வேட்பாளராக நிறுத்த தீர்மானம் எடுக்கவில்லை. அவரை இப்போது வெளியேற்றி விட்டார்கள். அவர் இதற்கு முன்னரும் தன்னிச்சையாக வேட்பாளராக நின்றிருக்கின்றார். அவர் பொது வேட்பாளராக நிற்க பொருத்தமற்றவர் என்பதுதான் எமது நிலைப்பாடு.அவருடைய கட்சியே அவரை அப்படி ஆதரிக்காத நிலையில் அதைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. தேர்தல் காலத்தில் வாக்கை சிதறடித்து கோட்டாபயவிற்கு மக்கள் வாக்களிக்கின்ற நிலைமையை உருவாக்கி, ஒரு அபாயகரமான நிலைமையை ஏற்பட்டு விடக் கூடாது. சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இவ்வளவு தூரம் பேசிய பின்னர் பொது வேட்பாளர் குறித்து பேசுவது அர்த்தமற்றது. அவர் ஒரு சிறந்த வேட்பாளர். சிறந்த கொள்கைகளை அறிவித்திருக்கிறார். அவரை ஆதரிப்பதென்ற தீர்மானம் எடுத்த பிறகு பொது வேட்பாளர் குறித்து பேசுகின்ற அவசியம் எங்களுக்கு இல்லை.

கேள்வி: சஜித் பிரேமதாசவிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கின்ற நிலையில், அவரின் பிரசாரக் கூட்ட மேடைகளில் கூட்டமைப்பு ஏன் கலந்து கொள்ளவில்லை?

பதில்: நாங்கள் கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம். மேடை ஏற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. நாங்கள் எங்கள் தனித்துவமான தீர்மானங்களை அவர்களுடன் பேசியிருக்கிறோம்.இவ்வாறான நிலைமையில் நாங்கள் அறிக்கையை வெளியிட்டால், தீர்மானத்தை எடுத்தால் அதனை இனவாதமாக சிங்கள மக்கள் மத்தியில் பேசி வாக்குகளைப் பெற மற்றைய தரப்புக்கு சந்தர்ப்பம் கொடுக்க விரும்பவில்லை. ஒரு வார்த்தையை சொன்னாலே அதைப் பயன்படுத்தி, இனவாதத்தைப் பரப்பி வாக்குகளைப் பெற எதிர்பார்த்துள்ளனர்.நாம் மேடை ஏறினால் அதைப் பயன்படுத்தி இன்னும் இனவாதத்தை விதைப்பர்.எனவேதான் மேடைகளில் ஏறுவதை நாங்கள் தவிர்த்திருக்கிறோம்.ஆயினும் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளோம். முதலில் நாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை என்று பேசியவர்கள் இப்போது மேடையில் ஏறவில்லை என்று சொல்லப் பார்க்கிறார்கள். நாங்கள் மேடை ஏறாமல் எங்களுடைய கடமையை நிறைவேற்றுவோம். மக்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்றுவார்கள். மக்களுக்கு தலைமையை வழங்குவது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்பின் கடமையாக இருக்கின்றது. அது தவிர, மேடையில் ஏறி இன்னும் சிங்கள இனவாதத் தீயை தெற்கிலே வளர்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது.

கேள்வி: சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டுமென அமைச்சர் மனோக ணேசன் விடுத்துள்ள கோரிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இப்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது. இந்தத் தேர்தல் குறித்தே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். ஆகையினால் அடுத்த அரசாங்கம் அமைவது குறித்தோ அல்லது அதில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது குறித்தோ இப்போது கேள்விகள் எழவில்லை. நாங்கள் வழமையாக அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசியல் பங்காளிகளாக இருக்க விரும்பவில்லை. ஆகையினால் அதைப் பற்றி இப்போது நாங்கள் ஆராயவில்லை. வருகின்ற சூழ்நிலையைப் பொறுத்து ஆராய்ந்து முடிவெடுப்போம். அமைச்சுப் பதவிகளைப் பெறுகின்ற அப்படியான எண்ணமும் எங்களுக்கு இல்லை.ஆனாலும் வருங்கால சூழ்நிலை அதனைத் தீர்மானிக்கும்.

