V2025

செய்தி

தேர்தல் காலத்தில் அதிகரிக்கும் போலிச் செய்திகளை அடையாளம் காண்பது எப்படி?

 
' அர அபி' என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியதை அராபி என்றும் கோட்டாபயவை 'பரதன்ன' ஓன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய முன்னணி பக்கம்மாறிய சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்தை கோட்டாபயவை 'மரன்ன' ஓன என்றும் இலங்கையிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திகள் தேர்தல் காலத்தில் ஆக்கிரமித்துள்ள போலிச் செய்திகளை வெளிச்சம் போட்டுக்காண்பித்துள்ளன. 
 
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பேசிய வார்த்தைகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமார்த்தியமாக உண்மையாகவே அவர்கள் பேசுவது போன்று அதனைத்தயாரித்தவர்கள் வடிவமைத்துள்ளனர். 
 
காணொளிகளை திரிவுபடுத்துவது இலங்கையில் மிகக்குறைவாக நடந்துள்ள போதும் புகைப்படங்கள்  ஆவணங்களில் திரிவுபடுத்தல்களை மேற்கொண்டு போலித் தகவல்களை பரப்பும் நடவடிக்கை கடந்த காலமுதல்  இடம்பெற்றுவருகின்றது . தேர்தல் காலம் என்றபடியால் போலியான தகவல்களை கொண்ட புகைப்படங்கள் அதிகமாக இந்த நாட்களில் வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பமான மனநிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
 
அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுண கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் புகைப்படமென ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 
 
FakeNews 1
 
உண்மையில் ஆராய்ந்து பார்த்தபோது அது கடந்தவருடம் பிரான்ஸில் இடம்பெற்ற கால்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படத்தைத் தான் அநுராதபுரப் பொதுக்கூட்டம் எனப்பகிர்ந்துகொண்டுள்ளனர். 
 
அதுபோன்றே ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் காலி முகத்திடல் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த ஆதரவாளர்கள் தமக்கிடையே மோதிக்கொண்டதாக புகைப்படமொன்று வெளியாகியிருந்தது. 
 
FakeNews 2
உண்மையில் ஆராய்துபார்த்ததில் அது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. 
 
இதனைத் தவிர ஐக்கிய தேசிய முன்னணியின் காலிமுகத்திடல் பொதுக்கூட்ட்த்தில் சஜித் பிரேமதாஸவிற்கு பின்னால் நின்றுகொண்டிருந்தவர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது. 
FakeNews 4FakeNews 4
 
இப்படியாக பலதரப்பினையும் பாதிக்கும் வகையில் போலிச் செய்திகள் தற்போது அதிகளவில் பரப்பப்படுகின்றன. 
 
போலித்தகவல்களை நாம் ஆராய்ந்தால் அதன் உண்மையைக் கண்டறியமுடியும் . கடந்த காலத்திலும் இவ்வாறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஆனால் இணைய யுகத்தில் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் போலிச் செய்திகளைப் பரப்பும் வேகம் அதிகரித்துவிட்டமை அதாவது போலிச் செய்திகள் வைரலாக துரித கதியில் பரப்பப்படும் சாத்தியம் உள்ளதால் அதனால் ஏற்படும் தாக்கம் அபாயகரமானதாகக் காணப்படுகின்றது. 
 
போலித்தகவல் என்பது இரண்டு வகைப்படும்  . தவறான செய்தி என்று தெரியாமலேயே அதனைப்பரப்புகின்றமை மற்றையது தவறான செய்தி என்று தெரிந்தும் அதனைப் பரப்புவது. 
FakeNews5
 
இதில் எது அபாயமானது என்று கேட்டால் இரண்டுமே அபாயகரமானது அவை வைரலாக மாறுமிடத்து என்பதே பதிலாக இருக்கும். 
 
