V2025

செய்தி

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு! (VIDEO)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவு வழங்குவதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (03) வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும், பாரளுமன்ற குழு கூட்டங்களிலும் இது பற்றி ஆராயப்பட்டிருந்தது. 

இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக, அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ செயற்குழு இன்றைய தினம் எடுத்திருந்தாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால், இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம். 

மற்றைய இரண்டு கட்சித் தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் தான் எமது கருத்துக்கள் இருந்தது. அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து, இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.

எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமைசாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே, மக்களுடைய கருத்தையும் நாம்  அறிந்திருக்கிறோம். ஆனால், மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது 'நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று சொல்லுவது அல்ல.

தற்போது இருக்கும் அரியல் அரசியல் சூழ்நிலையிலே தமிழ் மக்கள் சார்பாக, ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுவார்த்தை நடாத்துகிறோம். அந்தக் கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் , மக்களிற்கு ஒரு வழி காட்டுதல் கொடுக்கவேண்டிய அத்தியவசிய கடப்பாடு எமக்கு இருக்கிறது. அதை நாங்கள் செய்வோம்" என மேலும் தெரிவித்தார்.

Comment (0) Hits: 32

TNA சஜித்துக்கு ஆதரவு - சம்பந்தன் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான 'தாயகம்' பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதஸவை ஆதரிப்பதற்கான காரணங்கள் மற்றும் ஜனதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் பங்களிப்புச் செயற்றிட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் ஆரயாப்பட்டு வருகின்றன.

இக் கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணசிங்கம், சிறிநேசன், சி.யோகேஸ்வரன், சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராயா, யாழ், மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை தலைவர்களான ஆர்னோல்ட், தி.சரவணபவன், வடமாகாண முன்னாள் அவைதலைவர் கே.சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கே.சயந்தன், குருகுலராயா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Comment (0) Hits: 43

ராஜபக்ஷ ஆட்சியின் அடிப்படை இதோ! - மஹிந்த குடும்பத்தின் நெருக்கமான நண்பர் சஜின் வெளிப்படுத்தினார்! (காணொளி)

ராஜபக்ஷக்கள் அரசியல் செய்தது இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களைின் அடிப்படையிலேயே என ராஜபக்ஷ அரசில் இருந்த முக்கிய கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன கூறினார்.

“பொது பல சேனாவை எடுத்துக் கொண்டால், அதனை யார் ஆரம்பித்து?, யார் நிதி வழங்கியது?, யார் உதவி செய்தது?. அடுத்தது இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே நாம் அரசியல் செய்தோம். இதனால்தான் இவைகளின் பலனை நாம்  2015ம் ஆண்டில் பெற்றோம். அப்போதிலிருந்து இந்தக் கொள்கைகளை அவர்கள் இன்று வரையில் மாற்றிக் கொள்ளவில்லை....” என அவர் UTV  தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கூறியுள்ளார்.

UTV - நீங்கள் ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து முக்கியமான பாராளுன்ற உறுப்பினர் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அப்போது ஊடகங்கள் கூறியதைப் போன்று நீங்கள் பாரியளவிலான டீல் கொடுக்கல் வாங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் பிரதானமாக நேரடியாக தலையீட்டினைச் செய்த ஒரு பாராளுமன்ற உறுப்பினராகும். அவ்வாறிருந்த நீங்கள் ஏன் திடீரென சஜித் பிரேமதாசாவின் மேடையில் ஏறினீர்கள்?

சஜின் - அந்தக் காலத்தில் இருந்த மாபெரும் திருடன் நான் என்றுதானே காட்டப்பட்டது. அவர்கள் இதோ இவர்தான் திருடன், இவரைப் பிடித்துக் கொள்ளுங்கள் என என்னைக் காட்டினார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த எந்தவிதமான கொடுக்கல் வாங்கள்களிலும் நான் இருக்கவில்லை. உங்களைப் போன்றவர்கள் கூறுவதைப் போன்று ஒரு டீல்களையேனும் நான் செய்திருக்கவில்லை. என்மீது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மூன்று வழக்குகள் உள்ளன. அவற்றில் இப்போது இரண்டுதான் உள்ளது. அந்த வழக்குகளிலும் அரசின் எதுவும் சம்பந்தப்படவில்லை.

அரச நிதி, அல்லது நீங்கள் கூறும் டீல், நீங்கள் கூறும் கொடுக்கல் வாங்கள், நீங்கள் கூறும் அந்த எந்த விடயத்திற்கும் என்மீது வழக்குத் தாக்கல் செய்யவில்லை.  எனது வரலாற்றில் ராஜபக்ஷக்களுடன் 15, 17 வருடங்களாகும்.