(தினகரன்)

Comment (0) Hits: 54

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும் - மஹேஷ்!

ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவது பொருத்தமில்லை. நீதிபதிகள் தீர்பொன்றை வழங்குவதாக இருந்தால் அது சாதாரணமாக வழங்கமாட்டார்கள். அதனால் நீதிமன்றத்துடன் தொடர்புபட்ட விடயங்களை நீதிமன்றங்களுக்கே அதனை விட்டுவைக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Comment (0) Hits: 55

கோத்தபாயவுக்கு தொடரும் சிக்கல்! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் தகவல்களால் அம்பலமான உண்மை!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைகப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் அலி சப்ரி அறிவித்திருந்தார்.

எனினும் அவ்வாறான எந்தவொரு ஆவணமும் பெற்றுக் கொள்ளவில்லை என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவையுடன் நேற்று இடம்பெற்ற கலந்துயரையாடலின் போது தேர்தல்கள் ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர்,

இந்தக் கேள்வி என்னிடம் கேட்க வேண்யது அல்ல. எனினும் பதிலளிக்காமல் செல்ல முடியாதல்லவா. தேர்தல் ஆணைக்குழுவினால், வேட்புமனு நிராகரிப்பிற்கான காரணம் தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்த முடியும்.

அதனால் எந்த ஒரு வேட்பாளரும், சிறைத்தண்டனை அனுபவித்துள்ளாரா? தகுதிகளுக்கு உட்பட்டுள்ளாரா? அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களுடன் ஈடுபட்டுள்ளாரா? குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளதா? என்ற விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த கடிதத்தையும் கேட்காது. இது தொடர்பில் அவதானமும் செலுத்தப்படாது.

எனினும், வேட்புமனுவில், தான் எந்த ஒரு தகுதியற்ற விடயங்களுக்கும் உட்படவில்லை, இதில் நான் போட்டியிட விரும்புகிறேன் என வேட்பாளர் கையொப்பமிட வேண்டும். சமாதான நீதவான் அந்த கையொப்பத்தை உறுதி செய்ய வேண்டும்.

அதனை தவிர்த்து ஒருவர் 35 வயதிற்கு அதிகமாக இருக்க வேண்டும். வயது குறைந்தவாராக இருந்தால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். 35 வயதிற்கு குறைவாக இருந்து 35க்கு வயதிற்கு அதிகம் என பொய் தகவல் கூறினால் அதனையும் தேர்தல் ஆணைக்குழுவினால் விசாரிக்க முடியாது.

அதற்கமைய குடியுரிமை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் நாங்கள் கேட்பதும் இல்லை பெற்றுக்கொள்வதும் இல்லை. குறைந்த பட்சம் அடையாள அட்டையின் மாதிரி தாள் ஒன்றையேனும் நாங்கள் கேட்பதில்லை.

நாங்கள் யாரிடமும் எந்த ஆவணத்தையும் பெறவில்லை. எங்களுக்கு அவசியம் இல்லை. நான் ஒரு கடிதத்தையேனும் பார்க்கவும் இல்லை. எங்கள் அதிகாரிகள் அவசியமான விடயங்களை மாத்திரமே பார்த்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வெளியிட்ட கருத்து முற்றிலும் போலியானதென உறுதியாகியுள்ளது என கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Comment (0) Hits: 68

'ஷங்ரி-லா கமிஷனில் "தங்கால்ல பே" ஹோட்டல் விலைக்கு வாங்கப்பட்டது' - சம்பிக்க ரணவக்க! (காணொளி)

கொழும்பு காலி முகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகத்தை விற்பனை செய்து பெற்ற பணத்தை ராஜபக்சவினர் சொகுசு வாழ்க்கைக்காக செலவு செய்திருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஷங்கரிலா நட்சத்திர விடுதி அமைப்பதற்காக விற்பனை செய்யப்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பின் ஊடாக பெற்ற பணத்தில் பல்வேறு சொத்துக்களையும் ராஜபக்சவினர் கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் பட்டியலிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“மோசடி குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்தபோது அரசியல் வழிவாங்கல், சேறு பூசல்கள் என்று ராஜபக்சவினர் தெரிவித்துவந்தனர்.