2016ம் ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலின் போது பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் அமெரிக்க ஜனாதிபதியாக யாருமே எதிர்பாராத டொனால்ட் ட்ரம்ப் வந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தநிலையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்றுவாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இங்கு சமூக ஊடகங்களிலும் பிரதான தொலைக்காட்சி மற்றும் ப்த்திரிகைகளிலும் பரப்பப்படும் போலிச் செய்திகளால் இறுதி வெற்றியில் தாக்கம் செலுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது. 
 
 
FakeNews7FakeNews7
 
அப்படியானால் எவ்வாறு துரிதமாக தகவலை போலித்தகலென்றோ அன்றேல் ஒரு செய்தியை போலிச் செய்தியென்றோ அடையாளம் காண்பது என நீங்கள் அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.  
 
அருண் ஆரோக்கியநாதர் 
தொடரும்...
Comment (0) Hits: 171

ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திரிக்கா நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்துச் செயற்படும் இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும்  இடையில் நாளை (01) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.

ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குமிடையிலான ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகாவும் கைச்சாத்திடவுள்ளனர்.

Comment (0) Hits: 41

சஜித் காணும் கனவு சிறந்த கனவு: சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன்!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சமூக புரட்சி பற்றி கனவை காண்பதாகவும் அது சிறந்த கனவு எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (31) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல்  விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

"இந்த சமூக புரட்சியை நாடாளுமன்றத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாது முழு முறைக்கும் சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை சமூக மறுசீரமைப்புக்கு அஞ்சும் நாடு. உள்நாட்டு போருக்கு பின்னர் சமூக மறுசீரமைப்பை மேற்கொள்ள சிறந்த காலமாக இருந்தது. அப்போது அதனை செய்ய முடியாமல் போனது.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையில் பார்க்கும் நிலைமை காணப்படுகிறது. அரசு, நிறுவன கட்டமைப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. இவற்றை மாற்றாமல் நாடு ஒரு அடியை கூட முன்நோக்கி வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

ராஜபக்ஷ ஆட்சியின் பின்னர் அமைந்த அரசாங்கம் பெரியளவில் சமூக மறுசீரமைப்பை மேற்கொள்ளவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தற்போது பேசப்படுகிறது. நவீன உலகில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் அனைத்து நாடுகளிலும் தோல்வியடைந்துள்ளது. பல புதிய அங்கங்களை பல நாடுகள் இதற்கு சேர்த்து வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்ப பெறும் உரிமை அப்படியான ஒன்று.

இலங்கையில் சமூக முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஏற்பட்டால், முதல் சந்தர்ப்பத்திலேயே இலங்கை பல படிகள் முன்நோக்கி செல்லும்.

இதற்காக பொதுஜன அரசியலமைப்பு தொடர்பாக கனவு காண வேண்டும். அதன் மூலம் குரல் எழுப்ப முடியாத மக்களுக்கு, குரலாக மாறும் பொறுப்பு இருக்கின்றது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.உலகில் இலங்கையை போல் வீழ்ச்சியுற்ற நாடுகள் பொதுஜன அரசியலமைப்பை உருவாக்கியதன் மூலம் வெற்றிகரமாக முன்னேறியுள்ளது" என்று  கூறினார்.

 
 
Comment (0) Hits: 38

தயாசிறி மத்திய வங்கிக் கொள்ளையுடன் தொடர்புபட்டதாக கூறும் கோத்தாபய தரப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தரப்பே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
 
கோத்தாபய ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கை குறித்த வேலைத்திட்டங்களில்  ஒன்றாக, கலாநிதி ராஜா தர்மபாலவினால் எழுதப்பட்ட “வீர சபுமல் யலி எவித்” என்னும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலிலேயே தயாசிறி ஜயசெகர தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது 
 
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
தயாசிறி ஜயசேகரவும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பணத்தைக் கொள்ளையிடவே வெளிநாட்டவர் ஓருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Comment (0) Hits: 33

