V2025

பாலியல் வன்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா?

பிபிசியின் Arab world பிரிவு இராக்கில் நடத்திய ஒரு ஆய்வில், எதிர்பாராத ஒரு முடிவு கிடைத்தது - அங்கு பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலான ஆண்களே வார்த்தைகள் அளவிலும், உடலியல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என தெரிய வந்துள்ளது. இது உண்மைதானா?

சமி-க்கு வயது 13

15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மூன்று பேர், சமியை சுவருடன் சேர்த்து பிடித்தபோது அவர் கழிவறையில் இருந்தார். சமியின் உடலின் பாகங்களை அவர்கள் தொட்டு, இழுக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் சமி பயந்து போனார். அவருடைய உடல் அதிர்ச்சியில் செயல் இழந்து போனது. திடீரென ஒரு குரல் கேட்டது.

``நான் அலறத் தொடங்கினேன்.''

இந்தக் கூச்சல் மற்ற மாணவர்களுக்கு கேட்க, அவர்கள் தலைமை ஆசிரியரை அழைத்தனர். அந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் என்ன காரணத்துக்காக அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்றோ, அவர்கள் என்ன செய்தார்கள் என்றோ அவர்களுடைய பெற்றோருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

சமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பின்னர் தலைமை ஆசிரியரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். அப்போது நடந்த விஷயங்கள் மீண்டும் அவரை தாக்குவது போல இருந்தது. ஒப்புதலின் பேரில் நடந்த பாலுறவு என்று அதை பள்ளிக்கூட நிர்வாகம் கருதும் என்றும், நல்ல வேளையாக அவரை பள்ளியில் இருந்து நீக்கவில்லை என்றும் நிர்வாகம் கூறியிருக்கிறது. பள்ளியில் தொடர்ந்து இருப்பதற்கு சமிக்கு `இன்னொரு வாய்ப்பு' வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

``அந்த மாணவர்களுடன் உடன்பாடு கொண்டு நான் செயல்பட்டதைப் போல எல்லோரும் நினைத்தார்கள்'' என்று கூறுகிறார் சமி.

இதனால் அதிர்ச்சியடைந்து, மிரட்டப்பட்ட நிலையில், பெற்றோரிடம் இதைச் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தார். தனக்குள் அதை வைத்துக் கொண்டார். மாதக் கணக்கில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார்.

சமி பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானது இதுவே முதல்முறை.

சமி-க்கு வயது 15

அது 2007. ஓராண்டுக்கு முன்பு அவருடைய தந்தை இறந்துவிட்டார். சம்பாதிக்கக்கூடிய நபரை இழந்துவிட்டதால், குடும்பத்துக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

இராக்கின் பாக்தாத் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் உள்ள செழிப்பான பாபிலோன் மாகாணத்தில் வளர்ந்த சமி, குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். காலை 7 மணிக்கு எழுந்து பள்ளிக்கூடம் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு திரும்புவார். நன்றாக படித்துவிட்டு, பிறகு சகோதரர் அல்லது சகோதரியுடன் நேரத்தை செலவிடுவார். மாலையில் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்று, இரவு அங்கேயே சாப்பிடுவார். அவ்வப்போது அவருடைய தந்தை வேலை பார்க்கும் இனிப்பு கடையில் உதவி செய்வார். அதற்கு ஊதியமாக டோனட்டுகள் (இனிப்பு) கிடைக்கும்.

 

ஆனால் அவருடைய தந்தை மரணம் அடைந்த நிலையில், அவர் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தையில் ஒரு கடையில் அவருக்கு வேலை கிடைத்தது.

அப்போதுதான் அது மறுபடியும் நடந்தது.

கடை முதலாளி அளவுக்கு அதிகமாக தன் மீது கவனம் செலுத்துவது சமிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.

``அவர் என் மீது அளவுகடந்த அக்கறை காட்டினார்'' என்று சமி கூறினார்.

பிறகு ஒரு நாள், தாங்கள் தனியாக இருந்தபோது அந்த முதலாளி சமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, விரல்களால் விளையாடத் தொடங்கினார். அருகில் இருந்த கண்ணாடி கோப்பையைப் பிடித்துக் கொண்டு சமி காதல் இருப்பதைப் போல நடித்தார். பின்னர் அந்த முதலாளியின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

அந்தப் பகுதி வியாபாரிகளிடம் முதலாளி என்ன சொல்லியிருப்பார் என்று சமிக்கு தெரியவில்லை. ஆனால் வேறொரு வேலை கிடைக்க ஓராண்டு ஆனது.

