V2025

செய்தி

மற்றுமொரு ஐ.தே.க அமைச்சர் இராஜினாமா!

தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (19) தனது உத்தியோகபூர்வமாக ட்விற்றர் கணக்கில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, எமது மக்களை ஒன்றிணைத்து, முன்னோக்கி செல்ல ஞானத்துடனும், பகுத்துணர்வுடனும் செயற்பட வாழ்த்துவதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தோல்வி அடைந்ததையடுத்து, தேர்தலுக்கு அடுத்த தினம் (17) ஏழு பேரும், நேற்றைய தினம் (18) இருவரும் என, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் 9 பேர் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது எரான் விக்ரமரத்ன தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். 10 பேர் இதுவரையில் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 52

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் - மைத்திரியின் தலைமையில்!

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எனினும், பொதுத் தேர்தலுக்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும். 

எனவே, வியாழக்கிழமை மத்திய செயற்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் இதன்போது, அது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும். மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவில்லை. ஆகையால், மத்திய குழு கூட்டத்தில் இதனைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Comment (0) Hits: 60

ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம்; நடந்தது என்ன?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 12.5% சதவீத வாக்குகளை பெற தவறும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 12.5%சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.

மூன்றாமிடத்தைப் பெற்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு, 3.16% வாக்குகளே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும், மேலும் 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 50,000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 75,000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர்.

அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5% சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 56

பிரதமர் தினேஷ்! - மஹிந்தவின் தீர்மானம்!!

காபந்து அசராங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக theleader.lk இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்பொழுது நிறுவப்படவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

இந்த காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவி தினேஷ் குணவர்தனவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு வலுத்து, அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் தற்காலிக அடிப்படையில், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர்கள் நியமிப்பதில் காணப்படும் சில சிக்கல் நிலைமைகளின் காரணமாகவே, இவ்வாறு தினேஷ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு மஹிந்த திட்டமிட்டுள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், ரணில் பிரதமர் பதவியில் நீடிப்பாரா? அல்லது வேறு ஒருவர் நியமிக்கப்படுவாரா? என்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Comment (0) Hits: 71

ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.க அமைச்சர்களுக்கு “ஹூ”(காணொளி)

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவினருக்கு அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொது மக்களால் “ஹூ” கோசம் இடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்த போதிலும், அவருக்கு எவ்வித எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பவர்களும், நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கேட்டு நிற்பவர்களும் அவர்களிடையே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் பலர் பகிரங்கமாகவே புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Comment (0) Hits: 70

ஐ.தே.க வினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு!

பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் வரையில் ஐ.தே.கட்சி - கூட்டணி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்கட்சித் தலைவருக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

19வது திருத்தத்தன் கீழ், பொதுத் தேர்தலில் தெரிவாகும் அரசாங்கத்தை நான்கரை வருடங்கள் நிறைவடையும் முன்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை. இதனடிப்படையில், குறித்த நான்கரை வருடங்கள் நிறைவடையும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர், பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படல் வேண்டும்.

எவ்வாறாயினும், துரிதமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கும் என்று, பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதே வேளை,  உரிய காலத்திற்கு முன்னர் அவசரமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (18) அநுராதபுரத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த சில்வாவின் வீட்டில் இடம்பெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவதற்கு ஆதரவை வழங்காதிருப்பதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில்  நேற்று இரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையில் கொழும்பில் இடம்பெறவிருந்த கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 
Comment (0) Hits: 57

ஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்!

இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை காலை (18) அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மஹாநாயக்க தேரர்கள், சமயத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தனது பதவிக்கான சத்தியப்பிரமாணத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக முதற்தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கூறிய முக்கிய ஏழு விடயங்கள் வருமாறு,


01. வெற்றியின் பிரதான காரணி : பெரும்பான்மை சிங்கள் மக்கள்

தான் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு சிறப்பான பின்புலமாக அமைந்தது இலங்கையின் நாலா புறங்களிலும் உள்ள மகா சங்கத்தினர் தனக்கு வழங்கிய ஆசீர்வாதமே என தனது உரையைத் தொடங்கிய கோட்டாபய ராஜபக்ஸ, தனது வெற்றியின் பிரதான காரணி நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களே என்பதை தான் ஆரம்பத்திலிருந்தே அறிந்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.
 
02. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை
 
தனது வெற்றியின் பங்காளர்களான ஆகிக் கொள்ளுமாறு தமிழ் முஸ்லிம் மக்களிடம் வேண்டிக் கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ இங்கு குறிப்பிட்டார். எனினும் தான் எதிர்பார்த்தவாறு அச்சமூகத்திடமிருந்து வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக உண்மையான இலங்கையர்களாக தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
 
03. சமய மற்றும் தேசிய அடையாளங்களை பாதுகாத்து வாழக்கூடிய சூழல்
 
பௌத்த சிந்தனைகளைப் பாதுகாத்து போசிப்பதற்கும், சிங்கள கலாசாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்கு அரச அனுசரணையினை வழங்குவதாகவும் புதிய ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் தமது சமயம் மற்றும் தேசிய அடையாளங்களைப் பாதுகாத்து கௌரவமாக வாழக் கூடிய உரிமையினை பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது கூறினார்.
 
04. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
 
இலங்கை தீவிரவாதம், பாதாள உலகச் செயற்பாடுகள், கப்பம், போதைப் பொருள் வர்த்தகம், பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் அற்ற பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான தேசிய பாதுகாப்பு பொறிமுறையினை மீண்டும் பலப்படுத்துவதாக புதிய ஜனாதிபதி இதன் போது கூறினார்.
 
05. கொள்கைப் பிரகடணத்தில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதி
 
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்த தனது கொள்கைப் பிரகடணத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் தனது பதவிக் காலத்தினுள் நிறைவேற்றுவதாக மக்களுக்கு இதன் போது வாக்குறுதி வழங்குவதாக ஜனாதிபதி கூறினார். தனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் புதிய ஜனாதிபதி இதன் போது கூறினார்.
 
06. வெளிநாடுகளிடம் கோரிக்கை
 
உலக அரசியலில் பல்வேறு நாடுகளுக்கிடையான அதிகாரப் போராட்டங்களில் இலங்கை தலையிடாது எனத் தெரிவித்த புதிய ஜனாதிபதி இலங்கையுடன் உறவுகளை ஏற்படுத்தும் போது இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக் கொண்டார்.
 
07. புதிய அரசாங்கத்தை அமைப்பேன்
 
தனது கொள்கைக்கு அமைய செயற்படக் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதாகவும் புதிய ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். நான் இந்நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகும். நாட்டின் நலனுக்காக எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் இங்கு கூறினார்.
 
Comment (0) Hits: 65

'மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்' - சிவாஜிலிங்கம்!

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.  மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம் என  அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் அவருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

ஆகவே கோத்தாபயவிடம் அனுமதியை நாம் கேட்கவில்லை.ஆனால் இதற்கு இடையூறாக அரச தரப்பு இருக்க வேண்டாம்.தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாம்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதனை மீறி அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

பின்னர் அனைத்து இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுச்டிகபடும்.எந்த இடத்திலாவது மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் தடை செய்யப்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக நான் அந்த இடத்துக்கு வந்து நான் அந்த துப்பரவு பணிகளுக்கு ஆதரவு கொடுப்பேன்.இந்த தடைகள் உடைத்தெறியப்பட்டு மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.

தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களையும் நினைவு கூறுவோம்.விடுதலைக்காக போராடிய அனைவரையும் நெஞ்சில் இருத்தி நினைவு கூறுவோம்.மக்களோடு மக்களாக அனைவரும் உணர்வு பூர்வமாக மாவீரர்  தினம் அனுஸ்டிக்கப்படும்" என்றார்.

