V2025

செய்தி

அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் வழங்குவேன்- சஜித் பிரேமதாச!

ஒரு மித்த   இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை  10.30 மணியளவில் கூட்டம் இடம் பெற்றது.

இதன் போது அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், ரவூப்ஹக்கீம், மனோ கணேசன், விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ரி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்ட தோடு, உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர். இதன் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தற்போது அத்திட்டங்களை முன்வைக்கக் காத்திருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இன,மத கட்சி பேதமின்றி மீண்டும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.நெடுங்குளம், அவலங்குளம் போன்ற நீர்த்தேக்கங்களை அபிவிருத்தி செய்து குளங்களை அபிவிருத்தி செய்து உங்களுடைய விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்  எனத் தெரிவித்துள்ளார். 

தலைமன்னார், பேசாலை, சிலாவத்துரை போன்ற பகுதிகளில் உள்ள துறைமுகங்களை எனது தலைமையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார்.தலைமன்னாரில் இருந்து திருகோணமலை வரையிலான நான்கு வழிப்பாதையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

அதே போன்று புதுத்தளத்தில் இருந்து மன்னார் வரையிலான வீதியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை வில்லத்துக் காட்டிற்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லாமல் அதனை இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதைக் கூறிக்கொள்ளுகின்றேன்.மீன்பிடியை அபிவிருத்தி செய்வேன். மீன் பிடி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான அணைத்து உபகரணங்களையும் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மீன்பிடி கைத்தொழில் துறையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.கடல் பிரதேசத்திலிருந்து 200 மையில்களுக்கு அப்பால் உள்ள கப்பல் துறைமுகங்களை எங்களுக்கு ஏற்றது போல் அதனை நடைமுறைப்படுத்தி அரசாங்கத்திற்குத் தேவையான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் உங்களுக்காக எடுத்துச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

விவசாயத்துரையை கட்டி எழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.காய்காரி பயிர்ச் செய்கை,பழச் செய்கை,சிறு பயிர்ச் செய்கை,சேனைப்பயிர்ச் செய்கை,தேயிலை, இறப்பர்,தென்னை பேன்ற செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இலவசமாகப் பசளையினை வழங்கி விவசாய துறையை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.

44 இலட்சம் மாணவர்கள் பாடசாலை செல்கின்றனர்.என்னுடைய தந்தை ரனசிங்க பிரேமதாச அன்றைய காலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகளையும் பகல் உணவையும் வழங்கியிருந்தார்.ஆனால், இப்போது எங்களுடைய பிரதி வாதிகள் அதனை நிறுத்தி இருக்கின்றார்கள்.எங்களுடைய அரசாங்கத்திலே நான் தலைமை வகிக்கின்ற அரசாங்கத்திலே எதிர்காலத்திலே இந்த 44 இலட்சம் மாணவர்களுக்கும் இலவசமாக இரண்டு சீருடைகளும்,ஒரு பாதணியும்,பகல் உணவையும் இலவசமாக என்னுடைய அரசாங்கத்திலே வழங்குவேன் என்பதை இந்த இடத்திலே உங்களிடம் உறுதியாகக் கூறிக்கொள்ளுகின்றேன்.

குறிப்பாக இந்த மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலகங்கள் இருக்கின்றது.குறித்த பிரதேசச் செயலகங்களுக்குக் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.மன்னார் மாவட்டத்தில் மாத்திரமல்ல நாடளாவிய ரீதியில் இருக்கின்ற அனைத்து பிரதேசச் செயலகங்களிலும் இந்த கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.அதன் மூலம் இளைஞர் ,யுவதிகளின் வேளைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம்.

ஒவ்வெறு பிரதேச செயலகங்களிலும் தொழில் நுற்பக்கல்லூரி ஒன்று உருவாக்கப்படும்.இதன் மூலம் தகவல் தொழில் நுட்பம்,கணனி தொழில் நுட்பம்,ஆங்கில அறிவு என்பவற்றை இலவசமாக வழங்கி இதன் மூலம் வெளியேறுகின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும் பிரதேசச் செயலகங்களில் உருவாக்கப்படும் தொழிற் பூங்கா என்கின்ற நிலையத்தினூடாக சேவையாற்றிச் சிறந்ததொரு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை என்னுடைய அரசாங்கத்தில் நான் எடுப்பேன்.

மேலும் புதிய டிஜிட்ரல் யுகத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் என்னுடைய அரசாங்கத்தில் எடுப்பேன் என்பதை இளைஞர் யுவதிகளுக்கு இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.ஏழை மக்களுக்கு தற்போது சமூர்த்தி என்கின்ற வேளைத்திட்டம் நடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையிலே இலங்கையிலிருந்து நாங்கள் ஏழ்மையை நீக்க வேண்டும்.

