V2025

செய்தி

"கோட்டாபயவின் அமெரிக்க காணொளி" தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமை சம்பந்தமாக வொஷிங்கடனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி மற்றும் இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை என வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பாக, குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்கு தேவையான தொழிற்நுட்ப உதவிகளை வழங்க திணைக்களம் இணங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த காணொளி கடந்த 15ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அப்போது தேர்தல் பரப்புரைகள் தடை செய்யப்பட்டிருந்தன.

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜையா இல்லை என்ற என்ற விடயம் தொடர்பான பிரச்சினை அப்போதும் முடிவுக்கு வந்திருக்கவில்லை.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய வாத விவாதங்களை திசைத் திருப்பும் நோக்கில் குறித்த காணொளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அப்போது வெளியிடப்பட்டிருந்தது.

Comment (0) Hits: 171

"சிறுபான்மையினத்தவர்கள் முன்னால் மண்டியிடாத சிங்கள தலைவரை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்"- ஞானசார தேரர்!

பல வருடங்களாக இலங்கை மன்னர்களின் முக்கிய பகுதியாக  விளங்கிய -சமீபத்தில் மதவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மலைகளின் நகரத்தில் , இலங்கை புதிய தலைவரை தெரிவு செய்திருப்பது குறித்து பௌத்த தலைவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கு இன்னொரு பொற்காலத்தை ஏற்படுத்துவார் அவர் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத ஒரு சிங்கள தலைவர் நாட்டிற்கு அவசியம் என்ற கொள்கையை நாங்கள் உருவாக்கினோம் என்கின்றார்,பௌத்தமதகுருவான ஞானசார தேரர்.

அந்த  கொள்கை வெற்றிபெற்றுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

ஞானசார தேரரும் அவரது பொதுபலசேனாவின் ஏனைய உறுப்பினர்களும்,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ச தமிழ் இன கிளர்ச்சிக்காரர்களுடனான போரை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக சிங்கள பௌத்தர்களால் பெரும்வீரராக கருதப்படுகின்றார்.

எனினும் அவர் யுத்த அநீதிகளில் ஈடுபட்டார்,அரசாங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற காணாமல்போகச்செய்யப்படுதலிற்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் அவர் குறித்து அச்சம்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களின் கோரிக்கைகளிற்கு அதிகளவு செவிமடுக்கின்றது என சிங்கள தேசியவாதிகள் கடந்த சில வருடங்களாக குற்றம்சாட்டி வந்துள்ளனர்.முன்னைய அரசாங்கத்தின் மீதே அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.அந்த அரசாங்கத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

இந்தியாவின் தென்பகுதி கரையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையின் 70 வீதமானவர்கள்- பௌத்தர்கள்- சிங்களவர்கள்.

சிங்களமன்னர்களினதும் அவர்களின் ஆலோசகர்களினதும் காலம் 1800 இன் ஆரம்பத்தில் முடிவிற்கு வந்தது. அவர்களை தோற்கடித்த பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் 1948 வரை இலங்கையை ஆண்டனர்.சுதந்திர இலங்கையில் பௌத்தத்திற்கு முதன்மை வழங்கப்பட்டபோதிலும் ஏனைய மதங்களிற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பௌத்த தேசியவாதம் தொடர்ச்சி வளர்ச்சியடைந்து வந்துள்ளது,இஸ்லாமிய தீவிரவாதத்தினால் உந்தப்பட்டவர்களினால் மேற்கொள்ள்பபட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலி;ல் 269 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பௌத்த தேசியவாதம் இலங்கை அரசியலில் முன்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது பௌத்தமதகுருமாருடன் அடிக்கடி தோன்றிய ராஜபக்ச அந்த தாக்குதல் குறித்து சுட்டிக்காட்டுவார்,மீண்டும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியவர் தானே என தன்னை  முன்னிலைப்படுத்துவார்.

தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெற்றுள்ள நிலையில்  இஸ்லாமியர்களை புறக்கணித்துவிட்டு  சிங்கள கலாச்சாரத்தை புதிய ஜனாதிபதி ஊக்குவிக்கவேண்டும் என ஞானசார தேரர் போன்றவர்கள் விரும்புகின்றனர்.

இஸ்லாமிய மத பாடநூல்களை இல்லாமல் செய்யவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹலால், புர்கா,இஸ்லாமிய வங்கி, காதீ நீதிமன்றம்,சரியா பல்கலைகழகங்கள் அனைத்தும் சமூக ஒருமைப்பாட்மை அழித்து விட்டன என பேட்டியொன்றில் ஞானசார தேரர் தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்சவினால் ஒரு சட்டம், ஒரு தேசம் ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்றார் அவர்.