ஒரு டொலரையாகினும் தாம் மோசடி செய்ததாக நிரூபித்தால் கழுத்தை அறுத்துக்கொள்வதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்நிலையில், ஷங்கரிலா விடுதி மற்றும் இராணுவத் தலைமையம் மாற்றலுக்குப் பின்னால் இருக்கின்ற மோசடிகளை அம்பலப்படுத்துகிறேன்.

பிரித்தானியர் காலத்திலிருந்து காலி முகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகத்தை இரண்டு பகுதிகளாக கடந்த அரசாங்கம் விற்பனை செய்தது. 2010ம் ஆண்டில் 06 ஏக்கர் நிலத்தை 8250 மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் 2011ம் ஆண்டில் மேலும் 04 ஏக்கர் வழங்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு காணிகளை விற்பனை செய்வதாக இப்போது கூறுகின்ற மகிந்தவே அன்று இந்த நிலத்தை விற்றார்.

மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பிலிருந்த காணி உரிமம் வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கு இந்தக் காணியை வழங்கியிருக்கின்றார்.

தனியார் நிறுவனங்கள் இரண்டை வைத்து இதற்கான சரியான ஆவணங்கள் சிங்கப்பூரில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. 05 மில்லியன் டொலர்கள் இதற்காக ராஜபக்சவினருக்கு வழங்கப்பட்டது.

இதில் பெறப்பட்ட பணத்தின் மூலம் தங்காலையில் சொகுசு உணவகம் ஒன்றும் நாமல் ராஜபக்சவினால் கொள்வனவு செய்யப்பட்டது.

இராணுவத்தினரை தலைமையகத்திலிருந்து வெளியேற்றி அதில் பெற்ற பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள மகிந்த ராஜபக்ச, தனது கழுத்தை வெட்டுவாரா இல்லையா என்பதில் பிரச்சினையில்லை.

ஆனாலும் இந்த ஆதாரங்கள், அரசியல் சேறுபூசுதலா இல்லையா என்பதை அவர்கள் கூறவேண்டும். அதேபோலவே இராணுவத் தலைமையகம் விற்பனை செய்யப்பட்டு பெற்ற தரகுப் பணத்திலா பசில் ராஜபக்சவின் மல்வானை இல்லமும் வாங்கப்பட்டது.

அதேபோல நாமல் ராஜபக்சவுக்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பெற்ற தரகுப் பணத்தில் தங்காலையில் சொகுசு விடுதி ஒன்றும் வாங்கப்பட்டமைக்கும் ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Comment (0) Hits: 68

அலி சப்றியால் கோத்தாபயவிற்கு புதிய நெருக்கடி!

கோத்தபாய ராஜபக்சவின் பிரதான சட்ட ஆலோசகரும் அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய நபராக செயற்படும் சட்டத்தரணி அலி சப்றியின் கருத்துக்கள் மற்றும் செயல்கள், பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சியின் தலைமையிடம் கருத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இப்படியான முக்கியமான தேர்தல் பிரசார கட்டமைப்பில் அரசியல் தெரியாத அலி சப்றி போன்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பது கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலில் மது மாதவ அரவிந்த பிவித்து ஹெல உறுமயவில் இருந்து நீக்கப்பட்ட போது, தானே கோத்தபாய ராஜபக்சவுக்கு அழுத்தங்களை கொடுத்து அவரை நீக்கியதாக அலி சப்றி கூறியதன் மூலம் சிங்கள வாக்கு வங்கிக்கு சேதத்தை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அடிவாங்க நேரிடும் என கூறி முஸ்லிம் வாக்கு வங்கிக்கும் தேசத்தை ஏற்படுத்தினார்.

மூன்றாவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அடிப்படைவாதிகள் இருப்பதாகவும் மருத்துவர் ஷாபியின் நாடகம் அவர்களின் உருவாக்கம் எனக் கூறி கட்சிக்கு அவமதிப்பை ஏற்படுத்தினார்.

அது மாத்திரமல்ல கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை சம்பந்தமான ஆவணங்களை சாதாரண மக்களுக்கு காட்ட வேண்டிய தேவையில்லை எனக் கூறி, சாதாரண மக்களின் கோபத்தை தூண்டியுள்ளார்.