சுதந்திரக் கட்சி – மொட்டு கட்சி ஒப்பந்த இரகசியம் அம்பலம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மொட்டு கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பிலான இரகசியம் அம்பலமாகியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதநதிரக் கட்சிக்கான சலுகைகள் அனைத்துமே 2018ம் ஆண்டு பிரதேச சபை தேர்தலின் அப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த உடன்படிக்கையின் மூலம், தமது கட்சிக்கு பாரியளவிலான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் 12ம் சரத்தின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் தேசிய ரீதியான, மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களின் போது வேட்பாளர் எண்ணிக்கை நிர்ணயம் குறித்து விதந்துரைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியினால் ஈட்டப்பட்ட வெற்றிகளின் அடிப்படையிலேயே வேட்பாளர் எண்ணிக்கை பகிரப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சுதந்திரக் கட்சிக்கு அநீதி ஏற்படுத்தக் கூடிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்ட காரணத்தினால் இந்த உடன்படிக்கை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என குறித்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
 
2018ம் ஆண்டு தேர்தலின் அடிப்படையில், வேட்பாளர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டால் சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.
Comment (0) Hits: 38

தபால்மூல வாக்களிப்பு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை!

தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையும் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Comment (0) Hits: 35

சஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளியிடப்பட்டது!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார்.

கண்டி, குயின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனாதிபதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து மகாநாயக்கர், அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் " சஜித் சமூக புரட்சி" என பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
Comment (0) Hits: 34

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு!

நாடாளாவிய ரீதியில் தபால் மூலமான வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இதற்காக 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 659,514 பேர் தகுதிபெற்றுள்ளனர். எதிர்வரும் 4ஆம் திகதி பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள், எதிர்வரும் 7ஆம் திகதி மாவட்ட செயலகங்களில் அல்லது தேர்தல் தினமான நவம்பர் 16 இல் வாக்களிக்க முடியும். காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தகுதி பெற்ற அரச அதிகாரிகள் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியுமெனவும்,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைக்காக தேர்தல்கள் செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், "கபே" மற்றும் "பெப்ரல்" அமைப்பின் அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 40ஆயிரம் முதல் 50ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடக்கூடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வண்டிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிக்கடி பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடவும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில், நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், பெப்ரல் அமைப்பு சார்பில், தபால்மூல வாக்களிப்புக்காக 1,000 பேர் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பிற்கு மத்தியிலும், பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானது. இந்நிலையில்,  ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் தபால் மூல வாக்களிப்பை ஹற்றன் ஸ்ரீபாத வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் மேற்கொண்டுள்ளனர்.


மேலும், ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட சுமார் 2,000 ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், வாக்களிப்பு ஆரம்பமானதுடன் ஆசிரியர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது.

இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு திணைக்களங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை 9 மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.



மேலும் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்   நாவிதன்வெளி பிரதேச செயலகம்  கல்முனை மாநகர சபை  நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றிலும் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன்  7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Comment (0) Hits: 33

பிரதமர் பதவி : ரணில் கூற்றுக்கு சஜித்தின் பதில்!

ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களிடையே தான் நியமிக்கத் தீர்மானித்திருப்பது ஒரே ஒரு பதவி மாத்திரமே என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்திருப்பது மாத்திரமே தான் இதுவரை தீர்மானித்துள்ள ஒரேயொரு பதவி என இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இதனைத் தெரிவித்திருப்பது அவர் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னரும் பிரதமராகப் பதவி வகிப்பது தானே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு அலரி மாளிகையில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியதைத் தொடர்ந்தேயாகும்.

தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதா? இல்லையா என்ற விடயத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதுவரை சரியான பதிலை வழங்கவில்லை என்பதோடு, இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இத்தேர்தல் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தவிற பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல எனத் தெரிவித்து வந்தார்.