ஜனாதிபதி ராஜபக்சவிற்கும் அவரது சகோதரர் பிரதமர் ராஜபக்சவிற்கும் தானே ஆலோசகர் என தெரிவித்தார் ஞானசார தேரர்.

கோத்தபாய ராஜபக்ச கடந்தகாலங்களில் ஞானசார தேரரை பாராட்டியுள்ளார்.

ஆனால் அவரது பேச்சாளர் மொகான் சமரநாயக்க இதனை நிராகரித்தார்.

உத்தியோகபூர்வமான ஆலோசகர்களும் உத்தியோகப்பற்றற்ற ஆலோசகர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றவேளை கோத்தபாய ராஜபக்ச நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி என தெரிவித்திருந்தார்.

இன மத மொழி வேறுபாடுகளிற்கு அப்பால் நான் அனைத்து இலங்கையர்களிற்கும் சேவையாற்றவேண்டும் என்பதை நான் அறிந்திருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் கண்டியில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் இது குறித்து சந்தேகம் காணப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னதாகவே வன்முறையை சந்தித்த அந்த பகுதியிக்கு ராஜபக்ச ஆட்சிக்கு வந்துள்ளதால் என்ன நடக்கலாம் என்பது குறித்து முஸ்லீம்கள் மெல்லிய குரலில் பேசிக்கொள்கின்றனர்.

முஸ்லீம்கள் மீண்டும் தாக்கப்படலாம் என அச்சத்துடன் இருக்கின்றோம் என்கின்றார் இஸ்லாமிய போதகரான பசால் சம்சுடீன்.

இவரது சகோதரரான 23 வயது அப்துல் பாஜித் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தில் கொல்லப்பட்டார்.

பௌத்த மதகுருமார் அடங்கிய கும்பலொன்று பெட்ரோல் குண்டினை வீட்டிற்குள் எரிந்தவேளை அவர் மூச்சுத்திணறி பலியானார்.

சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் எங்களை பிழையாக புரிந்துகொண்டுள்ளனர், நாங்கள் ஈவிரக்கமற்றவர்கள்,அழிக்கப்படவேண்டியவர்கள் என கருதுகின்றார் பசால் சம்சுடீன்.

பௌத்தர்கள் பெரும்பான்யைமாக உள்ள நாடுகளில்  மத தேசியவாதமும் முஸ்லீம்களுடனான மோதலும்அதிகரித்து வருகின்றது.

மியன்மாரில் இலங்கையை போன்று முஸ்லீம்கள் தங்கள் மதநம்பிக்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஆபத்தானவர்கள் என்ற  கருத்து தேசியவாதிகள் மத்தியில் காணப்படுகின்றது.பௌத்தர்கள் பெரும்பான்மையினத்தவர்களாக காணப்படுகின்ற போதிலும் இந்த உணர்வு காணப்படுகின்றது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் பௌத்த தேசியவாதிகள் பின்னர் இதனை சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கம் அவர்களிற்கு உள்ளது,அவர்கள் அந்த நோக்கத்துடன் செயற்படுகின்றனர் ஆனால் நாங்கள் அதனை அனுமதிக்கமாட்டோம் என்கின்றார் பொதுபல சேனாவின் யட்டேவட்ட தர்மானந்த.

சிங்கள பௌத்தர்கள் மிகவேகமாக காணாமல்போகும் இனம் என்கின்றார் அவர் ,அதனை பாதுகாப்பது எங்களின் கடமை என அவர் குறிப்பிடுகின்றார்.

தங்களிற்குள்காணப்படும் தீவிரவாத போக்குகள் குறித்து பல பௌத்த மதகுருமார்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஞானசார தேரரும்ஏனைய தேசியவாதிகளும் வன்முறைகளில் இருந்துதங்களை தனிமைப்படுத்தி காண்பிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்களின் செல்வாக்கு உள்ளமை தெளிவான விடயம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையிலிருந்த முஸ்லீம் அமைச்சரும் ,இரு முஸ்லீம் ஆளுநர்களும் பதவி விலகவேண்டும் என கோரி பௌத்த மதகுருவும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்னதேரர் கண்டியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் எழுச்சிபெற்ற தேசியவாதத்தினால் பயனடைந்தவர் ஞானசார தேரர்.

நீதிமன்ற  அவமதிப்பிற்காக ஆறு வருட சிறைத்தண்டனை பெற்ற பின்னர் ஜனாதிபதியினால் அவரிற்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.அவர் கண்டிக்கு சென்று அத்துரலிய ரத்ன தேரருடன் உண்ணாவிரதப்போராட்டத்தில் இணைந்தார்.