சமி -க்கு வயது 16

அவருடைய தாயாரும், உடன் பிறந்தவர்களும் வெளியில் சென்றிருந்தார்கள். அப்போது உறவுமுறை மூத்த சகோதரர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். சமிக்கு அருகில் அமர்ந்து, தனது செல்போனை எடுத்து, சமிக்கு எதிரிலேயே ஆபாசப் படங்களைப் பார்க்கத் தொடங்கினார். திடீரென சமியை கட்டிப்பிடித்து, பலத்தைக் காட்டி அடக்கி, அடித்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

அதுபற்றி வெளியில் பேச முடியாத அளவுக்கு அந்த கொடூரமான தாக்குதல் மிகந்த வலியைத் தருவதாக இருந்தது. அதுபற்றி அதிகம் நினைத்தால், பதற்றமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்தில் சமி வளர்ந்த வீட்டில் அவரால் மேலும் இருக்க முடியவில்லை.

``அந்த வீட்டை விட்டு வெளியேறி, அங்கிருந்து வெளியில் செல்வதற்கு குடும்பத்தினரை நான் சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. உறவினர்கள் மற்றும் அருகில் வசித்த நண்பர்களுடன் உறவை துண்டித்துக் கொண்டோம்'' என்று சமி கூறுகிறார்.

குடும்பம் முழுவதும் பாக்தாத் நகருக்குச் செல்ல, அங்கு அனைவருக்கும் வேலை கிடைத்தது.

ஏற்கனவே நடந்த தாக்குதல்களின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தன. அதனால் காதல் உறவுகளில் இருந்து சமி தள்ளியே இருந்தார். பிறகு நகரில் கிடைத்த புதிய நண்பர்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இனியும் அவர் விரும்பவில்லை.

அவருக்கான சிறிய குழுவில் இருக்கும் நண்பர்களிடம் தனக்கு நடந்த அனைத்தையும் சொல்லி இருக்கிறார் சமி. இதற்கான எதிர்வினை எதிர்பாராததாக இருந்தது. இந்த அனுபவம் தனக்கு மட்டும் ஏற்பட்டது இல்லை என்று சமி அறிந்து கொண்டார்.

தாங்களும்கூட பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக, அந்த நண்பர்கள் குழுவில் இருந்த இளம் வயது ஆண்கள் கூறியுள்ளனர்.

பிபிசி அரபிக் செய்திகள் பிரிவு 10 நாடுகளிலும், பாலத்தீன எல்லைகளிலும் நடத்திய ஆய்வில், இரண்டு நாடுகளில் - அதாவது துனீசியா மற்றும் இராக்கில் - பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வார்த்தை அளவிலும், உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என தெரிய வந்தது.

துனீசியாவில் இது சிறிய அளவாக, வெறும் ஒரு சதவீதமாக இருந்தது. ஆனால் இராக்கில் மிதமிஞ்சி இருந்தது. அங்கு 39 சதவீத ஆண்கள், வார்த்தை அளவிலும், உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர். இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் இராக் பெண்களின் அளவு 33 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

இராக்கில் 17 சதவீத பெண்கள் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலையில், 20 சதவீத ஆண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.

குடும்ப வன்முறையில் சிக்கியதாகவும் அதிக அளவிலான இராக்கிய ஆண்கள் கூறினர்.

நாட்டில் பெண்களின் உரிமை மோசமான நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளன. அந்த நாட்டு அரசியல் சட்டம் சரத் 41ன்படி, மனைவியை கணவன் அடிப்பது கூட சட்டவிரோதம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நடத்திய அரபு பாரோமீட்டர் அமைப்பில் இணை ஆராய்ச்சியாளராக இருக்கும் டாக்டர் காத்ரின் தாமஸ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் வெளியில் சொல்லாமல் அமைதியாகவும் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

``வன்கொடுமை என்பது போன்ற, உணர்வுபூர்வமான கேள்விகள் கேட்பது, சில எச்சரிக்கைகளுடன் கேட்கப்பட வேண்டும்'' என்று அவர் சொல்கிறார்.

``அதுபற்றிப் பேசுவது தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலோ அல்லது அது தங்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவோ அவர்கள் இதை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம்.''

``ஆண்களுடன் ஒப்பிடும்போது வன்கொடுமைகளை வெளியில் சொல்ல பெண்கள் தயங்குவார்கள்.''

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த இராக்கிய மூத்த ஆராய்ச்சியாளர் பெல்கிஸ் வில்லே இதை ஒப்புக்கொள்கிறார்.

``குடும்ப வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தல் என தங்களுடைய அனுபவத்தை வகைப்படுத்தவோ அல்லது வன்கொடுமை பற்றி பேசவோ பெண்கள் தயங்குவார்கள். இந்த வார்த்தைகளே கூட அவர்களுக்கு பரிச்சயமற்றவையாக இருக்கும்'' என்று அவர் கூறுகிறார்.

இராக் மருத்துவமனைகளில் இந்தப் போக்கைக் காண முடிந்தது என்கிறார் அவர். மருத்துவமனையில் எப்போதும் பாதுகாப்பு அலுவலர்கள் இருக்க வேண்டும் என சட்டம் உள்ளது. தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக ஒரு பெண் கூறினால், அதை அவர்களிடம் டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.