Comment (0) Hits: 42

'புதிய அரசாங்கத்தின் பிரதமராகவும் நானே பதவி வகிப்பேன்' - ரணில்!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தானே பதவி வகிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக செயற்படும் அதேவேளை, இப்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் புதிய அரசாங்கத்திலும் தொடர்வதற்கு அவ்வரசின் பிரதமர் என்ற அடிப்படையில், சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் தமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில், அலரி மாளிகையில் இன்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு பெருமளவு கடனை மீளச்செலுத்த வேண்டிய நிலையிலிருந்த பொருளாதாரத்துடனேயே அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டோம். அவ்வாறிருந்தும் கூட பொருளாதாரத்தை வலுப்படுத்திய அதேவேளை, ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்தோம். அவற்றை விடவும் முக்கியமாக, சுதந்திரமானதொரு சமுதாயத்தை உருவாக்கினோம். அதனூடாக இன்றளவில் ஊடகவியலாளர்கள் பெருமளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருகின்றனர்" என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

2015 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை வாக்குகளால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவம்பர் 16 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி யார் ஜனாதிபதியானாலும், 19 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லாமல், அடுத்த வருடம் (2020) மார்ச் மாதத்திற்கு முன்னர், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Comment (0) Hits: 34

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' புதிய லொத்தர் டிக்கட் அறிமுகம்!

அரசாங்கத்தின் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், தேசிய லொத்தர் சபையினால் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செல்வப் புதையல்” என்ற பெயரில் புதிய லொத்தர் டிக்கட் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சீட்டிழுபில், முதல் பரிசாக 08 கோடி ரூபாவை வழங்கும் இந்த லொத்தர் டிக்கட்டின் முதல் பிரதி, இன்று (30) நிதி அமைச்சில், தேசிய லொத்தர் சபையின் பொதுமுகாமையாளர் தர்சன விஜேசிறிவர்தன அவர்களினால் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செல்வப் புதையல்’ லாட்டரி டிக்கட் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக. பொது திறைசேரியில் வரவு வைக்கப்படும்.

இந்த நிகழ்வில், பொது திறைசேரியின் பிரதி செயலாளர் திரு.ஏ.ஆர்.தேசப்பிரிய, பொது திறைசேரியின் பிரதி செயலாளர் திரு.ஏ.எம்.பி.எம்.வி.அத்தப்பத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

DSC 0574

DSC 0632

DSC 0631

 

Comment (0) Hits: 35

‘ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை சின்னாபின்னமாக்க சதி’ - ரிஷாட்!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பி.ஹரிசன், சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், ஜெயதிலக, நியாஸ் மற்றும் ஐ.தே.க முக்கியஸ்தர்களான கருணாதாஸ, திருமதி. டயானா கமகே, முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,
 
“அராஜக ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கில், இனவாதக் கூட்டம் ஒன்று திட்டமிட்டு செயற்படுகின்றது. சிங்கள பிரதேசங்களில் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் சிறுபான்மைத் தலைமைகள் தொடர்பிலும் முரண்பாடான, திரிவுபடுத்தப்பட்ட வதந்திகளையும் செய்திகளையும் பரப்பி, பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென முயற்சிக்கின்றனர்.
 
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மூவின மக்களும் அதாவது, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்றனர். அந்த மக்களின் பிரதிநிதிகளும் தலைமைகளும் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். “இன ஒற்றுமையையும் மத ஒற்றுமையையும் ஏற்படுத்தி, இந்த நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழச் செய்வேன்” என இதயசுத்தியுடன் பகிரங்கமாக கூறிவரும் சஜித் பிரேமதாசவை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் சிறுபான்மை தலைமைகள் அனைத்தும் அவருடன் இணைந்து செயற்படுகின்றனர்.
 
என்னைப் பொறுத்தவரையில், சிறுபான்மை மக்களின் 90 % சதவீதமான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றேன். இறைவனைத் தவிர, வேறு எந்த சக்திகளாலும் இதனைத் தடுக்க முடியாது. 
 