பாதுகாப்பற்றவர்களாக உணரும் முஸ்லீம்கள்

முஸ்லீம்கள் பாதுகாப்பற்றவர்களா உணருகின்றனர்,அவர்கள் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளதாக கருதுகின்றனர்,தங்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திறன் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர் என்கின்றார் விரிவுரையாளரும் இலங்கை முஸ்லீமுமான பரா மில்லர்.

முஸ்லீம் இளைஞர்கள் புதிய குழப்பத்தில் உள்ளனர் என்கின்றார் அவர்.

அவர்கள் சீற்றத்தில் உள்ளனர்,அவர்கள் மத்தியில் ஆத்திரம் அதிகரித்துவருகின்றது அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதத்தை உறுதியாக நிராகரித்துள்ளனர் ஆனால் தங்களை பாதுகாக்க ஏதாவது செய்யவேண்டும் என கருதுகின்றனர் என்கின்றார் அவர்.

கொழும்பின் பெரிய பள்ளிவாசலில் சமீபத்தில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை போது வர்த்தகரான எம்எஸ்எம் ஜனீர் முஸ்லீம்களிற்கு எதிரான  முரண்பாடு புதிய விடயமல்ல ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர் அது உக்கிரமானதாக மாறியுள்ளது என குறிப்பிடுகின்றார்.

மீண்டும் வன்முறைகள் நிகழக்கூடும் என்ற அச்சத்தில் தாங்கள் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.

ஏபி

தமிழில் ரஜீபன்

 
Comment (0) Hits: 231

'சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் ஒதுங்கியிருப்பதே தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவி' - ஆனந்தசங்கரி!

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்படமுற்படுகின்றார் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன் மீண்டும் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்போகின்றார் எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார். 

இவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள் எனவும் இதன்போது ஆனந்தசங்கரி தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவினால் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களிற்கு செய்தது போதும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

2006, 2007 ம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அப்போது இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர். சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். அதேவேளை பெரும்பாலன சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தசந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்ப புள்ளியாக பயன்படுத்த உள்ளேன். தமிழர் விடுதலை கூட்டணி அழிந்துவிட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்களை் யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என அவர் இதன்போது அழைப்பு விடுத்ததார்.

2006, 2007ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களிற்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது. 

நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர். உண்மை அதுவல்ல. தமழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிற்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறிதான் மக்கள்  தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எம்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

யார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பிகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அனைவரும் ஒன்றாக இணையுமாறும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தங்கரி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

Comment (0) Hits: 160

ஜனாதிபதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.

ஜனாதிபதியுடன் 10 பேர்கொண்ட குழு ஒன்றும் பயணமாகியுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் 2.05 மணிக்கு ஸ்ரீலங்கன் விமானத்தின் மூலம் இந்தியாவின் புதுடெல்லிக்கு பயணமானார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது விஜயத்தின் போது, ​​இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி டீ.பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆர்யசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.

Comment (0) Hits: 175

எதிர்க்கட்சித் தலைவர் யார்? விரைவில் தீர்மானிப்போம் -ஐ.தே.க!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடி சுமூகமான முறையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித உள்ளக முரண்பாடுகளும் இல்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் யாரென்பது குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார். 

Comment (0) Hits: 160

சுகாதார அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் சார்ல்ஸ்!

சுகாதார அமைச்சின் செயலாளருக்கான தனது உத்தியோகபூர்வ கடமைகளை, நேற்று வரை சுங்கத்தின் திணைக்களத்தின் பணிப்பாளராகவிருந்த பி.எஸ்.எம்.சார்ல்ஸ் இன்று காலை (28) 9.30 மணிக்கு பொறுப்பேற்றார்.

முன்னைய அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் பின்னர், குறித்த திணைக்கள அதிகாரிகளின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மீண்டும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந் நிலையிலேயே இடைக்கால அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டு, தனது கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளார். 

இதனால் அவர் வகித்த சுங்கப் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் தற்போது, அந்த பதவியும் வெற்றிடமாகியுள்ளது. 

இரு­பது புதிய அமைச்­சுக்­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­லா­ளர்­க­ளுக்­கான நிய­மனக் கடி­தங்­களை வழங்கும் நிகழ்வு  ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ஷ   தலை­மையில் நேற்று (27)  பிற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்பெற்­றது.