ஏழ்மை இந்த நாட்டிலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சமூர்த்தி வேளைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அன்று என்னுடைய தந்தை நெறிப்படுத்திய ஜனசவி என்கின்ற வேளைத்திட்டத்தையும் இந்த சமூர்த்தி திட்டத்தோடு இந்த மக்களுக்கு வழங்கி இந்த நாட்டில் ஏழ்மையை இல்லாது ஒழிப்பதற்கான அனைத்து வேளைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.

இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் வந்து சேறும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தற்போது கடமையாற்றுகின்ற பாலர் பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்க சம்பளத்தைப் பெற்றுத்தர என்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.மேலும் பாலர் பாடசாலைகளுக்கு தனித்தனியான கட்டிடங்கள்,பிள்ளைகள் விளையாடுவதற்குச் சிறுவர் பூங்கா,பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு ஆகியவற்றையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பேன்.உப ஆசிரியர்களுக்கும் அரசாங்க சம்பளம் வழங்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.பாலர் பாடசாலை கல்வியையும் இலவச கல்விக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்திலே முன்னெடுப்பேன்.மிக மிக முக்கியமான ஒரு விடையத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒருமித்த இந்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப்பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதே போன்று சிறுவர் துஷ்பிரயோகம்,இனவாதத்தை தூண்டுவோருக்கு உயர்ந்த பட்ச தண்டனையை வழங்குவதற்கு நான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.நான் ஒரு சிறந்த ஒரு பௌத்தன் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பௌத்த கொள்கைகளைக் கோட்பாடுகளைச் சிறந்த முறையில் பின்பற்றி நடக்கக்கூடிய ஒரு பௌத்தனாக இருக்கின்றேன்.இனத்தை வைத்தோ, மதத்தை வைத்தோ மதங்களை, இனங்களை ஒரு போதும் அழிக்க முடியாது. புத்த பெருமானும் ஒருபோதும் இனங்களை மையமாக வைத்து மதங்களை மையமாக வைத்து மத அழிப்பு நடவடிக்கைகளை, இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

 எனவே அதனை அடிப்படையாக வைத்து ஜாதி மத பேதங்களைக் கடந்து மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியின் உச்சக் கட்டத்திற்கு என்னுடைய அரசாங்கத்திலே நான் கொண்டு செல்வேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் மன்னார் மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியதோடு,ஆசி பெற்றார்.இதனைத்தொடர்ந்து குறித்த குழுவினர் மன்னார் திருக்கோதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 51

இலங்கையில் அரசியல் மறுபிரவேசத்திற்கு முயலும் சீனாவிற்கு நெருக்கமான குடும்பம்!

ஆசியாவில்  அகலக்கால் பதிக்கும் சீனாவின் முயற்சிகளின் மையமாக இலங்கையை மாற்றிய -கிளர்ச்சியை தோற்கடித்த -சர்ச்சைக்குரிய அரசியல் பரம்பரையொன்று இலங்கையில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றது.

தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் மூன்று தசாப்தகால கிளர்ச்சியை நசுக்கிய கோத்தாபய ராஜபக்ச நவம்பர் 16 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தமிழ் சிறுபான்மை இனத்தை சேர்ந்த கெரில்லாக்களிற்கு எதிரான வெற்றியை பெரும்பான்மை பௌத்த சிங்களவர்கள் பாராட்டும் அதேவேளை பாரியளவு மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

ராஜபக்ச அரசாங்கம் சீனாவிடமிருந்து மில்லியன் டொலர்களை பெற்று உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தது,இதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த தந்திரோபாயம் இலங்கையை மோசமான கடனாளியாக்கியது.

கடனிலிருந்து தப்புவதற்காக ராஜபக்சவின் சொந்த ஊரில் உள்ள துறைமுகத்தை இலங்கை சீனாவிற்கு வழங்கியது.

தற்போது மனித உரிமை விவகாரங்களும். இலங்கை   மீண்டும் சீனாவின் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளும் மேற்குலகில் தலைநகரங்களில் கரிசனையை அதிகரித்துள்ளன.

வோசிங்டன்  இந்தியா போன்ற தனது சகாக்களுடன் இணைந்து ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்ள முயல்கின்றது.பிராந்தியத்;தை சர்வதேச வர்த்தகத்திற்கான பகுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது,புதிய பட்டுப்பாதை திட்டம் ஆசியா முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்க முயல்கின்றது.