Comment (0) Hits: 58

'இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த தயாராகவே உள்ளோம்' - சேனாதிராஜா!

மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல் ரீதியாக ஸ்திரமான நிலைமை ஏற்பட்டது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தெரிவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். என்றாலும், இனவிடுதலைத் தொடர்பில் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர். அதனையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

ஸ்திரமான அரசியல் சூழல் மற்றும் அவரது கொள்கைகள் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதும் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம் என்றார்.

Comment (0) Hits: 46

ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்!

ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்சித் தலைவரின் எண்ணங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மக்கள் வழங்கியுள்ள ஆணையை ஏற்று அதற்கு ஏற்றால் போல் தனது எதிர்கால நடவடிக்கைகள் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 61

வடமாகாண பெண்­களும் அவர்­க­ளது தேவை­களும்!

இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது.

யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இதுவரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் போது நாம் அனை­வரும் உள­வியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளா­கின்றோம். இருப்­பினும் அதன் தாக்­கங்கள் அல்­லது வெளிப்­பா­டுகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் வேறு­பட்டு காணப்­படும். சிலர் அதனை மன­த­ளவில் சகித்­துக்­கொள்­வார்கள் மற்றும் சிலர் நெருங்­கி­ய­வர்­களின் உத­வியை நாடிச் செல்­வார்கள் இன்னும் சிலர் முறை­யான ஆலோ­ச­னைகள் மூலம் குறித்த வடு­வி­லி­ருந்து மீள முயற்சி செய்­வார்கள்.

நேர­டி­யாக யுத்­தமும் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையும் வட மாகாண பெண்கள் மத்­தியில் பாரிய அள­வி­லான உள­நல பாதிப்­புக்கு வித்­திட்­டது என்­பது உண்­மை­யாகும். யுத்­தத்­திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகு­தியில் நிறைய  பெண்கள் வித­வை­க­ளா­கவும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளா­கவும்  குடும்ப பொறுப்­புக்­களை சுமக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பெரும்­பா­லான பெண்கள் நேர­டி­யாக காணாமல் ஆக்­கப்­பட்ட தங்கள் பிள்­ளை­களை, கண­வனை, சகோ­த­ரனை தேடி தேடி பல்­வேறு கட்ட போராட்­டங்­களை முன்­னெ­டுத்து உள ரீதியில் பாதிக்­கப்­பட்டு தங்கள் வாழ்க்­கையை பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் கொண்டு செல்­கின்­றனர்.

இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்­பங்­களை மீள் உரு­வாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண் தலை­மைத்­துவ குடும்ப பெண்கள் நுண்­நிதி நிறு­வ­னங்­க­ளிடம் நேர­டி­யாக கட­னா­ளி­யாகி உள்­ளனர். இவற்­றுக்கு நேர­டி­யாக நுண்­நிதி கடன்­வ­ழங்கும் நிறு­வ­னங்­களை குறை­கூற முடி­யாது. பல குடும்­பங்கள் குறித்த நுண்­நிதி கடன்­களை பெற்று தமது வாழ்­வா­தா­ரத்தை முறை­யாக கையாண்டு முன்­னேறி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கதே. ஆனால் இங்கு காணப்­படும் பிர­தான பிரச்­சினை யாதெனின் குறித்த பெண்­க­ளுக்­கான வாழ்­வா­தார மேம்­பாட்டு திட்­டங்கள் தொடர்ந்தும் நடை­பெற்று வந்­தாலும் தேவை­ய­டிப்­ப­டையில் பட்­டி­ய­லிடும் போது அவ்­வ­கை­யான மேம்­பாட்டு திட்­டங்­கள் தேவை­யினை விடவும் மிக குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.