புதிய செய­லா­ளர்­களின் விப­ரங்கள் பின்­வ­ரு­மாறு,

திரு­மதி. எஸ்.எம்.மொஹமட் – சுற்­றுலா மற்றும் விமான சேவைகள்

ஆர்.டபிள்யு.ஆர் பேம­சிறி– வீதி மற்றும் பெருந்­தெ­ருக்கள்

ஜே.ஜே.ரத்­ன­சிறி – நீதி,  மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு

ரவீந்ர ஹேவா­வி­தா­ரன – பெருந்­தோட்ட, கைத்­தொழில் மற்றும் ஏற்­று­மதி விவ­சாயம்

ஜே.ஏ.ரஞ்சித்  – கைத்­தொழில் மற்றும் வளங்கள் முகா­மைத்­துவம்

டி.எம்.ஏ.ஆர்.பி.திசா­நா­யக்க – உயர்­கல்வி  தொழில்­நுட்பம் மற்றும் புத்­தாக்கம்

எச்.எம்.காமினி செனெ­வி­ரத்ன – பய­ணிகள் போக்­கு­வ­ரத்து முகா­மைத்­துவம்

டபிள்யு.ஏ.சூலா­னந்த பெரேரா – தகவல் தொடர்­பாடல் தொழி­ல்நுட்பம்

திரு­மதி. வசந்தா பெரேரா – மின்­சக்தி மற்றும் வலு­சக்தி

எம்.எம்.பி.கே.மாயா­துன்னே – துறை­முக மற்றும் கப்பல் போக்­கு­வ­ரத்து

எஸ்.ஹெட்­டி­யா­ரச்சி – பொது நிர்­வாகம் உள்­நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி

ஆர்.பி.ஆரி­ய­சிங்க – வெளி­நாட்­ட­லு­வல்கள்

திரு­மதி ஏ.எஸ்.எம்.எஸ்.மஹா­னாம – மகளிர் சிறுவர் விவ­கா­ரங்கள் மற்றும் சமூக பாது­காப்பு

திரு­மதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜே­துங்க சுற்­றாடல் மற்றும் வன ஜீவ­ரா­சிகள் வள அமைச்சு

ஆர்.ஏ.ஏ.கே.ரண­வக்க – காணி மற்றும் காணி அபி­வி­ருத்தி

எம்.பி.டி.யு.கே.மாபா பத்­தி­ரன  – கைத்­தொழில் ஏற்­று­மதி மற்றும் முத­லீட்டு மேம்­பாடு

திரு­மதி ஆர்.எம்.ஐ.ரத்­னா­யக்க – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

திரு­மதி. பி.எஸ்.எம்.சார்ல்ஸ் – சுகா­தார மற்றும் சுதேச மருத்­துவ சேவைகள்

என்.பி.மொன்டி ரண­துங்க – சிறிய  நடுத்­தர அள­வி­லான வர்த்­தக மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி

கலாநிதி பிரியத் பந்து விக்ரம – நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு

Comment (0) Hits: 160

தப்பியோடிய CID உயர் அதிகாரியை நாடு கடத்த சுவிஸ் மறுப்பு!

குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த முடியாதென சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் சட்டத்திட்டத்திற்கு அமைய அவரையும் அவரது குடும்பத்தினரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிஷாந்த சில்வாவுக்கு எதிராக இன்டர்போல் பிடியாணை இல்லாமையினால் அவருக்கு எதிராக செயற்படுவதற்கு சுவிஸ் பொலிஸாருக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று நிஷாந்த சில்வாவை சந்தித்து லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுடீன், கீத் நோயார், எக்னெலிகொட, உபாலி தென்னகோன் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

நிஷாந்த சில்வா சமர்பித்த ஆவணங்களுக்கு அமைய சுவிஸ் அதிகாரிகள், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நிஷாந்தவின் அரசியல் பாதுகாப்பு விண்ணப்பம், சூரிச் நகரின் புலம்பெயர்ந்தோர் நிலையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர், நிஷாந்த சில்வா தனது குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 219

எனது செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளனர் - செந்தில் தொண்டமான்!

கடந்த காலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி என்னால் பேசப்பட்ட விடயங்களை திரிவுப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இப்போது  பல அமைச்சுக்கள் மாற்றம் பெற்றுள்ளது. கடந்த அமைச்சில் தொழில் செய்த பலருக்கு தற்போது தொழில் இல்லை. ஆகையால் அவர்கள் ஆர அமர்ந்து இதை அழகாக திரிபுபடுத்தி செய்து வெளியிட்டுள்ளனர். இதனால் மலையக சமூகத்தினரிடத்தில் அண்மைக்காலமாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளது என ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில்  தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், கொட்டகலை பாடசாலை விடுதியில் இளைஞர்களூடான நேரடி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான் தனியார் தொலைகாட்சியில் வழங்கிய செவ்வி   தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு இளைஞர் யுவதிகளுக்கு  விளக்கமளித்தார்.