ராஜபக்சாக்களை அதிகளவு மேற்குலகு சார்பான அரசாங்கமொன்று தோற்கடித்தது,இந்த அரசாங்கத்தின் கீழ் இலங்கை இந்து சமுத்திரத்தில்  அமெரிக்க கடற்படையின் புதிய தளமாக மாறியது.

இலங்கை புதிய பொருளாதார உதவி திட்டத்தில் கைச்சாத்திடவேண்டும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா தனது படையினரின் பிரசன்னத்திற்கும் இலங்கை இணங்கவேண்டும் என விரும்புகின்றது.

ராஜபக்சாக்களின் ஆட்சியின் கீழ் இந்த ஒப்பந்தங்களிற்கு சாத்தியமில்லை என ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் தெரிவிக்கின்றனர்.

சகோதரர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றனர்.

தங்களது முன்னைய ஆட்சிக்காலத்தில் வேறு நாடுகள் நிதி வழங்காததன் காரணமாக சீனாவை நாடுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இம்முறை அமெரிக்கா உட்பட பல நாடுகளிடமிருந்து மூதலீடுகளை பெறமுயலப்போவதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் நாங்கள் சில தவறுகளை செய்தோம்,இம்முறை நாங்கள் மாற்றங்களை மேற்கொள்வோம் என்கின்றார் கோத்தபாயவின் பிரச்சாரத்திற்கு பொறுப்பாகவுள்ள அவரது சகோதரரான பசில் ராஜபக்ச

இலங்கையில்  மனித உரிமை விவகாரங்களில் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டால், கடந்த காலத்தை போல இலங்கைக்கான வர்த்தக சலுகையை மீண்டும் நிறுத்தவேண்டியிருக்கும் என ஐரோப்பிய நாடுகள் கவலை கொண்டுள்ளன.

2009 யுத்தவெற்றி மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்ட நிலையிலேயே பெறப்பட்டது என தெரிவிக்கும் விமர்சகர்கள்  பொதுமக்கள் இலக்குவைக்கப்பட்டனர்,சரணடைந்த போராளிகள் காணாமல் செய்ய்பபட்டனர் என தெரிவிக்கின்றனர்.

ராஜபக்சாக்கள் இரகசிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,அதிருப்தியாளர்களிற்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டனர்,பௌத்த தீவிரவாத சக்திகளுடன் தொடர்புவைத்துள்ளனர் – குடும்ப ஆட்சியில் ஈடுபட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

ராஜபக்சாக்கள் பெரும் சுமைகளுடன் வருகின்றனர், என தெரிவித்த மேற்குலகை சேர்ந்த சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் அவர்கள் யுத்தத்தை வென்றனர் ஆனால் அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்தனர்,கடந்த காலங்களில் இருந்து அவர்கள் பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனரா என்பதே பெரும் கேள்வி என்கின்றார்.

கடந்த ஐந்து வருடங்களில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்பு கூறுவதை நோக்கிய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சிவில் உரிமைகள் முன்னேற்றம் கண்டுள்ளன, ஆனால் ஊழல் குறித்த குற்றச்சாட்கள் காணப்படுகின்றன,ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன,பொருளாதாரமும் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தனது அரசாங்கம் ஊழல் ஒழிப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவி;ல்லை என்கின்றார் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட வீ;ழ்ச்சி இலங்கையையும் பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளோம்,தற்போது வெளிப்படையான வெளிவிவகார கொள்கையை கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளது.

கடந்த வருடம் பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததுடன் நாட்டை அரசமைப்பு நெருக்கடிக்குள் தள்ளின.

அடுத்த சில மாதங்களில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்ச பிரதமராக முயற்சிக்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்ட கோத்தாபாய ராஜபக்ச பாதுகாப்பு தொடர்பில் தனக்குள்ள திறமையை தேர்தல் பிரச்சாரங்களில் முன்வைக்கின்றார்.

சர்வதேச அளவில் காணப்படும் வலுவான மனிதர்கள் என்ற போக்கின்  தொடர்ச்சியே கோத்தாபய ராஜபக்ச என்கின்றார் ஜெயதேவ உயாங்கொட, பொதுமக்கள் மத்தியில் காணப்படு;ம் ஆழமான பாதுகாப்பின்மை குறித்த உணர்வுகளை இவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்கின்றார் இவர்.

மனித உரிமை மீPறல்களிற்காக சிறையில் இருக்கும் படைவீரர்களை விடுதலை செய்வேன்,யுத்த குற்றவாளிகளை விசாரணை செய்யும் ஐநாவின் திட்டத்திலிருந்து விலகுவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்கள் குடும்பம் ஆட்சியை கைப்பற்றினால் ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

கடந்த ஐந்து வருடங்களில் எதுவும் இடம்பெறவில்லை இதன் காரணமாக நாங்கள் எங்கள் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்கின்றார் அவர்.