2010ம் ஆண்டு வரையில் மஹிந்த ராஜபக்ஸ இதனை நன்றாகச் செய்து கொண்டு வந்தார். எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 2010ம் ஆண்டின் பின்னர்தான் நான் கண்ட மாற்றம் ஏற்பட்டது. அது நாமல் ராஜபக்ஸவின் அரசியல் பிரவேசத்துடன் ஆரம்பித்த மாற்றமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியினுள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முஸ்லிம் அரசியல்வாதி உள்ளாரா? முன்னணியான ஒரு முஸ்லிம் தலைவர் இருக்கின்றாரா? என எனக்குக் கூறுங்கள். அவ்வாறு யாரும் அந்தக் கட்சியில் இல்லை.  எனவே அந்தக் கட்சிய இன்று இனவாதம், மதவாதம், அடிப்படை வாதம் ஆகியவற்றுடனேயே பயணிக்கின்றது. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் அரசியல் செய்கின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 32

சஜித்துக்காக சந்திரிகா வட கிழக்கைப் பொறுப்பேற்றார்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, வட கிழக்கு பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில், வடக்கின் பல அரசியல்வாதிகளுடன் சந்திரிகா தற்போது பல தீர்க்கமான பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.  

அமைச்சர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக தேசிய முன்னணியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல ஒப்பந்தங்களைச் செய்யும் நிகழ்வு  (01) கொழும்பில் இடம்பெற்றதோடு, முன்னாள் ஜனாதிபதியும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களோடு முன்னாள் ஜனாதிபதி மேடையில் அமர்ந்திருந்த போதிலும், கூட்டத்தில் அவர் உரையாற்றவில்லை

Comment (0) Hits: 51

ஜோன்ஸ்டனின் அடியாட்கள் சாந்த பண்டாரவுக்கும் “ஹூ” கோஷம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கும் ஜனாதிபதி தோ்தல் பிரசாரக் கூட்டத்தின் போது “ஹூ” கோஷம் போடப்பட்டுள்ளது. அலவ்வ பிரதேசத்தில் மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போதே, இவ்வாறு சாந்த பண்டாரவுக்கு ஹூ கோஷம் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மொட்டு மேடையில் ஏறும் ஸ்ரீ.ல.சு.கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹூ கோஷம் போடப்படுவது, மொட்டு கட்சியுடன் இணைந்துள்ள எந்த ஒரு ஸ்ரீ.ல.சு.கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஹூ கோஷம் போடக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தமது கட்சி ஆதரவாளர்களிடத்தில் பல சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தியிருந்த போதேயாகும்.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது, அங்கு கூடியிருந்த மது போதையிலிருந்தவர்கள் கூக்குரலிட்டுள்ளதோடு அதனையடுத்து அவரும் தனது உரையினை முடித்துக் கொண்டதோடு, இதன் பின்னர் மாலையில் பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  இனிமேல் காலை வேளையிலேயே பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.

Comment (0) Hits: 30

தேர்தலில் வாக்களிப்பு பகிஷ்கரிப்பு எதுவுமில்லை - TNA யின் தீர்மானம் அடுத்த வாரம்!

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மனிக்கப்படவில்லை என்றும், அடுத்த வாரத்தில் அதனைத் தெரிவிக்க முடியும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எம். ஏ. சுமந்திரன் கூறினார்.  

இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சீ.வீ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக 13 கோரிக்கைகளை  சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தையின்றி உடனடியாக பதிலை வழங்கி அது  நிராகரிக்கப்பட்டதோடு, ஏனையவர்களிடத்திலிருந்தும் இதற்கான பதில் கிடைக்காத காரணத்தினால், சிறுபான்மையினர் தொடர்பில் உணர்வுபூர்வமற்ற சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கை அளிப்பது பயனற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும், வாக்களிப்பை பகிஷ்கரிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறும் போது தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 36

கோட்டாபய தெற்கில் மறைத்து வடக்கில் கூறிய விடயம்! (காணொளி)

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வடக்கில் தெரிவித்த  பகிரங்க விடயத்தை, அவரது தேர்தல் பிரசார அமைப்பு தெற்கில் மறைத்துள்ளது.

அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளை விடுவிப்பதாக் கூறியிருந்தார்.

“நாம் எல்.டி.டி.ஈ உறுப்பினர்கள் 13,000 பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளோம். 5000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளுள் 274 பேரைத் தவிற ஏனைய அனைவரையும் நாம் விடுதலை செய்திருக்கின்றோம். நான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் மீதமான அனைவரையும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாக நான் கடந்த திங்கட்கிழமை யாழில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினேன்” என கோட்டாபய ராஜபக்ஷவின் டுவீட்டர் வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றை சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இதுவரையில் காணக் கிடைக்கவில்லை.