அத்துடன் அந்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்து, மற்றுமொரு சிக்கலை உருவாக்கினார்.

இறுதியாக கோத்தபாய ராஜபக்ச கையெழுத்திடாத சத்திய கடிதம் ஒன்றை பகிரங்கப்படுத்தி அவரது தேர்தல் பிரசாரத்தை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றார் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையிடம் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சட்டத்தரணி என்ற வகையில் அலி சப்றி மிகவும் திறமையானவர் எனவும், தனது தரப்பு வாதிகளை அச்சுறுத்தி கட்டணத்தை தீர்மானிக்கும் விதத்தில் சாதாரண மக்களை அச்சுறுத்தி வாக்குகளை பெற முடியாதென்பது அவருக்கு புரியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அலி சப்றி கோத்தபாயவின் வாக்குகளை சிதறடிக்கும் இயந்திரம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Comment (0) Hits: 93

'கொலைகாரர்கள், பாலியல் குற்றவாளிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்க மாட்டேன்' - சஜித்!

நீதிமன்றத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் எந்தவொரு குற்றவாளிக்கும் தனது ஆட்சிக்காலத்தில் பொது மன்னிப்பை வழங்க போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கமுவை நகரில் நேற்று (11) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

பெண்ணொருவர் கொலை செய்த கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை கண்டிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தி, சட்டம், ஒழுங்கை பாதுகாத்து அதன் ஊடாக பயங்கரவாதிகளையும் போதைப் பொருள் வியாபாரிகளையும் நாங்கள் அழிப்போம்.

கப்பம் பெறும் அரசியல் மற்றும் கொலையாளிகளை நாங்கள் அழிப்போம்.

பாலியல் குற்றங்களை செய்வோரை அழிப்போம். இப்படியான கடுமையான குற்றங்களை செய்த, சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மாட்டேன் என்பது உறுதியாக கூறுகிறேன் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகளை பார்த்து கொண்டிருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதியை போன்று ஒருபோதும் நான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டேன் என்று தெரிவித்தார்.

இதேவேளை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

2005 ஆம் ஆண்டில் றோயல் பார்க் வைத்து சுவீடன் நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 74

ஷிரமந்த ஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரதன தேரர்!

றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமந்த ஜூட் எண்டனி என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வந்தவர் அத்துரலிய ரத்ன தேரராகும்.

ஆயுள் தண்டவை வழங்கப்பட்டிருந்த இவ்வாறானர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது  தொடர்பில்  ஜனாதிபதி  மீது  கடும் எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளதுடன்,  இந்நிலையினுள்  இவ்விடயத்திற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணங்களைத் தெளிவு படுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக நிறுவனங்களுக்கு விஷேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமன் ஜூட் எண்டனி என்பவர் தொடர்பில் இருந்த நியாயமான விடயங்களை மனிதாபிமான முறையில் கவனத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமயத் தலைவர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு எழுத்துமூலமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக முக்கிய பங்கெடுத்து சிறப்பான செயற்பாடுகளைச் செய்து தேவையான தலையீடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் மேற்கொள்ளப்பட்டதோடு, அவரால் இவ்விளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கவும்  வைத்துள்ளார்.

அத்துடன் ரத்ன தேரரினால் இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கையுடன் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 56

கோட்டாபய வந்தால் ஆபத்து! சஜித்திற்கு வாக்களியுங்கள்! - பிரபல பாடகர் சுனில் பெரேரா!(காணொளி)

இயற்கை என்ற ஒன்று உள்ளதுதானே. வேறு யார் வந்தாலும் எனக்குப் பிரிச்சினையில்லை, அந்த ஆபத்தான நபர் வந்துவிடக் கூடாது என்றே நான் கூறுகின்றேன். அவர் வந்தால் அவ்வளவுதான். எனவே சற்று சிந்தித்து 16ம் திகதி சஜித்திற்கு வாக்களியுங்கள்” என பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“புரவெசி பலய” அமைப்பின் கூட்டம் ஒன்றின் போது இந்த வேண்டுகோளை விடுத்த சுனில் பெரேரா, தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

“இந்த தேர்தலில் நாம் அமைதியாக இருக்கவே இருந்தோம். அல்லது சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு அல்லது ரொஹான் பல்லேவத்தைக்காவது ஓட்டு போடுவதற்கே நினைத்திருந்தோம். ஆனால் அதன் பின்னர் வீட்டாரும் ஏனையவர்களும் இணைந்து நாம் எடுத்த தீர்மானத்திற்கான காரணம் வேறு எதுவுமில்லை, பயமே காரணமாகும். அச்சம், அச்சம், அச்சம்  கடும் அச்சம். ஒரு வேட்பாளருக்கு கடும் பயம்.