ஆனால் இம்முறை கடனிற்கு பதில் முதலீடுகள் குறித்தே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்,அனைத்து நாடுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்கள் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டியுள்ளனர்.

எனினும் இலங்கையும் ஏனைய பல நாடுகளும் சீனாவாலேயே திட்டங்களை துரிதமாக நிறைவேற்றமுடியும் என்பதை உணர்ந்துள்ளன.

சீனாவால் மாத்திரமே இது முடியும், அந்த நாட்டின் வங்கியுள்ள, இலங்கையுடன் அந்த நாட்டிற்கு சிறந்த உறவுள்ளது, புதிய பட்டுப்பாதை திட்டமுள்ளது என தெரிவிக்கின்றார் ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய பேர்னார்ட் குணதிலக.

கோத்தபாய ராஜபக்சவை விட விரும்பத்தகாத  - சட்டபூர்வ தன்மையற்ற நபர்களுடன் அமெரிக்கா உறவை பேணியுள்ளது என சுட்டிக்காட்டும் ஹெரிட்டேஜ் பவுன்டேசனின் ஆய்வாளர் ஜெவ் ஸ்மித் கோத்தாபய ராஜபக்ச குறித்து  மேற்குலகின் கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன ஆனால் அவர் இலங்கையில் உண்மையாகவே பிரபலமானவராக காணப்படுகின்றார்,கோத்தபாய ஏதாவது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளில்  ஈடுபடும்  வரை நாங்கள் இலங்கை மக்களின் விருப்பத்தை மதிக்கவேண்டும் என்கின்றார்.

 

வோல்ஸ்ரீட் ஜேர்னல்

தமிழில் ரஜீபன்

Comment (0) Hits: 66

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தில் Fits Air விமான சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இன்று (08) விமான ஓடு பாதை பரிசோதனை இடம்பெற்றுவருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி விப்புல் குணத்திலக்க தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்திற்கு இன்று காலை 9.20 மணியளவில் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கியது.

பிற்ஸ் எயார் (Fits Air) விமான நிறுவனத்தின் விமானம் முதலாவதாக கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து சென்றது.

இந்த விமான சேவைக்கு உட்பட்ட ஊழியர்கள் சிலர் இந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். இதன் பின்னர் இந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. சென்னையில் இருந்து மீண்டும் பிற்ஸ் எயார் (Fits Air) விமான சேவையின் முதலாவது விமானம் இலங்கைக்கு வந்தமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காகும்.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் இந்த விமான சேவையில் இலங்கையர்களுக்கு பயணிப்பதற்கு வாரத்தில் 3 நாள் சந்தர்ப்பம் உண்டு.

 
Comment (0) Hits: 61

அக்குரேகொடயில் இராணுவ தலைமையகம் இன்று திறப்பு!

அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதி தலைமையில் இன்று (08) திறந்து வைக்கப்படவுள்ளது.

இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் பெலவத்த, அக்குரேகொடயில் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு 2011 மார்ச் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், இலங்கையில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டிட நிர்மாணத் திட்டம் இதுவாகும். அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகளையும் இந்த கட்டிடத்தொகுதி கொண்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டிடத்தொகுதிகளின் முதற்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இராணுவத் தலைமையகமும் அலுவலக கட்டிடத்தொகுதியும் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அந்த வகையில் இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தலைமை அலுவலகங்கள் விரைவில் இந்த கட்டிடத்தொகுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளதுடன், இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவுகளில் அமைந்திருப்பதுடன், வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டிடங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்டுவந்த 50 மில்லியனுக்கும் அதிக தொகையை இதன் மூலம் மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Comment (0) Hits: 56

மக்களின் உண்மையான தலைவர் சஜித்தே! - ஜே.வி.பி முன்னாள் எம்.பி ரணவீர பத்திரண!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டி நிலவுவது சர்வாதிகாரி ஒருவருக்கும், உண்மையான மக்கள் பிரதிநிதி ஒருவருக்குமிடையிலேயே என்றும், மக்களின் உண்மையான தலைவர் சஜித் பிரேமதாசவே என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன தெரிவித்துள்ளார். 

“இன்று இந்த நிமிடம் வரையில் இந்தத் தேர்தல் ஜனநாயகம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் ஒரு தேர்தலாக மாறியிருக்கின்றது. அது மாத்திரமல்ல, மறுபக்கத்தில் நோக்கினால்  பாசிசம் தொடர்பில்,  பாசிசவாதத்தை சமூகத்தினுள் ஊன்றச் செய்கின்ற தேர்தலாகவும் ஆகியிருக்கின்றது.