இதன் போது செந்தில் தொண்டமான் இளைஞர் யுவதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். பின் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்களிக்கப்பட்டது. இதன் போது ஊவா மாகாண  முன்னாள் கல்வி அமைச்சர்  செந்தில்  தொண்டமான் தெரிவித்ததாவது,

முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த நான் கல்வியை பற்றி தான் பேசமுடியும். கல்வியை பொருத்தவரையில் ஏனைய சமூதாயத்தை விட கூடுதலாக என்னுடைய மலையக சமூதாயம் அதிகளவாக முன்னேற்றமடைய வேண்டும்  என்பதில்  ஆசைப்படுவதில் தப்பு கிடையாது.

இன்று பட்டத்தாரிகளாக சென்றவர்களோடு, பட்டதாரிகளாக வேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்வோர் மலையகத்தில்  ஏகப்பட்டோர்  இருக்கின்றனர். அதேநேரத்தில்  க.பொ.த  சாதாரண  தரம் மற்றும்  உயர்தரத்தில் அதிகமானோர்  பெறுபேறு பெற்றுள்ளனர்.

அவர்கள் எல்லோரையும் கொண்டு சென்று பட்டத்தாரிகளாக்குவது எங்களுடைய கடமையாகும். அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்து முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றோம்.

தனியார் ஊடகம் ஒன்றில் வழங்கிய செவ்வியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மலையக மக்களை நாங்கள் முட்டாள்கள் என்று சொன்ன மாதிரியும், மலையக மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று சொன்ன மாதிரியும் திரித்து  வெளியிட்டுள்ளனர்.

அதன் உண்மையான வீடியோவில் எந்த இடத்திலும் நான் இவ்வாறு சொன்னமாதிரி இல்லை. அதை இணையத்தில் அந்த வீடியோவை பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதனால் வருகின்ற காலங்களில் இவர்கள் என்ன மாதிரி வீடியோக்களை செய்திருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.

மலையகத்திலிருந்து ஆயிரம் இளைஞர்களை  பல்கலைக்கழகம்  அனுப்புவதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்துக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றோம் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்கிறேன் என்றார்.

Comment (0) Hits: 160

அரசாங்கம் ஊடக அடக்குமுறையைத் தொடங்கியுள்ளது மங்கள குற்றச்சாட்டு!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கிய பிரபலமான யூடிப் சேனலான "த லீடர்" செய்தி வாசிப்பாளரான சஞ்ஜய தனுஷ்கவை நேற்று முன்தினம் (26) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

சஜித்திற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் யூடியுப்பில் செய்தி வாசித்த சஞ்சய தனுஸ்கவை சி.ஐ.டி.யினர் 8 மணித்தியாலங்கள் விசாரணை செய்துள்ளனர்.

இதேவேளை தனது ஊடகப்பிரிவின் தலைவரான ருவான்பேர்டினான்டெஸ் அடுத்த இலக்கு எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 188

சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பான சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்!

கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியரை அவரது விருப்பமின்றி வான் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்று விசாரணை நடத்தியமை தொடர்பாக பொலிஸார் மற்றும் குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த விசாரணைகளுக்கு சுவிஸர்லாந்து தூதரகத்தில் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதேவேளை சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கையில் கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கையின் தூதுவரை அழைத்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விளக்கம் கோரியதாக பேர்னில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணிநேரம் குறித்த பெண் பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்

குற்றப்புலனாய்வுத்துறையின், காவல்துறை அதிகாரி நிசாந்த சில்வா அண்மையில் சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த பெண் பணியாளர் விசாரணை செய்யப்பட்டதாக சுவிட்ஸர்லாந்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comment (0) Hits: 87

ரி-10: முதல் தடவையாக மகுடம் சூடிய அணி!

ரி-10 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, மராத்தா அரேபியன்ஸ் அணி முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றது. அபுதாபியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மராத்தா அரேபியன்ஸ் அணியும், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மராத்தா அரேபியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அஷிப் கான் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மராத்தா அரேபியன்ஸ் அணியின் பந்துவீச்சில், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்செல் மெக்லிகன், லசித் மாலிங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 88 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மராத்தா அரேபியன்ஸ் அணி, 7.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மராத்தா அரேபியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

Comment (0) Hits: 122

'தமிழ் மக்களின் துன்பத்துக்கு காரணம் தமிழ்த் தலைவர்கள்' - டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

1987ஆம் ஆண்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டஇந்திய_ - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையை மிக இலகுவாக தீர்க்க முடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.

இந்தப் பிரச்சனை தனியாக இலங்கை அரசாங்கத்தோடும், இந்திய அரசாங்கத்தோடும் மட்டும் தொடர்புப்பட்டதல்ல எனவும் இலங்கை தமிழ் மக்கள் தமது பிரதிநிதியாக யாரை தெரிவு செய்கின்றார்களோ, அவர்களிடமும் இந்த பிரச்சினைக்கான தீர்வு உள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.