Comment (0) Hits: 31

வறுமையினை விற்பனை செய்யும் அரசாங்கத்திற்கு பதிலாக வறுமையினை ஒழிக்கும் அரசாங்கத்தை அமைப்போம் - அநுர குமார

வறுமையினை விற்கும் அரசாங்கத்திற்கு பதிலாக வறுமையினை ஒழிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாயநாயக்கா தெரிவித்துள்ளார்.  அம்பாறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அநுர குமார திசாநாயக்கா மேலும் கூறியதாவது,

“தற்போது தேர்தல் ஒன்று வந்திருக்கின்றது. எனினும் இம்முறை இது ஒரு தேர்தல் காலமாகத் தெரியவில்லை. நத்தால் காலத்தைப் போன்றிருக்கின்றது. ஒருவர் கூறுகின்றார், நான் வெற்றி பெற்றால் வேளான்மைச் செய்கைக்கு இலவசமாக உரம் தருவேன் என்று. இன்னொருவர் தான் வெற்றி பெற்றால் அனைத்து பயிர்ச் செய்கைக்கும் இலவசமாக உரம் தருவேன் என்கிறார்.

பிள்ளைகள் இருக்கும் இடத்தில் என்றால், நான் வெற்றி பெற்றால் ஒரு கப் பால் தருவேன் எனக் கூறுகின்றனர். பட்டதாரிகள் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் அரச தொழில் வழங்குவதாகக் கூறுகின்றனர். கர்ப்பிணித் தாய்மார் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் போஷாக்கு பொதி வழங்குவேன் என்கிறார்கள். நத்தால் தாத்தாக்கள் இருவர் வந்தததை்ப் போன்று.

நான் அனைவருக்கும் இலவசமான அரிசி வழங்குவேன் என அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கூறியபோது, எங்கிருந்து அந்தளவு அரிசியைக் கொண்டு வருவீர்கள் என யாரோ ஒருவர் திரும்ப கேட்டிருக்கின்றார். அப்போது அவர் கூறியிருக்கின்றார், நான் சந்திரனிலிருந்தாவது அரிசியைக் கொண்டு வந்து தருவேன் எனக் கூறியிருக்கின்றார். அதற்கும் மக்கள் கைதட்டியிருக்கின்றார்கள்” என்றார்.

Comment (0) Hits: 24

வெளிச்சத்துக்கு வரும் ஹிஸ்புல்லாவின் மறுபக்கம்!

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவை நிச்சயித்ததன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் சமூகத்துக்கு மீண்டும் துரோகம் இழைத்துள்ளார். சிறுபான்மை சமூகத்தில் பெரும்பான்மையானோர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு மாற்றமாக, ஹிஸ்புல்லாஹ் தனது சுயநலத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் கோட்டாவை வெல்ல வைப்பதற்காக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து, சஜித்துக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லிம் வாக்குகளை குறைத்து, கோட்டாவை வெல்ல வைப்பதற்கு இவருக்கு வழங்கப்பட்ட கொந்தராத்தை அவர் கச்சிதமாக செய்து வருகின்றார்.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக அரபு நாடுகள் வழங்கிய பணமும் சஜித்தை தோற்கடிப்பதற்காக பசில் வழங்கிய பணமும் ஹிஸ்புல்லாவின் பிரசாரத்துக்கு இலட்சக் கணக்கில் அள்ளி வீசப்படுகின்றது. புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும் வியாபாரிகளும் இவரது வலையிலே சிக்கியுள்ளனர்.

ஹிஸ்புல்லாஹ் ‘துரோகத்தின் அடையாளம்’ என்பதை கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் முகவரி கொடுத்தவருமான மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கே துரோகமிழைத்தவர் தான் இவர். மொஹிதீன் அப்துல் காதருக்கு பாராளுமன்ற பதவியில் அரைவாசிக் காலத்தை வழங்க வேண்டுமென்று, மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் வழங்கிய எழுத்துமூல ஒப்பந்தத்தையும் அவர் மீறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டு, அவருக்கும் துரோகமிழைத்தார். மர்ஹூம் அஷ்ரபின் பாரியார் திருமதி.பேரியல் அஷ்ரபிற்கு துரோகம் செய்து, வேறுவழி சென்றவர். அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து எம்.பியாகிய பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்கட்சி மைத்திரிக்கு ஆதரவளித்த போது, சமூக இருப்புக்கு மாறாக ஹிஸ்புல்லாஹ், மஹிந்தவுக்கு ஆதரவளித்தார்.