இந்த தேர்தல் மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும். காரணம் ராஜபக்ஷக்கள் இரண்டு தசாப்தங்களாக போட்டியிடும் சந்தர்ப்பத்திற்கு வந்திருக்கின்றார்கள். 2015ம் ஆண்டில் ராஜபக்ஷக்களைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான தேர்தலாக இது மாறியிருப்பது தலைவிதியாகும்.

இந்நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் புறத்திலிருந்து தற்போது கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் இரண்டு குவியல்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தேசப்பற்றாளர்களாகவும், மற்றையது நாட்டுக் எதிராகச் செயற்படும் அணியாக சுட்டிக்காட்ட முடியும் ” என்றார்.

Comment (0) Hits: 101

மங்களவின் சவால் : மெலேணியாவுக்குப் புறம்பாக மற்றொரு அமெரிக்க முதல் பெண்மனி! (காணொளி)

கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்க பிரஜையே என்றும், தற்செயலாக 16ம் திகதி அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாவது மாத்திரமின்றி, மெலேணியா ட்ரம்புக்குப் புறம்பாக மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி முதல் பெண்மனி கிடைக்கப் போவதாகவும், எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தனது அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொண்ட சான்றிதழை நாட்டு மக்களுக்கு காட்டுமாறும் தான் கோட்டாபயவுக்குச் சவால் விடுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இச்சந்தர்ப்பத்தில் அனைத்து இலங்கையர்களும் கவனத்திற் கொள்ள வேண்டியது MCC என்று மில்லேணியம் சேலேண்ஜ் ஒப்பந்தமன்றி, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு பிரதான வேட்பாளர் இன்னமும் அமெரிக்க பிரஜா உரிமையினை விலக்கிக் கொள்ளாத நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜைகளாகவே உள்ளார்கள் என்ற விடயத்தையேயாகும்.

அமெரிக்காவின் கடவுச் சீட்டைக் கொண்டவர் ஒருவர் அமெரிக்க குடியுரிமையினை உரிய முறையில் விலக்கிக் கொண்டால் ஐக்கிய அமெரிக்காவின் “தேசிய தன்மை இழப்புச் சான்றிதழ்” (Certificate of Loss Nationality) வுடன் அமெரிக்க திறைசேரியினால் அதனை அங்கீகரித்து வெளியிடப்படும் DS 4079 என்ற சான்றிதழும் அவரிடத்தில் இருக்க வேண்டும்.

2019ம் ஆண்டின் முதல் ஆறு மாத்தினுள் 1090 பேர் தமது குடியுரிமையினை விலக்கிக் கொண்டதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.  எவ்வாறாயினும் அமெரிக்கவின் 94 மாவட்ட நீதிமன்றங்கள் எதிலும் மேற்சொன்ன அங்கீகரிக்கப்பட்ட DS 4079 சான்றிதழ் கோட்டாபயவினால் சமர்ப்பிக்கப்படவில்லை.

Comment (0) Hits: 58

சஜித்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு!

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு பூரண ஆதரவு வழங்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான தீர்ப்பு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம் கூட்டமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் வரவேற்றுள்ளன.

Comment (0) Hits: 74

அரச புலனாய்வுச் சேவை கணிப்பீட்டு அறிக்கைகள் போலியானவை!

அரச புலனாய்வுச் சேவையினால் (SIS) மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புக்களுக்கு அமைய தத்தமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ஆகியோரின் சமூக ஊடக அணியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கதைகள் முற்றாக பொய்யானதாகும்.

ஜனாதிபதிக்கு மாத்திரம் பொறுப்புக் கூறுவதற்கு கட்டுப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவை (SIS) யினால் தேசிய தேர்தல்களின் போது மக்கள் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு அரச தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது சம்பிரதாயமாக இடம்பெற்று வருவதோடு, இம்முறை அவ்வாறான கருத்துக் கணிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும் பிரதான இரண்டு வேட்பாளர்களின் சமூக ஊடக அணிகளால் அரச புலனாய்வுச் சேவை மற்றும் NIB (NIB என்ற பெயரில் எந்த ஒரு பிரிவும் இதுவரையில் செயற்படவில்லை)  சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கை எனத் தெரிவித்து பல அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 73

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? - தனது கட்சி ஆதரவாளர்களுக்கு சந்திரிகா கூறும் கதை! (காணொளி)

வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சியை முன்னேற்றுவதற்கு, பலப்படுத்துவதற்கு அதிகளவான சந்தர்ப்பங்கள் கிடைப்பது யாரிடத்தில் என்பதை நன்கு சிந்தித்துப் பார்த்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கான நேரம் ஸ்ரீ.ல.சு.கட்சியினருக்கு வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் மஹிந்தவின் கும்பல் கடந்த காலங்களில் ஸ்ரீ.ல.சு.கட்சியை அழிப்பதற்கு முயன்ற போதிலும், ஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த ஐந்து வருட காலத்தில் அவ்வாறான அழுத்தங்கள்  மேற்கொள்ளப்படவில்லை என்றும், தற்போது ஐக்கிய தேசிய கட்சி உண்மையாகவே ஜனநாயகமடைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

UTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவித்த போது கூறியதாவது,

“இந்நேரத்தில் மிகவும் சிக்கலான தீா்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் என்னாலும் தீர்மானம் ஒன்றை எடுப்பது மிகச்சிரமமாகும். எனினும் வரும்காலங்களில் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கு நூறு வீதமல்லாத தற்காலிக தீா்மானத்தை எடுக்க வேண்டிவரும். இப்போதிருப்பது எனக்கெனில் அந்தளவு வெற்றிகரமானதல்லாத இரண்டு தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்பதேயாகும். அதில் எதில் அதிக வெற்றி உள்ளது எனப் பார்த்து அதனை எடுக்க வேண்டியுள்ளது.

இத ஒரு தற்காலிகமானது என நினைத்து வரும் காலத்தில் கட்சியை முன்னேற்றுவதற்கு, பலப்படுத்துவதற்கு அதிகளவில் எமக்கு யாரிடமிருந்து வாய்ப்புக்கள் கிடைக்கின்றது எனத் தேடிப்பார்த்து எம்மால் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  நாம் கடந்த நான்கு வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றோம்.  இந்தக் காலத்தில் எனில் ஐக்கிய தேசிய கட்சியினால் எமது கட்சிக்கு எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.

நாம் கேட்ட நிதிகளை எல்லாம் கேட்கும் நேரத்தில் வழங்கினார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கிய அளவு நிதியே எமக்கும் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியில் எமக்கு எந்த பாதிப்புக்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்தவில்லை. எனினும் எமக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது மொட்டுவின் மஹிந்த அணியேயாகும். அன்றும் பாதிப்புக்களைச் செய்தார்கள். இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

Comment (0) Hits: 61

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறையா..?

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரித்தபோதே திங்கட்கிழமை விடுமுறை தினம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 90

தபால்மூல வாக்களிக்க இறுதி சந்தர்ப்பம் இன்று!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே தபால்மூல வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று (07) வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை தாபல்மூலம் வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாக்களிக்க இன்று காலை 7 மணி முதல் 4 மணி வரை சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31 திகதியும், இந்த மாதம் 1 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றன.

ஆகவே, குறிப்பிட்ட அந்தந்த தினங்களில் வாக்களிக்க தவறிய தபால்மூல வாக்களர்களுக்கு இன்று இறுதி சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூலம் வாக்களிக்க இம்முறை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 317 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Comment (0) Hits: 60

அமெரிக்க ஒப்பந்தத்தில் பாதக விடயங்கள் இருந்தால் அரசியலிருந்து ஒதுங்குவேன்" - மங்கள! (காணொளி)

மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு (MCC) ஒப்பந்தத்தினூடாக அமெரிக்காவுக்கு ஒரு அங்குலம் காணியாவது வழங்கப்படுவதாகவோ அல்லது நாட்டுக்கு பாதகமான எந்த ஒரு வசனமாவது ஒப்பந்தத்தில் இருப்பதாகவோ நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமன்றி அரசியலிலிருந்தே ஒதுங்குவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று(06) நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"2006 செப்டம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜோர்ஜ் புஷ்ஷும் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இருந்த போதும் வெள்ளை வேன் கலாசாரம், ஆட்கடத்தல் என்பன உக்கிரமடைந்ததால் அமெரிக்கா இந்த உதவியை வழங்குவதை நிறுத்தியது.