``துன்புறுத்தல் செய்தவர்களை காப்பாற்றுவதற்காக பெரும்பாலும் பெண்கள் பொய் சொல்வார்கள். குறிப்பாக அது தங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால் அவ்வாறு செய்வார்கள். இதுகுறித்து குற்றவியல் விசாரணை நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு இராக்கில் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அறிந்துள்ளது. ஆனால் இவை பல சமயங்களில் காவல் துறையினரிடம் புகாராக வருவதில்லை.

``இராக்கில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், திருநம்பிளுக்கும் இராக்கில் இதுபோன்ற அனுபவங்கள் தொடரவே செய்கின்றன. `பெண் தன்மை' உள்ளதைப் போல இருப்பவர்கள் பெரும்பாலும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள்'' என்று ஸ்வீடனை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்றை நிறுவிய அமீர் அஷோவ்ர் கூறுகிறார். அந்த அமைப்பு இராக்கில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அனுபவங்கள் குறித்து அக்கறை செலுத்தி வருகிறது.

``இதுபற்றி ஆண்கள் பேசுவதை சமூக சூழ்நிலைகள் அனுமதிப்பது இல்லை என்பதால், இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக வெளியில் தெரிவிக்கப்படுவது இல்லை. மேலும் இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரை ஆண் ஓரின சேர்க்கையாளர் என்று கூறிவிடுவார்கள். அது அதிக வன்கொடுமை மற்றும் புறக்கணிப்புக்கு ஆளாக்கிவிடும்'' என்று அமீர் அஷோவ்ர் கூறுகிறார்.

சமியும் இதே கருத்தை கூறுகிறார். ஆண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்படுவது சட்டத்துக்கு எதிரானது என்றாலும், காவல் துறையும், சமூகமும், பாதிக்கப்பட்ட ஆண்கள் மீது சிறிதளவு தான் அனுதாபம் காட்டும் என்று அவர் கூறினார்.

``ஆண் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக காவல் துறையில் புகார் அளித்தால், அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கக்கூடும்'' என்கிறார் அவர்.

பிபிசி சர்வே

அல்ஜீரியா, எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லெபனான், மொராக்கோ, சூடான், துனிஷியா, ஏமன் மற்றும் பாலத்தீனிய பிராந்தியங்கள் என மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் உள்ள 10 நாடுகளில் 25000க்கும் அதிகமானவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் கேள்விகள் கேட்கப்பட்ட நபர்களின் எண்ணிக்க, நாடுகள் மற்றும் ஆழமான கேள்விகள் என அனைத்து வித்த்திலும் அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய சர்வே இது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவனமான அராப் பாரோமீட்டரால் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

13 வயதாக இருந்தபோது பள்ளிக்கூடத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் நினைவில் வைத்திருக்கிறார். பாதிப்புக்கு உள்ளானவராக இருந்தபோதிலும், அப்போது தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டதை மறக்கவில்லை. இதுபோல இப்போதும் நடக்கலாம் என்கிறார் அவர்.

``பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக காவல் துறையில் நான் புகார் செய்தால் அவர்கள் என்னை பாதிக்கப்பட்டவராகப் பார்க்காமல், சிறையில் போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சம்பவத்தில் எனக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கருதலாம். அது ஓரின சேர்க்கையாகப் பார்க்கப்படலாம் - அது சட்டவிரோதமானது'' என்று அவர் கூறினார்.

``எனக்கு ஆதரவாக சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்த வேண்டியவர்கள் எனக்கு ஆதரவாக இல்லை'' என்கிறார் அவர்.

``அனைத்து குடிமக்களுக்கும் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினால், அதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்'' என்று இராக் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். மனித உரிமைகள் பற்றி புதிய புரிதல்கள் ஏற்பட்டதை அடுத்து 2003ல் நாட்டில் புதிய அணுகுமுறை அமல் செய்யப்பட்டது. இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

சமிக்கு இப்போது வயது 21

இப்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறது. பாக்தாத் நகரில் வாழ்வதை அவர் விரும்புகிறார். பெரிய சர்வதேச நிறுவனம் ஒன்றில் சமிக்கு வேலை கிடைத்திருக்கிறது. அவருடைய கடந்த காலத்தை அறிந்த, அவருக்கு ஆதரவான நண்பர்கள் குழு இருக்கிறது. பிபிசிக்கு தன்னுடைய கதையை சொல்வதன் மூலம், இதுபற்றிய அனுபவங்களை சொல்ல மற்றவர்களை ஊக்குவிக்க முயல்வதாக அவர் கூறினார்.

ஆனால் கடந்த காலம் என்பது மூடி வைத்த புத்தகம் இல்லை. இப்போதும் யாரையேனும் காதலிக்க முடியும் என்று அவருக்கு தோன்றவில்லை,

தாம் மாறிவிட்ட நிலையில், இராக் சமூகம் மாறிவிட்ட நிலையில், அநேகமாக ஒருநாள் தனக்கான துணை கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். அவருக்கு 35 வயதாகும் போது அதுபற்றி மறுபடியும் அவர் நினைத்துப் பார்ப்பார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found