மேடைகளிலே மைத்திரியை மிக மோசமாக ஏசித் திரிந்த அவர், தேர்தலில் தோற்ற பின்னர் தேசியப் பட்டியலுக்காக, மைத்திரியின் கால்களில் விழுந்து சாஷ்டாங்கம் செய்து, எம்.பி பதவியையும் ஏக காலத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியையும் பெற்றார். இப்போது, கோட்டாவை வெல்ல வைப்பதற்காக அவரது கொந்தராத்தை எடுத்து, சமூகத்துக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் எவருடைய காலைப் பிடித்தாவது, சஜித்திடம் எம்.பி பதவியை பெற்றுகொள்ள கெஞ்சுவார்.

தேர்தல் பிரசாரங்களில் அவர் அவ்வாறுதான் கூறியும் வருகின்றார். அவரது “நமது கனவு” இவ்வாறுதான் இருக்கப்போகின்றது.

 
Comment (0) Hits: 37

மீண்டும் கோட்டாபயவுக்கு சவால் விடுத்தார் சஜித்!

தன்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு 10 நாட்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்தார். அது தொடர்பில் அன்று தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சவாலை ஞாபகப்படுத்தி பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு  தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், அதனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர், “எங்கள் கொள்கைகள் பற்றிய விவாதிப்பதற்காக 10 நாட்களுக்கு முன்பு நான் கோட்டாபயவுக்கு சவால் விடுத்தேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். நானும் காத்திருக்கிறேன். தயவுசெய்து இன்று உங்கள் மனதை மாற்றி எனது சவாலுக்கு பதிலளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 29

தமிழ் மக்களின் தலையெழுத்தை மாற்றியமைக்க வரும் "திருகோணமலை பிரகடனம்"

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் படுத்தும் பொதுவேட்பாளராக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வடமாகாண சபைஉறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் ஒட்டு மொத்தமாக தமிழர் பிரதேசங்கள்புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலைதமிழ் சமூகம் பல்வேறுபட்ட இன்னல்களை சந்திக்கின்றதாகவும் இவர் கடந்த காலங்களில்குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் எம். கே.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனமும், பொதுக்கூட்டமும் தமிழர்களின் தலை நகராக கருதப்படும் திருகோணமலையில் எதிர்வரும் ஒன்பதாம்திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

"திருகோணமலைபிரகடனம்" எனும் தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.பல வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடியலாக இது அமையும்என பலரால் எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

Comment (0) Hits: 40

அமெரிக்க உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல்

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் (MCC) வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில், உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை மனு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவுடன் எக்ஸா, எம்சீசீ, சோபா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட இடைகால தடை உத்தரவை பிறப்பிக்க கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 39

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளிவரவிருக்கும் காணொளியால் அச்சத்தில் கோத்தபாய தரப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக சேறுபூசும் காணொளி ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரப் பிரிவு வெளியிட உள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக சந்திப்புகளில் தெரிவித்து வருகிறது.

இந்தக் காணொளி சம்பந்தமான சில விடயங்களை பொதுஜன பெரமுனவினர் கூறியுள்ளனர். இதில் ஒரு காணொளியை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் துஷார வன்னியாராச்சி தயாரித்து வருவதாக பொதுஜன பெரமுனவினர் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள துஷார வன்னியாராச்சி, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

உண்மையில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இப்படியான காணொளி தயாரிக்கப்பட்டுள்ளதா? அல்லது தயாரிக்கப்படுகிறதா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ராஜபக்ஷ தரப்பின் பிரசாரப் பிரிவினர், இது குறித்து கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

பொய்யான காணொளி என்றால், எவரும் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனவும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்த காரணங்களை முன்வைக்க முடியும் எனவும் பொய்யான காணொளியை தயாரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் உட்பட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு புலனாய்வு ஒற்றர்கள் என்ற ரீதியில், ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் வசதிகளை வழங்கி, சம்பளம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவே அண்மையில் கண்டியில் மாநாயக்க தேரர் ஒருவரிடம் கூறியிருந்தார்.

அதேவேளை தான் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க உள்ளதாக அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலுக்கு செல்ல முடியாமல் போனதாகவும் குண்டுகளை வெடிக்க செய்த சஹ்ரான்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியதில்லை எனவும் குண்டு வெடிக்க போவது தெரிந்தும் உறங்கிக் கொண்டிருந்த ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கத்தோலிக்க பங்கு தந்தை ஒருவர், இந்த தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிந்திருந்ததாக கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக முதலை கண்ணீர் வடிக்கும் ராஜபக்சவினர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

Comment (0) Hits: 46

MCC ஒப்பந்தம்; அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பு!

அனைத்து பங்காளி நாடுகளிலுமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனின் (Millennium Challenge Corporation - MCC) உலகளாவிய கொள்கைக்கு இசைவானதாக, இந்த (கடனற்ற) நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் இலங்கை அரசாங்கம் அதை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம், இந்த நிதியுதவி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய பாராளுமன்றத்துக்கு போதிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவித்திள்ளது.