உண்ணாவிரதமிருந்த பிக்குவுக்கு கோட்டாபய வழங்கிய கடிதத்தில் ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சுவசெரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பித்தபோது இந்திய ஆக்கிரமிப்பு இடம்பெறப்போவதாக மருத்துவர் சங்கம் எதிர்த்தது. ஆனால் அந்த சேவை இன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

தற்பொழுது அமெரிக்காவுடனனா எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பிசாசொன்றை காட்டி பயமுறுத்த முயல்கின்றனர். ஒரு பேர்ச் 180.10ரூபா வீதம் அமெரிக்காவுக்கு காணி வழங்கி அமெரிக்க இராணுவத்தை கொண்டுவரப் போவதாக நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமூக ஊடகங்களினூடாக பிரசாரம் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு முன்னர் அவசரப்பட்டு ஒப்பந்த செய்யப் ​போவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பல மாதங்கள் அமைச்சரவையில் ஆராய்ந்த பின்னரே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. டிசம்பர் 2ஆவது வாரத்தில் எம்.சி.சி. பணிப்பாளர் சபை கூடுகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையின் அனுமதியாவது பெற்றுத்தருமாறு கோரப்பட்டது.

தாமதமானால் நாட்டுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை இழக்க நேரிடும். பாராளுமன்ற அனுமதி கிடைத்த பின்னரே இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும். இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற சில மாதங்கள் செல்லும்.

போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு, காணி நிர்வாகம் என்பவற்றிற்கே இந்த உதவி வழங்கப்படுகிறது.

நாட்டுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை தடுக்க எதிரணி முயல்கிறது.

போக்குவரத்து நெரிசலால் வருடாந்தம் 8.1 டிரில்லியன் ரூபா பணம் விரயமாகிறது.

இது 2035 ஆகும் போது அதிகரிக்கும். மகாவலி நிர்மாணிக்க செலவிடப்பட்ட நிதியில் 13 வீதத்தை அமெரிக்கா தான் வழங்கியது. எமது 25.9 வீதமான ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கே செல்கிறது" என்றார்.

அமெரிக்கா அறிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரே மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறல் ஆகிய செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையுடன் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் மூலம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்கின்றது. இது இலங்கையில் வாழும் 11மில்லியன் மக்களுக்கு பயனளிப்பதாக அமையும்.

இந் நிதியுதவியைக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் நாட்டின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கலாம். இது பொது போக்குவரத்தையும் மாகாண வீதிகளையும் மேம்படுத்துவதாக அமையும்.

இலங்கையின் காணி நிர்வாகத்தை மேம்படுத்தும். இந் நிதியுதவி காரணமாக அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ குத்தகையை கொண்டதாகவோ இருக்காது. இந்த 05 வருட திட்டத்தை இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்.

Comment (0) Hits: 57

சந்தியா எக்னெலிகொடவினால் கோட்டாவுக்கு விளக்கம் கோரி கடிதம்!

“போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஏராளமான படை வீரர்கள் சிறைகளில் உள்ளார்கள். 17ம் திகதி காலையாகும் போது அவ்வாறான அனைத்து படைவீரர்களையும் விடுதலை செய்வேன்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது  தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கூறியது தொடர்பில் விளக்கம் கேட்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் கோட்டாபயவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய தெரிவித்துள்ள விடயத்தின் மூலம் தான் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் “சட்டத்தை அமுல் படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலும், சட்டத்தின் அரவணைப்பும் நியாயமானதாக இருக்க வேண்டும்” என்ற அரசியல் அமைப்பு உரிமை மீறப்பட்டுள்ளதாக சந்தியா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அந்தக் கூற்றானது, பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏவ்வகையான குற்றங்களைச் செய்வதற்கும், அவற்றை நியாயப்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதோடு, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறமையான, நேர்மையான அதிகாரிகளின் துணிச்சலை வெலவீனப்படுத்தும் செய்வதாக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Comment (0) Hits: 79

சஜித்தின் 'பேட்' பேச்சுக்கு ரொஷான் மகாநாமவின் கருத்து! (காணொளி)

1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னணி கிரிக்கட் வீரரும் ஐ.சீ.சீ யின் மூத்த போட்டி தீா்மானிப்பாளராகவும் பணியாற்றும் ரொஷான் மகாநாம, தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு, இந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் (பேட்) தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை சனத்தொகையில் 62 வீதமாக இருக்கும் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களை வேறாகப் பார்த்தலுக்கு எதிராக சமூக ஊடகம் மற்றும் ஊடகங்களுக்கு அப்பால் சென்ற செயற்பாடுகள் அவசியம் என்றும், சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் சந்தர்ப்பங்களுக்காகவும் அவர்களுக்கு சமத்துவம் வழங்குவது நாட்டுப் பிரஜைகளான எமது பொறுப்பாகும்.