தமிழ் மக்களின் தலைவர்கள் தமது மக்களின் நலன்களிலிருந்து இந்த பிரச்சினையை அணுகாது, தமது சுயலாப அரசியலில் இருந்து அணுகியமையே இந்திய_ - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர்கள் துன்பங்களுக்கு ஆளாக காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை_ - இந்திய ஒப்பந்தம் தமிழர்களின் பிரச்சினைக்கான சிறந்த தீர்வுத்திட்டம் என்ற போதிலும், அதனை தமிழ்த் தலைமைகள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.

தமிழர் பிரச்சனைக்கு தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே தீர்வை காண முடியும் என கூறிய அவர், இந்த பிரச்சினைக்கான தீர்வை சர்வதேசத்தின் ஊடாக காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார். முள்ளிவாய்க்காலுக்கே வராத சர்வதேசம், இனி இலங்கைக்கு வராது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இந்திய_ - இலங்கை ஒப்பந்தத்தின் பின்ன விடுதலைப் புலிகள் தொடர்ந்த யுத்தம், தமிழர்களை பெருமளவு பாதித்துள்ளதாக அவர் நினைவூட்டினார். இந்தநிலையில், ஒரு தரப்பை மட்டும் இந்த விடயத்தில் குறைக்கூற முடியாது என அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரை இல்லாது செய்வதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதே இயல்பான விடயம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் மீதும் தவறுகள் காணப்படுவதாக கூறிய அவர், தமிழர்கள் மீதும் தவறுகள் உள்ளதாக குறிப்பிடுகின்றார். அவ்வாறாயினும், இரண்டு தரப்பின் மீதும் யுத்தக் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

"இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரசு தலைவர்களின் காலப் பகுதியிலும் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இலங்கையின் வடபகுதி மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளேன். இந்திய, -இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகின்றேன்.

இரண்டு நாட்டு மக்களின் நலன்களும் பாதிக்காத வகையிலும், இரண்டு நாட்டு கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்குடனும் எனது நடவடிக்கை அமையும்".

இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

தமிழகம் - சூளைமேடு பகுதியில் 1986ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்றின் சந்தேக நபராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயரும் உள்ளது. அந்த வழக்கு விசாரணைகள் இன்றும் சென்னையில் இடம்பெற்று வருகின்ற நிலையில், டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு சென்றால் கைது செய்யப்படலாம் என கூறப்படுவது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியாவிற்கு சென்றால் தான் கைது செய்யப்படலாம் என்ற எந்தவித உத்தரவும் தனக்கு விடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார்.

சூளைமேடு துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தனக்கு எந்தவித நேரடி தொடர்புகளும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார். இந்தச் சம்பவம் இடம்பெறும் காலப் பகுதியில் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், அதனூடாகவே இந்த சம்பவத்தின் சந்தேக நபராக தனது பெயர் சேர்க்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

தான் சம்பவத்தின் பின்னரே அந்த இடத்திற்கு வருகைத் தந்ததாக தமிழக பொலிஸாரின் முதல் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தனக்கு எந்தவொரு நேரத்திலும் இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் கூறுகின்றார்.

(BBC)

Comment (0) Hits: 122

அ­தா­வுல்­லாவின் முகத்­தி­ரையை கிழித்­தெ­றிந்து பாடம் புகட்­ட­ வேண்டும் - திகாம்பரம்!

முன்னாள் அமைச்சர் அத்­தா­வுல்லா  எமது மக்­களை இழி­வு­ப­டுத்திக் கூறி­யுள்ளார். இத்­த­கை­ய­வர்­களின் முகத்­தி­ரையைக் கிழித்து மலை­யக மக்கள் என்றால் யார் என்­பதை நிரூ­பித்துக் காட்ட வேண்டும் என்று தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரிவித்துள்ளார்.

மலை­யக மக்­களை இழி­வு­ப­டுத்திப் பேசு­வோரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே வரு­கின்­றது. எமது மக்­களை படிப்­ப­றிவு இல்­லா­த­வர்கள் என்று கடந்த வாரம் தனியார் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்­கு­பற்­றிய முன்னாள் மாகாண அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற அதே தொலைக்­காட்சி விவா­தத்தில் கலந்­து­கொண்ட முன்னாள் அமைச்சர் அத்­தா­வுல்லா  எமது மக்­களை இழி­வு­ப­டுத்திக் கூறி­யுள்ளார். இத்­த­கை­ய­வர்­களின் முகத்­தி­ரையைக் கிழித்து மலை­யக மக்கள் என்றால் யார் என்­பதை நிரூ­பித்துக் காட்ட வேண்டும் என்று தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

    அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இந்­நாட்டின் வள­மான பொரு­ளா­தா­ரத்­துக்கு தமது கடின உழைப்பை நல்கி எந்த வித­மான சுபீட்­சமும் இன்றி வாழ்ந்து வந்த மலை­யக மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்கி விட்­டார்கள். எதிர்­நீச்சல் போட்டு தமது வாழ்க்­கையை நடத்தி வரு­கின்­றார்கள். அதன் காரா­ண­மாக அவர்­களின் பிள்­ளைகள் கல்­லூ­ரி­க­ளிலும், பல்­கலைக்கழ­கங்­க­ளிலும் கற்று சமூ­கத்­துக்கு அந்­தஸ்தைத் தேடிக்­கொ­டுத்து வரு­கின்­றார்கள். நாமும் எமது மக்கள் தனி வீடு­களில் கௌர­வ­மாக வாழ வேண்டும் என்று அர­சியல் ரீதியில் காணி உரி­மையை பெற்றுக் கொடுத்து வந்­துள்ளோம்.

இவ்­வாறு தலை நிமிர்ந்­துள்ள, எமது சமூ­கத்தில் பிறந்து வளர்ந்த மலை­யக இளை­ஞர்கள் தமது திற­மை­களின் ஊடாக நாட்­டுக்கு பெருமை தேடிக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அண்­மையில் துபாய் நாட்டில் இடம்­பெற்ற ஆண­ழகன் போட்­டியில் கலந்து கொண்ட மலை­யக இளைஞன் மாதவன் ராஜ­கு­மாரன் இரண்­டா­வது இடத்தைப் பெற்று நாட்­டுக்கு பெருமை சேர்த்­துள்ளார். கல்வி கற்ற எத்­த­னையோ பேர் உயர் பத­வி­களை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்­நாட்டிலுள்ள ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளுக்கு தாம் சளைத்­தவர்கள் அல்லர் என்­பதை எடுத்துக் காட்டி வரு­கின்­றார்கள்.

எமது மக்கள் தோட்டம் என்ற அடை­யா­ளத்­தி­லி­ருந்து விடு­பட்டு மலை­யக மக்கள் என்ற பெரு­மை­யோடு வாழ வேண்டும் என்று நாம் பாடு­பட்டு வரு­கின்றோம். பெரும்­பான்மைச் சமூகம் எமக்­கு­ரிய அந்­தஸ்தை வழங்கத் தயா­ராக இருக்­கின்ற நேரத்தில் சிறு­பான்மை சமூ­கத்­த­வர்­களே கேவ­ல­மான வார்த்தைப் பிர­யோ­கத்தை மேற்­கொள்­வதை நாம் சகித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க முடி­யாது.

தொலைக்­காட்சி விவா­தத்தில் பங்­கேற்ற தமிழ் முற்­போக்கு கூட்­டணித் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் அ­தா­வுல்­லா­வுக்கு உட­ன­டி­யாக பதி­லடி கொடுத்து எமது சமூகம் மான­முள்ள சமூகம் என்­பதை பறைசாற்­றி­யுள்ளார். அவரின் துணிச்­ச­லுக்கும், சமூக உணர்­வுக்கும் அனை­வ­ரது பாராட்டும் கிடைத்து வரு­கின்­றது. அத்­தோடு நாம் நின்று விடக்­ கூ­டாது. முன்னாள் அமைச்சர் அ­தா­வுல்­லாவின் அறி­யா­மைக்கும் அகம்­பா­வத்­துக்கும் தகுந்த பாடத்தைக் கற்­பிக்க வேண்டும். அதற்­கான கண்­டனக் கூட்­டங்­களை நடத்தி எமது மக்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்க வைக்க வேண்டும்.

மலை­ய­கத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் ஒருவர் தோட்­டங்­களில் படித்­த­வர்கள் அதி­க­மாக இல்லை என்று கூறி இழி­வு­ப­டுத்­தி­யுள்ளார். இன்­னு­மொ­ருவர் வாடா, போடா  என்று வாய்க்கு வந்­த­படி பேசி உழைக்கும் மக்­களை சீண்டிப் பார்த்­துள்ளார். அவர்­களின் முகத் திரை­களைக் கிழித்து அவர்கள் எத்­த­கை­ய­வர்கள் என்­பதை அம்­ப­லப்­ப­டுத்த வேண்டும்.

எந்­த­வொரு சமூ­கத்­தையும் ஏள­ன­மாக நோக்­கினால் தகுந்த தண்­டனை கிடைக்கும் என்பதற்கு மலையக சமூகம் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இன்று நாம் காட்டுகின்ற எதிர்ப்பும், கண்டனமும் எமது எதிர்காலச் சந்ததியினர் மானத்துடன் வாழ வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கருத்து பேதங்களை மறந்து சமூக ரீதியில் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக் கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 110

எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இராணுவம் தயார்- சவேந்திரசில்வா!