இந்த மீளாய்வு காலப்பகுதியில், நிதியுதவி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் செயற்படும். இந்த நிதியுதவி ஒப்பந்தமானது 11 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு நேரடியாக நன்மைபயக்கும் என்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் அர்த்தபுஷ்டியான வகையில் ஊக்குவிக்கும்.

இந்த நிதியுதவி ஒப்பந்தத்திற்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொள்வதற்கு பாராளுமன்றத்தினது மீளாய்வு மற்றும் ஒப்புதல் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனுக்கு தேவைப்படுகிறது.

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் போக்குவரத்துத் திட்டம்

போக்குவரத்துத் திட்டமானது 350 மில்லியன் டொலர்களைக் கொண்டது என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன் இது மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களில் நகர மற்றும் கிராமிய நகரும் தன்மையை இருவழியில் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். முதலில் கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தில் காணப்படும் வாகன நெரிசலை எளிதுபடுத்துவதுடன், பொதுப் போக்குவரத்தை முன்னேற்றும். கொழும்பை மேலும் வாழக்கூடிய, நன்கு செயற்படக்கூடிய நகரமாக்குவதற்கு போக்குவரத்து உரிமையைப் பெறுவது முக்கியமானதாகும். இரண்டாவதாக, போக்குவரத்துத் திட்டமானது மேல் மாகாணத்திலுள்ள துறைமுகங்கள் மற்றும் சந்தையுடன் நாட்டின் மத்திய பகுதியை இணைப்பதை மேம்படுத்தும். போக்குவரத்துத் திட்டமானது போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் பொறிமுறைகளை தரமுயர்த்தும். இது மூன்று செயற்பாடுகளைக் கொண்டதாகும்:

* கொழும்பு பெருநகர பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறைக்காக (Advanced Traffic Management System) 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது மத்திய கொழும்பை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் அதிக போக்குவரத்துக்களைக் கொண்ட எட்டு பாதைகளில் உள்ள வீதி வலையமைப்புக்களை தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் பௌதீக ரீதியாக முன்னேற்றுவதுடன், சிவில் வேலைகளை முன்னேற்றுவதாகும். இந்த செயற்பாடானது வாகனங்களை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், நிகழ்நேர தகவல் சேகரிப்பு, போக்குவரத்தை ஆய்வுசெய்தல், போக்குவரத்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தல் மற்றும் முழுமையான வலையமைப்பிலும் பஸ் முன்னுரிமை முறைக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்குகின்றன. பாதசாரிகள், உலகின் பல நகரங்களில் பொருட்கள் மற்றும் பயணிகள் நகர வீதிக் கட்டமைப்பில் நெரிசல்கள் இன்றி பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கியமான கருவியாக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறை நிரூபணமாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது கொழும்பு மாகரில் உள்ள 132 சந்திகளில் சிவில் செயற்பாடுகளை முன்னேற்றுவது மற்றும் ஏறத்தாழ 205 கிலோமீற்றர் வீதி வலையமைப்பில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞை திட்டங்களை வினைத்தினறாக நடைமுறைப்படுத்துவதையும் மேம்படுத்தும்.

* 50 மில்லியன் டொலர்கள் கொழும்பு மாநகரில் பஸ் சேவையை மேம்படுத்த பஸ் சேவை நவீனயப்படுத்தல் செயற்பட்டுக்கு ஒதுக்கப்படும். கொழும்பு மாநகரில் உள்ள பயணிகளில் 45 வீதமானவர்களே பஸ் சேவையைப் பயன்படுத்துவதுடன், குறைந்தவருமானம் பெறும் நபர்களாலேயே இது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்பாடானது ஸ்மார்ட் அட்டையின் அடிப்படையில் தன்னிச்சயாக கட்டணங்களை அறவிடும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும். ஒரு அட்டையை பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைவதுடன், பஸ்கள் சரியான முறையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்டுகொள்வதற்காக ஜிபிஸ் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்குகிறது. சரியான நேரசூசியில் பஸ்கள் செயற்படுகின்றனவா, பஸ்களில் பயணிக்கும் பெண்கள், வயது வந்தவர்கள், மாற்றுவலுவுடையவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இது உதவியாகவிருக்கும். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் செயற்பாட்டாளர்கள் அதிநவீன போக்குவரத்துக்கான புதிய பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடுகளை செய்வதற்கு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் உதவியளிக்கும்.