சஜித் பிரேமதாசவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல்வேறு உபாயங்களும் யுக்திகளும் கையாளப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக, கொழும்பிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கூட்டம், இந்தப் பிரதேசத்துக்கு வந்து, முஸ்லிம் தலைமைகளைப் பற்றி இல்லாதபொல்லாத விடயங்களைக் கூறி, சஜித்தின் வாக்குகளை உடைக்கப் பார்க்கின்றது. அதேபோன்று, முஸ்லிம் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு வேட்பாளருடன் இன்னொரு கூட்டம் இணைந்து, முஸ்லிம் வாக்குகளை சஜித்துக்கு போகவிடாமல் புறம்பாக்கப் பார்க்கின்றது. அதுமாத்திரமின்றி, தமிழ் மக்களின் வாக்குகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரி, ஒரு கூட்டம் செயற்படுகின்றது. இன்னுமொரு சாரார் மூன்றாம் அணிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற ஒரு கோஷத்தை முன்னெடுக்கின்றனர்.
 
தமிழ் மக்களை பொறுத்தவரையில், பட்ட கஷ்டங்கள் சொல்லொனாதவை. நமக்கு மட்டுமே அது தெரியும். யுத்தத்தால் அகதிகளானோம். சிதறடிக்கப்பட்டோம். வாழ்விழந்தோம். துயரங்களை சந்தித்தோம். எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டனர். அந்த உறவுகளைத் தேடி தாய்மார்கள் கண்ணீருடன் இன்னும் அலைந்து திரிகின்றனர். சிற்சில தவறுகளுக்காக இன்னும் பலர் “அரசியல் கைதிகள்” என்ற போர்வையில், சிறையில் வாடுகின்றனர். இவ்வாறான துன்பங்களுக்கு மத்தியில் வாழும் நமது மக்களுக்கு, இனி மேலாவது நிம்மதி கிடைக்க வேண்டும். அதற்காக சஜித் பிரேமதாசவை நாட்டுத் தலைவாரக்குவோம்” என்றார்.
 
Comment (0) Hits: 42

சந்திரிகா வருகின்றார் : நவம்பர் 05ம் திகதி கொழும்பில் பிரமாண்டமான மாநாட்டை கூட்டுகின்றார்!

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு தலைமையை வழங்குவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அவரது பணியாளர்களின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அவர் அடுத்த சில தினங்களினுள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்டம் கட்டமாக அழைத்து, அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நவம்பர் 05ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சி அங்கத்தவர்களின் மாநாடு ஒன்றை கூட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த சில தினங்களினுள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Comment (0) Hits: 31

தேசிய பாதுகாப்பு பற்றி தம்பட்டம் அடித்த போதிலும் கோட்டாபயவுக்கு முதுகெழும்பு இல்லை!

சஜித் பிரேமதாசக்கள், கோட்டாபய ராஜபக்ஷக்கள் தேசிய பாதுகாப்பை பற்றி கூறும் விடயங்களால் மாத்திரம் மக்கள் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், கோட்டாபய ராஜபக்ஷ தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்து வருவதாகவும் பெரட்டுகாமி சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (28) பிலியந்தளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“நான் இன்று உங்கள் முன் உரையாற்றும் நேரம் கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். எமக்குள்ள பிரச்சினை அதுவல்ல. செப்டெம்பர் 27ம் திகதி கோட்டாபயவை யாழ் நீதிமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எமது கட்சியின் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் 2012ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி கோட்டபாய பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலத்திலேயே கடத்திச் செல்லப்பட்டனர். அப்போது மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக இராணுவத்தையும், பொலிஸையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலமாகும். எனவே இந்தக் கடத்தலுக்கு கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டிய ஒரவராகும்.  அவரை சாட்சியமளிக்கவே யாழ் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 27ம் திகதி  நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் 24ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்று தனக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளது,  எனவே யாழ் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்டு கோட்டாபய நீதிமன்றத்திற்கு வராதிருப்பது பாதுகாப்பு பிரச்சினையினால் அல்ல என நாம் கூறினோம்.

இன்று யாழ் சென்று கோட்டாபயவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியுமாக இருந்தாலும் யாழ் நீதிமன்றம் சென்று லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிக்க அவரால் முடியாது. காரணம் கோட்டாபய தேசிய பாதுகாப்பை பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி எதனைக் கூறினாலும் அவர்களது காலத்தில் எவ்வாறு லலித், குகன் ஆகியோர் காணாமல் போனார்கள் என்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.  