பெண்களினது, பெண் பிள்ளைகளினது ஆரோக்கியத் தேவைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையானவைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால், அன்றாடம் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத பெண்கள் இன்றும் வாழும் நாட்டில், நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் ஆரோக்கிய தலைப்புக்கு அப்பால் சென்ற ஒன்றாக ஆகியிருக்க வேண்டியது என்றாலும் சிலர், இதற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் ரொஷான் மகாநாம தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தினுள் இவ்வாறான விடயங்களைப் பேசுவத்கு உள்ள தயக்கத்தினால் இவை மறைக்கப்பட்டுப் போன பிரச்சினையாகியுள்ளது. புதிய உலகில் வாழும் மக்களாக இந்த குறுகிய எல்லையிலிருந்து விலகி பெண்களது இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக கருத்துக்களை உருவாக்க வேண்டும்.

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை என்ற வகையில், தனக்கு அவர்களது தேவைகள் தொடர்பில் புரிந்துணர்வு உள்ளது என்றும், எனவே ஒட்டு மொத்த பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கு தான் பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் அந்தக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 74

'அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்; முடிந்தால் ஆவணத்தை சமர்ப்பியுங்கள்' - கோட்டாவிற்கு மங்களவின் சவால்!

கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா? என்று அவர் சவால் விடுத்தார்.

மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

Comment (0) Hits: 58

டெலோ, ப்ளொட் அமைப்புக்கள் சஜித்துக்கு ஆதரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA)  பிரதான கூட்டணிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்ததன் பின்னர் அக்கூட்டமைப்பின் ஏனைய இரண்டு கூட்டணிக் கட்சிகளான டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ப்ளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இவ்விரு அமைப்புக்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இச்சந்திப்பு பிரதமரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் ஐ.தே.கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு பேசப்பட்டுள்ளதோடு, சஜித் பிரேமதாசாவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் விரிவான முறையில் பிரதமரினால் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.  இந்தச் சந்திப்பின் பின்னர் குறித்த இரண்டு அமைப்புக்களின் தலைவர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருவதோடு, இத்தீர்மானத்தை அடுத்த இரண்டு தினங்களுக்குள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அனேக தமிழ் அரசியல்வாதிகளுக்கு  பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பது சஜித் பிரேமதாசாவின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்குள் இருக்கும் தெளிவின்மையே என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Comment (0) Hits: 60

சந்திரிகாவின் பதவி நீக்கம் ஒத்திவைப்பு! (காணொளி)

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் பிற்போடுவதற்கு நேற்று முன்தினம் (5) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டாரங்களில் நேற்று முன்தினம் (5) இடம்பெற்ற “நாம் ஸ்ரீலங்கா” மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பதில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாசாவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போதே, இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் கலந்துகொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கட்சி ஆலோசகா் பதவியிலிருந்து நீக்குதல் மற்றும் அவரது கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவது தொடர்பில், பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில் மத்திய செயற்குழுவில் இது தொடர்பாக பேசப்பட்ட போதிலும் எந்தவித தீர்மானங்களும் இவ்விடயமாக மேற்கொள்ளப்படவில்லை.

Comment (0) Hits: 69

'அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை அறிந்திருந்தேன்' - கோத்தாபய!

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாங்கள் தீவிரவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்தோம். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் 30 வருடகால போரினை முடிக்க முடியாதென்றும், இராணுவ ரீதியில் அதனை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களின் ஆலோசகர்கள் கூறினார்கள்.

எனினும் போரை முடிவுறுத்த இரண்டரை வருடங்களிற்குள் நடவடிக்கை எடுத்தோம். அன்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் என்போரை தீவிரவாதிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தினோம்.

ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது. என்னையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகவே கைது செய்ய முயற்சி செய்ததாக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ கூறினார்.

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டபோது எமது முன்னாள் புலனாய்வு அதிகாரி விசேடமாக அமைச்சில் பணிபுரிந்த அந்த அதிகாரி என்னுடன் தொடர்புகொண்டு இந்த படுகொலையை நிச்சயமாக விடுதலைப் புலிகள் செய்திருக்காது என்றும் இனவாதிகளின் செயற்பாடாக இருக்கலாம் எனவும் கூறினார்.

உடனே இரகசிய பொலிஸாரிடம் கூறும்படி நான் கூறினேன். என்ன நடந்தது? இறுதியில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட துப்பாக்கி சஹ்ரானிடமிருந்து மீட்கப்பட்டது.

ஆகவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்குவோம்” என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு – வவுனதீவு பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் நவம்பர் 29ம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படுகொலை இடம்பெற்றதன் பின்னர் இது தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் வெளியிடப்பட்டதோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக ஆரம்பித்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், வவுனதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 63

பக்கம் 9 / 70