* 140 மில்லியன் கிராமிய போக்குவரத்து செயற்பாடானது மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களுக்கிடையிலான ஏறத்தாள 131 கிலோமீற்றரைக் கொண்ட மத்திய வளைய வீதி வலையமைப்பை மேல் மாகாணத்தின் சந்தைகள் மற்றும் துறைமுகங்களுடன் இணைப்பதை மேம்படுத்தும். மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் பல்வேறு பிரிவு வலையமைப்புக்களை புனரமைக்கும். கிழக்கு மாகாணத்திலுள்ள பயணிகள் மற்றும் பொருட்கள் இந்த வலையமைப்பின் ஊடாகப் பயணப்படும். இந்த வலையமைப்பை மேம்படுத்துவது விவசாயம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மையமாகவிருக்கும் மத்திய பிராத்தியத்துக்கும், அங்குள்ள இன பல்வகைமை மற்றும் வறுமைநிலையில் உள்ள அதிகமானவர்களுக்கும் நன்மையாக அமையும்.

மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம்

காணித் திட்டமானது 67 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டது என மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இடஞ்சார் தகவல்கள் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் காணி உரிமைத் தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை விஸ்தரிப்பது மற்றும் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டமானது பயன்படுத்தப்படாதுள்ள அரசாங்க காணிகளை அடையாளம் கண்டு அவற்றை முடிந்தளவு வினைத்திறனாகப் பயன்படுத்தவும், அவற்றை அரசாங்கம் குத்தகைக்கு வழங்கி ஆகக்கூடியளவு வாடகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாகவிருக்கும். அத்துடன் பணிக்காலப் பாதுகாப்பு மற்றும் சிறுகாணி உரிமையாளர்கள், பெண்கள் நிறுவனங்களுக்கான காணி வர்த்தகத்தன்மை என்பவற்றை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட காணி உறுதிகளைப் பேணவது போன்றவற்றால் பாதிப்புக்கள், திருட்டுக்கள், இழப்புக்களிலிருந்து தவிர்த்தல் என்பவற்றுக்கு உறுதுணையாக இருப்பதுடன், தலைப்புப் பதிவு முறையிலிருந்து காணி உறுதி முறைக்கு சொத்துக்களை மாற்றுவதாகும். காணித் திட்டமானது ஐந்து செற்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள முயற்சிகளை மேம்படுத்துவதாக இவை அமையும். அவையாவன:

* நிலம் தொடர்பான காணி வரைபடத்தை உருவாக்குவது மற்றும் அரசாங்க காணிகள் குறித்த முழுமையான இருப்புக்களைப் பெறுதல், ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமைக்கு தகவல்களை வழங்குதல். மதிப்பீடு 23,400,000 டொலர்கள்;

* கணினி மயப்படுத்தப்பட்ட வெகுஜன மதிப்பீட்டுக்கு உதவியாக அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், மதிப்பீட்டுத் திணைக்களத்தைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலப்படுத்துதல். மதிப்பீடு 6,5000, 000 டொலர்கள்;

* காணி உறுதி பதிவேட்டில் உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயப்படுத்தி மேம்படுத்தல், டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் அவற்றை இணைத்தல், அரசாங்கத்தின் ஈ-பதிவு முயற்சிகளைக் கட்டியெழுப்புதல். மதிப்பீடு 11,400,000 டொலர்கள்;

* காணி உறுதி முறையிலிருந்து தலைப் பதிவேட்டு முறைக்குச் சொத்துக்களை மாற்றுவதன் ஊடாக காணி உரிமையாளர்களின் உரிமையை மேம்படுத்தல். அரசாங்கத்தின் பிம் சவிய திட்டத்தை விஸ்தரித்தல். மதிப்பீடு 19,300,000 டொலர்கள்;

* காணி நிர்வாக கொள்கைத்திட்டங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான ஆய்வுளுக்கு உதவியளித்தல். மதிப்பிடு 6,700,000 டொலர்கள்;

ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமை என்பது அரசாங்கத்தின் பல்வேறு முகவர்களிடம் உள்ள அரச காணிகள் தொடர்பான காணி வரைபடைத்தை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப பொறிமுறையாகும். இந்தப் பொறிமுறையானது அரசாங்கம் ஏற்னவே குத்தகைக்கு வழய்கிய அரச காணிகள் குறித்த தகவல்கள் பற்றிய விண்ணப்பங்களை பின்தொடர்ந்து அவற்றிலிருந்து வருமானங்களை சேகரித்துக் கொள்ளும். அரசாங்கம் தற்பொழுது காணி மதிப்பீட்டு செயற்பாட்டை தானியங்குமுறைக்கு மாற்றி வருகிறது. இது வரி மதிப்பீடு மற்றும் ஏனைய தேவைகளுக்காக சொத்துக்கள் மதிப்பிடப்படுவதை விரைவுபடுத்தும். ஈ-காணி பதிவேடு முறைமையானது காணி பதிவுத் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன், காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கான தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் வழிகோலும். பிம் சவிய திட்டமானது தனியார் காணிகளை காணி உறுதி முறையிலிருந்து மிகவும் பாதுகாப்பான தலைப்பு பதிவு முறைக்கு மாற்றுவதாகும். துரதிஸ்டவசமாக போதிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இன்மையால் இந்த முயற்சிகள் யாவும் அங்கும் இங்குமாக இழுபடுவதுடன் சரியான ஒருங்கிணைப்பின்றிக் காணப்படுகின்றன. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் காணி திட்டமானது இந்த வளப் பிரச்சினையை நிவர்த்திசெய்யும்.