இன்று அவர் எதனைப் பேசினாலும், ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதைப் பற்றி அவருக்குத் தெரியும். கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டமை அவருக்குத் தெரியும். பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அண்ணனும், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய தம்பியும் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரானவர்களுக்குச் செய்த துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்” என்றார்.

Comment (0) Hits: 25

கோட்டாபயவின் மேடையில் வைத்து ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆரியவதிக்கும் “ஹூ” கோஷம்! (காணொளி)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கந்தளாய் நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, ஸ்ரீ.ல.சு.கட்சி திருகோணமலை மாவட்ட தலைவியும், கிழக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ஆரியவதி கலப்பதிக்கும் மொட்டு கட்சியின் ஆதரவாளர்களால் “ஹூ” கோஷமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹூ கோஷமிடப்பட்டதால் தனது உரையினை இடைநடுவில் கைவிட்ட ஆரியவதி, பின்னர் ஹூ கோஷம் முடிவடைந்ததும் உரையாற்றுமாறு அழைத்த போதிலும் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்.

 

Comment (0) Hits: 25

கோத்தாபய விடுதலையாக்க நினைக்கும் படைவீரர்கள் யார்? (காணொளி)

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விடுதலை செய்வதற்கு நினைக்கும் படைவீரர்கள் யார்? என்பது குறித்து ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
 
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஊடகவியலாளர்களை தாக்கியமை, ஊடகவியலாளர்களை காணாமல் போகச் செய்தமை, மாணவர்களை காணாமல் போகச் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த படைவீரர்களை ஓர் குழு அல்லது தனி நபர் வழிநடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
யூ.ரீ.வி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
போரில் ஈடுபட்டவர்கள் என்ற காரணத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment (0) Hits: 38

குண்டு தாக்குதல் காயம் எங்கே? - கோட்டாவுக்கு படை வீரரின் சவால்! (காணொளி)

கொழும்பு பித்தளை சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆடையில் இரத்தம் வடிந்திருப்பதை படங்களில் காணக் கிடைத்தாலும், அந்த இரத்தம் அவருடையதாயின் அதற்குரிய காயத்தைக் காட்டுமாறு ஓய்வு பெற்ற இராணுவ படைவீரர் ஒருவர் கோட்டாபயவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடும் போது,

“பொதுஜன பெரமுணவுக்கோ, மொட்டு கட்சியில் இருக்கும் எவருக்குமோ, ராஜபக்ஷக்களுக்கோ நாம் பயப்படப் போவதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள படை வீரர்களை விடுதலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். அவரது கொள்கைப் பிரகடணத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை.

நான் படையினரின் போராட்டம் மற்றும் அரசியல் இரண்டையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நான் இராணுவ பேராட்டத்தினால் பிரபலமடையவில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியில் அன்று நாம் ஒன்றிணைந்து பணியாற்றியிருந்தாலும், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தாலும் மற்றவர்களைப் போன்று நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் 2009ம் ஆண்டில் படைவீரர்கள் மாகாண சபைக்கு வந்த போது, மாகாண சபை மேடையில் நான் பிரதான பேச்சாளர். மாகாண சபை அல்லது இப்போது நான் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன். நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அதே போன்றுதான் எம்மால் இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் இருந்தது. 2000ம் ஆண்டில் ஆணையிறவில் நாம் ஆயிரக்கணக்கான படையினர் தனிமைப்பட்டுப் போயிருந்தோம். அப்போது கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை. ஜெனரல் ஜானக பெரேரா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதான் எம்மை மீட்டெடுத்தார்கள். இரண்டு கப்பல்கள் வந்துள்ளது, காங்கேசன்துறைக்குச் செல்ல ஆயத்தமாகுமாறு சொன்னார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினை மீட்டெடுத்த போது கோட்டாபய இருக்கவில்லை.