அதேபோல் அதி­க­மான குடும்­பங்­களின் வரு­மா­னத்தை விட அவர்­க­ளது செல­வுகள் அதி­க­மாக காணப்­ப­டு­வது, வீண்­வி­ரயம் மற்றும் வரவு செல­வு­களை முறை­யாக கையாள முடி­யாமை போன்ற கார­ணங்­க­ளி­னாலும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் நுண்­நிதி கடன்­களை மேல­திக சுமை­க­ளாக சுமக்­க­வேண்­டிய நிலை உரு­வா­கின்­றது. இவ்­வாறு அதி­க­ள­வான குடும்ப சுமை கார­ண­மாக ஏற்­ப­டு­கின்ற உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முறை­யாக சிகிச்­சைகள் பெறா­விடின் குறித்த உள­நல பிரச்­சி­னைகள் அவர்­களை தற்­கொலை போன்ற தவ­றான முடி­வு­களை மேற்­கொள்ள வழி­வ­குக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில் அவர்­களை நம்­பி­யுள்ள குடும்­பத்தின் நிலைமை கேள்விக் குறி­யா­கின்­றது.

இவ்­வா­றான உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை வடக்கு கிழக்கு பெண்கள் அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் அர­சாங்கம் முறை­யான ஒரு அர­சியல் சமூக பொரு­ளா­தர சாசன செயற்­றிட்­டத்­தினை மேற்­கொள்­கின்ற போது இவர்­க­ளுக்­கான விசேட அவ­தா­னிப்­புக்­களை உள்­ள­டக்­கு­வது பொருத்­த­மாக காணப்­படும் என்­பது உண்­மை­யாகும்

குறிப்­பாக பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு என விசேட தொழில் பயிற்­சிகள், சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் என அனைத்தும் உரிய முறையில் உரு­வாக்­கப்­பட வேண்டும். மேலும் வாழ்­வா­தார உத­விகள், அர­ச­க­ட­னு­த­விகள் என்­பன வழங்­கப்­படும் போது பெண்­த­லை­மைத்­துவ குடும்­பங்கள் நேர­டி­யாக பயன்­பெ­று­வ­துடன் நுண்­நிதி நிறு­வ­னங்­களின் கடன்­ சு­மைக்குள் சிக்­காது பாது­காக்­கப்­ப­டு­வார்கள். அதே நேரத்தில் இளம் வித­வைகள் விட­யங்­களில் அவர்­க­ளுக்­கான அரச வேலை­வாய்ப்­புக்­களை அல்­லது மீள் வாழ்தல் நிலையை உரு­வாக்க வழி ஏற்­ப­டுத்தல் மற்றும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்­கான கல்வி, பாது­காப்பு மற்றும் ஏனைய அத்­தி­ய­ாவ­சிய தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள வழி­வ­குத்தல் என்­பன அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வழி­வ­குக்கும் அதே­வேளை அவர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்கும் உறு­து­ணையாய் அமையும்.

அதே நேரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டவர் விட­யம்,  யுத்த விசா­ர­ணை, அங்­க­வீனம் உற்ற பெண்கள் விடயம் தொடர்­பாக அர­சாங்கம் உண்­மை­யான பதிலை வழங்­கு­வதே வடக்கு கிழக்கு பெண்­களின் உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை குறைப்­ப­தற்­கான சிறந்த வழி­யாகும்.

ஓர் பிரச்­சினை அல்­லது மன­வடு சார் அனு­ப­வத்­தினை எதிர்­கொண்ட ஒரு­வரின் உள­நலம் பாதிக்­கப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், சிறு­வர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்­காக உளநல ஆலோசகர்கள் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் போதுமான அளவு பணியில் அமர்த்துதல் அவர்களுக்கான வாழக்கை மேம்பாட்டுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் ; (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ; (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 – ஜோசப் நயன் –

Comment (0) Hits: 53

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

Comment (0) Hits: 64

இராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க!

மெகா பொலிஸ், மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தினை இன்று மாலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், ஹரீன் பெர்னாண்டோ, மலிக் சமரவிக்ரம ஆகியோரும் இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தனவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான அஜித் பி பெரேரா ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 44

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய!

இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பௌத்தர்களின் புனித பூமியான சரித்திரம் வாய்ந்த அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், கோத்தாபய ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளுடன் இந்த பதவி பிரமாணம் இடம்பெற்றது.

பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தலங்களான ருவன்வெலி மகாசாய மற்றும் ஸ்ரீமகா போதி ஆகிய விஹாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் இருந்த பௌத்த விஹாரையாக ருவன்வெலி மகாசாய விளங்குகின்றது.

புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விஹாரையிலேயே உள்ளது.

இந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலி மகாசாய ஆகிய விஹாரைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விஹாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனித ஸ்தலங்களாக விளங்குகின்றன.

இந்த விஹாரையுடன் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி நீளமானதுடன், அதில் ஒரு பக்கத்தில் மாத்திரம் 40 தூண்கள் வரிசையாக அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கட்டடமானது 1600 தூண்களுடன் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது.

ருவன்வெலி மகாசாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோத்தாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் மிகப் பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால், ருவன்வெலி மகாசாயவிலிருந்து பதவிப் பிரமாணம் செய்வது மிக சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே  அங்கு பதவி பிரமாண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Comment (0) Hits: 57

அரசில் இருந்து விலகுவதா? பொதுத்தேர்தலுக்கு செல்வதா?

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கமாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக  அனைத்து அரச கட்சி  உறுப்பினர்களும் இன்று (18) பிற்பகல் ஒன்றுகூடவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களை சந்தித்த பின்னர், அனைத்து எம்.பி.க்களையும் இணைத்து  இறுதி முடிவு எடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதன்படி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக  தகவல்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது அரசாங்கம் பதவி விலகுவதா, இல்லையெனில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு வழங்குவதா என்பது குறித்து  இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Comment (0) Hits: 49

அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்!

ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 58

கோட்டா 11 மாவட்டங்களில் முன்னிலையில்: வடக்கு, கிழக்கு, மலையகத்தில் சஜித் முன்னிலையில்!

இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பில் இதுவரை அறிக்ககையிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுமார் 11  இலட்சம் வாக்குகளை சஜித் பிரமேதாச பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பில் இதுவரை அறிக்கையிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் பிரகாரம்,  வடக்கு - கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுமார் 11  இலட்சம் வாக்குகளை சஜித் பிரமேதாச பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ தெற்கில் 11 மாவட்டங்களில் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், கிழக்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குககளின் எண்ணிக்கையை  விட, கோத்தபாய பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்படி கோத்தாபய வெற்றி பெறுவதற்கு தெற்கில் 62% சத வீதமான வாக்குகளைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,  கோத்தாபய ராஜபக்ஷ தபால் வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை  வகித்தாலும் அவர் வெற்றிபெற 62% சத வீத வாக்குகளைப் பெற வேண்டியுள்ளது.

Comment (0) Hits: 91

தேர்தல் தொடர்பில் கொழும்பு மாவட்ட அரச அதிபரின் சர்ச்சைக்குரிய பதிவு!

கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கன்னங்கர, சமூக ஊடகத்தில் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான கருத்துக்களை வௌியிட்டமை தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை சார்பில், தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தில், தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் சஜித்திற்கு எதிராக அவர் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அமைச்சரவை, அவரை பதவியிலிருந்து நீக்கும்படியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு அரசாங்க அதிபரின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தபோதிலும், அவரை பதவியிலிருந்து நீக்கி, புதியவரொருவரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, தேர்தல் அறிவிக்கப்பட்டதை காரணம் காட்டி, தேர்தல்கள் திணைக்களம் நிறுத்தி வைத்திருந்தது.

அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரச அதிகாரிகளின் அனைத்து பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும், பதவி நீக்கங்களும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 66

பக்கம் 5 / 70