Comment (0) Hits: 36

சஹ்ரானை பின்தொடர்பவர்களை தேடி தமிழகத்தில் சோதனை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் பின்தொடர்பவர்களுடையது என கருதப்படும் தமிழகத்தின் 6 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் நேற்று (31) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் மற்றும் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பு கொண்டுள்ள நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது இரண்டு மடிக்கணினிகளும், 08 கைப்பேசிகளும், 05 சிம் அட்டைகளும் எஸ்.டீ நினைவக சிப் ஒன்றும் மற்றும் 14 ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Comment (0) Hits: 37

சஜித்திற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்து!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமயிலான ஐக்கிய தேசிய முன்னணியானது தனது பங்காளி அரசியல் கட்சிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சிவில் அமைப்புகளுடன் இன்று (01) கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, றிசாட் பதியுதீன், றவூப் ஹக்கீம், மனோகனேசன், வி.ராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    

Comment (0) Hits: 29

தமிழ் அரசியல்வாதிகள் பிரதான கட்சிகளுடன் இணையும் நாள்? - ரணில்!

தேசிய பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொள்ள முடியுமாக  இருந்தால் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு, பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரத்மலானை சில்வாஸ் மண்டபத்தில் இடம்பெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பின் போது, தேசிய பிரச்சினை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது,

“அரசியலமைப்பு தொடர்பில் அனேக யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் நாம் அனேக பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம். கூட்டணி இதனை எதிர்த்ததால் அன்று இதனைச் செய்ய முடியாது போனது.

ஜனாதிபதி தேர்தலில் பின்னர், பாராளுமன்றத்தில் 125 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்போது குறித்த திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும்.

தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொள்வது ஒற்றையாட்சியினுள் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அதிகாரத்தைப் பகிர்வதேயாகும். தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தாருங்கள், அப்போது தமது கட்சிகள் தேவையில்லை என்றும், அக்கட்சிகளைக் கலைத்துவிட்டு பிரதான கட்சிகளோடு இணைந்து கொள்வதாகவும் அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்” என்றார்.

Comment (0) Hits: 33

கோட்டாவுடன் கூட்டுசேர குப்பையை சாட்டாக பயன்படுத்திய பாயிஸ்!!

புத்தளம் நகரபிதா பாயிஸ் நீண்டகாலமாக மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடி.

முன்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றியவர். கடந்த தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள், மஹிந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளை வெறுத்து, 2015 இல் மைத்திரிக்கு ஆதரவளித்த போது, இவர் வேறு வழியின்றி ஒட்டகத்தின் மீதேறி, தேர்தல் கேட்டு படுதோல்வி அடைந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி அஞ்ஞானவாசம் செய்தார். புத்தளத்தில் உள்ள தனது தோட்டத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட இவர் முயற்சித்த போதும் அக்கட்சியின், புத்தளம் மாவட்ட முக்கியஸ்தர் அலி சப்ரியின் எதிர்ப்பின் காரணாமாக, அந்த முயற்சி கைகூடாமல் போனதால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார்.

புத்தளம் மாவட்ட மு.கா முக்கியஸ்தர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே, அக்கட்சியின் தலைவரால் இவர் மீண்டும் உள்வாங்கப்பட்டு, மரத்தில் ஏறி நகரபிதா ஆனார். புத்தளத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அத்தனை மாசடைதல் திட்டத்திலும் இவருக்கு பாரிய பங்குண்டு எனவும் அந்த திட்டங்களை புத்தளத்தில் கொண்டு வருவதற்கு, இவருக்கு கையூட்டல் கொடுக்கப்பட்டதாகவும் பரவலான கருத்துக்கள் உண்டு.

புத்தளம் சிறுகடலில் மீனவர்களுக்குத் தீங்கான மின்கம்பி போடல், இயந்திரக் காற்றாடி மற்றும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் போன்ற வேலைத்திட்டங்கள், இவரை கைக்குள் போட்ட பின்னரே புத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டமை, மக்கள் அறிந்த விடயம்.