பிரதான வேட்பாளர்கள் இருவர்தானே இருக்கின்றார்கள். ஒருவர் மீதுள்ள பயத்தினால் சுயேட்சை வேட்பாளருக்கு நாம் வாக்களித்தோம் என வைத்துக் கொள்வோமே. அப்படிச் செய்தால் நாம் பயப்பட்ட வேட்பாளருக்கு அது சாதகமாக அமைந்துவிடும். அப்போது நாம் எங்கு வாக்களித்தாலும், யாருக்கு வாக்களித்தாலும் அப்போது சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் குறைந்து போய்விடும்.

எனவே இந்த நேரத்தில் நாம் அனைவரும் சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Comment (0) Hits: 64

கோட்டாபய அமெரிக்கராக இருந்தாலும் பிரச்சினையில்லை! அவரை ஜனாதிபதியாக்குவோம்” - TNL இஷிணி விக்ரமசிங்க!

“கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அமெரிக்கன் பிரஜையாக இருந்தாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. அவர் சந்திரனில் பிறந்திருந்தாலும் பிரச்சினையில்லை. 100 வீதம் அவரை எமது அடுத்த ஜனாதிபதியாக்கிய தீருவோம்” என TNL  தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இஷிணி விக்ரமசிங்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூத்த சகோதரரின் மகளான இஷிணி, தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 71

பலாலி - சென்னை இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பமானது. அதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் இன்று இந்தியாவின் சென்னை நகரத்திற்கு பயணமானது.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான வாராந்த விமான சேவை ஆரம்பமானது தொடர்பில் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சஞ்சீவ விஜயரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

எயார் இந்தியாவின் உப நிறுவனமான அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது இலங்கை விமான சேவைகள் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். அத்துடன் உள்ளுர் தனியார் விமான சேவையான பிட்ஸ் எயார் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் திருச்சிக்கும் விமான சேவையை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பல பிரயாணிகள் யாத்திரைக்காக இந்தியா சென்று வருகின்றனர். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான இந்திய உல்லாச பயணிகள் இலங்கை வருகின்றனர். இது இலங்கையின் பொருளாதாரத்தை பெருமளவு ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. பலாலிக்கும் தென்னிந்திய விமான நிலையங்களான சென்னை மற்றும் திருச்சிக்கான விமான கட்டணங்கள் 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் வழிநடத்தலின் பேரில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் பலாலியில் அமைந்துள்ள யாழப்பாண சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலாவது விமான சேவையில் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டார். இதன் போது ' இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக  ' ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 65

ஜனாதிபதி முன்வைக்க இருந்த அமைச்சரவை பாத்திரத்தை ஏன் அவசரமாக மீளப்பெற்றார்?

ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களை நிரந்தர அரச சேவைக்கு உளவாங்குதல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முன்வைத்த அமைச்சரவை பாத்திரத்தை அவர் மீளப்பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களாக பணியாற்றி இருந்தாலும் ஐந்து ஆண்டு சேவையை நிறைவு செய்யாதவர்களாவார்கள்.

எனவே அவர்களை நிரந்தரமாக்குவதில் சிக்கல் நிலை தோண்டிறியுள்ளது.

இருப்பினும், அமைச்சரவை கூட்டத்திற்கு குறித்த பாத்திரம் சமர்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி அதனை மீளப்பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களாக பணிபுரிந்த 700 பேரை நிரந்தரமாக அரச சேவைக்கு உள்வாங்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரங்களை ஜனாதிபதியும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் வெவ்வேறாக சமர்ப்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 61

பக்கம் 7 / 70