இப்போது நான் எனது ஆடையைக் கழட்டிக் காட்டுகிறேன். எனது நெஞ்சில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளது. முடிந்தால் கோட்டாபயவின் உடம்பில் ஒரு காயத்தைக் காட்டுமாறு அவருக்கு சவால் விடுகின்றேன்" என்றார்.

Comment (0) Hits: 46

கொலைகார 'வெள்ளை வேன்' ஆபரேஷன் யாருடைய வேலை? - மகேஷ்! (காணொளி)

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தெற்கில் இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியும், படுகொலை செய்யும் கொலைகார வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கி முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார். இலங்கையர்களிடத்தில் பிரபலமாகியுள்ள SL VLOG சமூக வலைத்தளத்துடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வெள்ளை வேன் கலாசாரம் ஒன்றிருந்ததை நாம் எம் இரண்டு கண்களாலும் கண்டோம். இது ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?” என SL VLOG பிரதானி தர்சன ஹந்துன்கொட கேட்ட கேள்விக்கு தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“மிகத் தெளிவாகவே ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினை இருப்பது யார் செய்தது? யாரின் தேவைக்காகச் செய்யப்பட்டது? என்பதில்தான். அப்பாவியான சில இராணுவ படை வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியது அந்த இராணுவ வீரர்கள் அல்ல. அதனைச் செய்ய உத்தரவிட்டவர்களேயாகும்”

அவருடனான பேட்டியின் சில கேள்வி பதில்களை இங்கு தருகின்றோம்.

SL VLOG - கோட்டாபய ஒரு ஜனாதிபதி வேட்பாளர். கோட்டாபய தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

மகேஸ் - இராணுவத்தில் நான் குறுகிய காலம் பணியாற்றியிருக்கின்றேன். அவர் தொடர்பில் என்னிடத்தில் மதிப்பிருக்கின்றது. அந்த மதிப்பு இருப்பது இராணுவ அதிகாரிகளால் அதிகாரிகளுக்கு இருக்கும் மதிப்பு மாத்திரமேயாகும். அதற்கு அப்பால் இந்த அரசியலில் நான் ஒரு போதும் அவரை மதிக்கப் போவதில்லை. காரணம் அவரைச் சுற்றியிருப்பது மீண்டும் அந்த திருட்டுக் கும்பலேயாகும்.

SL VLOG - 2019 நவம்பர் 17ம் திகதி  ஒரு வேளை கோட்டாபய இந்நாட்டின் ஜனாதிபதியானால் நீங்கள் மீண்டும் டுபாய் போய்விடுவீர்களா?

மகேஸ் - நான் இலங்கையிலேயே இருப்பேன். அன்று செய்தவற்றை அவர்களால் இப்போது செய்ய முடியாது. அவ்வாறு செய்யுமளவுக்கு அவர் முட்டாள் அல்ல என்றே நான் நினைக்கின்றேன். அன்றிருந்தவர் அல்ல இன்றிருப்பது. மற்றது கடந்த ஐந்து வருடங்களில் எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்நாட்டில் மனித உரிமைகள் இருக்கின்றன. இந்நாட்டில் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புள்ளது. அந்தக் காலத்தில் இவைகள் எதுவும் இருக்கவில்லை. அவை அவர்களது கைகளிலேயே இருந்தது. அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

SL VLOG - அதாவது கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுயாதீன நீதிமன்றம், சுயாதீன பொலிஸ் போன்ற எதுவும் இருக்கவில்லை என்றா கூறுகின்றீர்கள்?

மகேஸ் - ஆம். அவற்றை அழித்து சேதமாக்கினார்கள் என்றே நான் கூறுகின்றேன். அப்படி இல்லை என்றால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக அவரை சிறையில் அடைத்திருக்க மாட்டார்கள்தானே. அந்தக் காலத்தில் மக்கள் மிகவும் அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்டமை, ஊடகவியலாளர்களை வீதியில் படுகொலை செய்தமை, தாக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் அந்தக் காலத்தில்தானே இடம்பெற்றது.

Comment (0) Hits: 43

பக்கம் 12 / 70