மேலும், புத்தளம் குப்பை விவகாரத்திலும் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து அவர் சம்பிக்கவை சந்தித்து, அதற்கு அங்கீகாரம் வழங்கிய கதைகளும் உண்டு. மைத்திரிபால சிறிசேன புத்தளத்துக்கு வந்தபோது, பொலிஸாரின் காடைத்தனத்துக்கு புத்தளம் மக்கள் இரையாகியதற்கு இவரது நடவடிக்கையே காரணம். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் புத்தளக் குப்பையை கையில் எடுத்துக்கொண்டு, கோட்டாவுக்கு ஆதரவு வழங்கத் துடிக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, புத்தளம் முக்கியஸ்தர்களான நியாஸ் போன்றவர்களின் முன்னிலையில் சஜித் பிரேமதாச வழங்கிய தீர்க்கமான உறுதிமொழி, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து யஹியா, அலி சப்ரி, முன்னாள் எம்.பி நவவி ஆகியோரின் முன்னிலையில் சஜித் வழங்கிய உறுதிமொழி மற்றும் அண்மையில் புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித் வழங்கிய பகிரங்க உறுதிமொழிகளை நாட்டு மக்கள், பத்திரிகை வாயிலாகவும் புத்தள மக்கள், நேரடியாகவும் அறிந்த விடயமே.

“புத்தளம் குப்பை பிரச்சினையை இதயசுத்தியாக தீர்த்துத் தருகின்றேன்” என்று சமூக ஒப்பந்தம் செய்த சஜித்தை இவர் நம்ப மறுக்கிறார். இதற்குக் காரணம், கோட்டாவின் வலையில் சிக்கி இருப்பதாலாகும். எதிர்காலத்தில் பாயிஸ் கனவு காணும் கோட்டாவின் (Gota) அரசில், கோட்டா (Quota) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர், இப்போது புத்தளம் மக்களை பலிக்கடாவாக்க நினைகின்றார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற நகர சபை உறுப்பினர்களில் சிலரை அச்சுறுத்தி, தமது கைக்குள் போட்டுகொண்டு, இவர் எதிர்கால அரசியல் செய்யப் பார்க்கின்றார்

அந்தவகையில், சஜித்தின் மேடையிலோ சஜித்தின் சந்திப்புக்களிலோ இவர் கலந்துகொள்ளவில்லை. பாயிஸ் நேர்மையானவராக இருந்தால் அங்கு சென்று, புத்தளம் மக்களின் குப்பை பிரச்சினையை சஜித்திடமும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். சஜித் நிராகரித்திருந்தால் அவர் நாடிய வழி சரியானதே. ஆனால், பாயிஸ் என்ற அரசியல்வாதி எப்போதும் நேர்மையானவர் அல்ல. சண்டித்தனமும் காடைத்தனமும் இவரின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.

இப்போது, கோட்டாவை சந்தித்து, புத்தளம் குப்பை பிரச்சினைக்கு கோட்டாவினால் தீர்வை பெற்றுவிட்டதாக கதை விடுகிறார். மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் சிலரையும் “கிளீன் புத்தளம்” அமைப்பிலுள்ள ஒரு சிலரையும் வண்ணாத்திவில்லில் மொட்டுக்கு ஆதரவளிக்கும் பௌத்த மதகுரு ஒருவரையும் மைத்திரியுடன் மிக நெருக்கமான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரையுமே, இவர் புத்தளம் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு, ஒட்டுமொத்த புத்தள மக்களின் சார்பாக அழைத்துச் சென்று கோட்டாவை சந்தித்திருக்கிறார். கோட்டா உறுதிமொழி தந்ததாகவும் கூறுகிறார். பிரச்சினை எல்லாம் முடிவடைந்து விட்டதாகக்கதை அளக்கிறார். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், புத்தளத்தின் முஸ்லிம் பெரியார், கண்ணியத்துக்குரிய அப்துல்லாஹ் ஹஸரத்தும், பாயிஸின் இந்த சிக்குமுக்கு விளையாட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதுதான்.

கோட்டாவை சந்தித்த பின்னர், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் எதிர்ப்பிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனிடம் சென்று, மழுப்பல் கதைகளை கூறியுள்ளதாக புத்தளம் மக்கள் தெரிவிக்கின்றனர். பாயிஸ், உண்மையான இதய சுத்தியான அரசியல்வாதியாக இருந்தால், கட்சியின் மீதும் தலைமையின் மீதும் விசுவாசம் உள்ளவராக இருந்தால், மு.கா தலைமையின் அனுமதியுடன் கோட்டாவை சந்திக்கச் சென்றிருக்க வேண்டும்.

73472487 412347359452826 1218751314461196288 n

புத்தளம் மக்களின் வாக்குகளை கோட்டாவின் குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு பாயிஸ் எடுக்கும் இந்தக் குப்பை தந்திரம், ஒருபோதும் பலிக்காது என புத்தளத்தின் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்க பாயிஸ்! வெல்லட்டும் அவரது சமூக அக்கறை!  

 

Comment (0) Hits: 35

பக்கம் 11 / 70