இலங்கை இராணுவம் எந்தஎதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் மரபுசாரத ஆபத்துக்களையும் ஏனைய ஆபத்துக்களையும்  இனம் கண்டுள்ளது இதன் காரணமாக தயார் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர்  இராணுவம் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிற்கும் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை  படையினரின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் அனைத்து படையணியினர் மத்தியிலும் உயர்ந்த ஒழுக்க கட்டுப்பாட்டை பேணுவோம் தவறிழைப்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கமாட்டோம் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 123

ரணில் - சஜித் - கரு: தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ நெருக்கடி தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பு மிகவும் தீர்மானமிக்கதாக காணப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 133

704 CID அதிகாரிகளின் பட்டியல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில்!

சிஐடி அதிகாரிகள் 704பேரின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாக தடைசெய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கமைய குடிவரவு குடியகல்வு திணைக்களம் 704சிஐடி அதிகாரிகளின் பெயர் விவரங்களையும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் கணினி வலையமைப்பில் பதிவேற்றம் செய்துள்ளது. சிஐடி பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பதனை தொடர்ந்தே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இவ்வேலைதிட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

இதேவேளை பொலிஸ் திணைக்களத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் சிஐடி பணிப்பாளருக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தது.  பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா, பொலிஸ் திணைக்களத்துக்கு தெரியாமலேயே தனது வெளிநாட்டுப் பயணத்தை முன்னெடுத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.  சிஐடி திணைக்களத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிற்சர்லாந்துக்கு சென்றுள்ளார். எனினும் அது தொடர்பில் அவர் பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவிக்கவில்லையென்றும் விடுமுறைக்கான அனுமதியின்றிய நிலையிலேயே அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். 

சிஐடி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்த பல சர்ச்சைக்குரிய விசாரணைகளுடன் தொடர்புபட்டுள்ள இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா திடீரென நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.  

எவ்வாறாயினும் உத்தியோகப்பூர்வ அல்லது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது அமைச்சு செயலாளரின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமென்றும் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார். 

எனினும், இன்ஸ்பெக்டர் நிஷாந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்னர் எவ்வித அனுமதியையும் பெற்றிருக்கவில்லை. அவரால் கடந்த 04வருடங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் ஒரு தலைப்பட்சமானவை மற்றும் நியாயமற்றவையென பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

பொலிஸ் திணைக்களம் அவர் மீது எவ்வித விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்திராத நிலையிலேயே அவர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பல முக்கியமான விசாரணைகளுடன் தொடர்புபட்ட அதிகாரியொருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பது மிகவும் பாரதூரமான விடயமென சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் திணைக்களம் அவர் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் இன்ஸ்பெக்டரின் இச்செயற்பாடு தண்டனைக்குரிய குற்றமென சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர், அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினார். 

இன்ஸ்பெக்டர் நிஷாந்த நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்டபோது அதற்கு அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எவரொருவர் மீதும் வைராக்கியம் மற்றும் துவேசத்துடன் செயற்படபோவதில்லையென உறுதியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் எதற்காக இவர்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும். சிலர் தேர்தலுக்கு முன்னரே நாட்டை விட்டுச்சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

Comment (0) Hits: 130

வனப்பிரதேச குடியேற்றம் 2012; பதில் வர்த்தமானி!

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட 2012 ஆம் வருட ஒக்டோபர் 10 ஆம் திகதிய 1779/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் இடம்பெறும் பிரதேசத்துக்கு பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தலில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்கள் வனப் பிரதேசங்களாக குறிப்பிடப்படும்.

மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களென வன பரிபாலன பாதுகாவலர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வன பரிபாலன பிரதேசத்துக்கு வெளியே உள்ள இடங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என்று சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சூழல் நீதிக்கான கேந்திரம் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வன பரிபாலன பாதுகாவலர் நாயகம், மத்திய சூழல் அதிகார சபை மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.     

Comment (0) Hits: 120

ரிஷாட் வாகன தொடரணி மீதான தாக்குதல்; இதுவரை எவரும் கைதாகவில்லை!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகன தொடரணி மீது புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனமூலை சந்தியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என முந்தல் பொலிஸார் கூறினர். 

எனினும், அது குறித்து விசாரணைகள் தீவிரபப்டுத்தப்பட்டுள்ளதாகவும் நான்கு பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந் நிலையில் இது குறித்து, இன்றுவரை முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த தாக்குதலுக்கு ஏற்கனவே இடம்பெற்றதாக கூறப்படும் விபத்து சம்பவம் ஒன்று காரணமாக இருந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் கூறினர்.

Comment (0) Hits: 124

பக்கம் 2 / 70